Wednesday, August 14, 2013

பிரிட்டிஷ் அரசாங்கம் இணைய தணிக்கை வடிகட்டிகளை அறிமுகப்படுத்துகிறது. By Mark Blackwood

பழமைவாத-தாராளவாத-ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் ஆணைக்கு உடன்பட்டு, மொத்த வீடுகளில் 95 சதவீதத்தினருக்கு சேவையை வழங்கும் பெரும் இணைய சேவை வழங்குபவர்கள் (ISPs) “குடும்பத்திற்கு நன்மை பயக்கும்” ஒரு இணைய அமைப்பு வடிகட்டியை ஆரம்பிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். சிறிய இணை சேவை வழங்குபவர்களும் இந்த வேண்டுதலை பின்பற்ற எதிர்பார்க்கப்படுகிறார்கள். சுய-கட்டுப்பாட்டு ஒப்பந்தம் இயங்கவில்லையெனில், அரசு சட்டவாக்கம் பற்றி கருத்திலெடுக்கும்.

ஜனநாயக உரிமைகளை தாக்குவதற்கும் பரவலான தணிக்கையை கொண்டு வருவதற்கும் கூறப்படும் ”சிறுவர் பாலியலில் ஆர்வமுள்ளவர்களின்” அச்சுறுத்தலை ஒரு சாக்கு போக்காக பயன்படுத்தி, பிரதம மந்திரி டேவிட் கேமரூன் சென்ற மாதம், “இன்று நாம் எடுக்கும் நடவடிக்கைகள் எமது சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாப்பது, அப்பாவிகளை பாதுகாப்பது, குழந்தைப் பருவத்தையே பாதுகாப்பது என்ற அடிப்படை கருத்தை நோக்கி செல்கின்றன. இவை இப்போது ஆபத்தில் இருப்பதுடன் குழந்தைகளை பாதுகாப்பதற்காக வைத்துக் கொள்வதற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்” என்று அறிவித்தார்.

2013இன் இறுதியில், புதிய அகன்ற வரிசை (broadband) கணக்கு தொடங்கும் எவரும் தானாகவே இயங்கும் வடிகட்டிகளைப் பெறுவார்கள், இங்கிலாந்து அரசு ஆட்சேபணைக்குரியதாக கருதும் அனைத்து வலைத் தள விஷயங்களையும் அது தடைசெய்யும். ”ஆட்சேபனைக்குரிய” விஷயங்களைப் பார்க்க விரும்பும் பயன்பாட்டாளர்கள் அதனைத் தேர்வு செய்ய வேண்டியிருக்கும். 2014 இன் இறுதியில் இந்த அமைப்பு இருக்கும் அனைத்து பயன்பாட்டாளர்களுக்கும் நீடிக்கப்படும்.

பொது உரிமைகள் அமைப்பான திறந்த உரிமைகள் குழு (Open Rights Group) வின்படி, இந்த வடிகட்டிகள் ஆபாசப்படங்களை தடை செய்வது மட்டுமல்லாமல், ”மேலும் 18 வயதுக்கு கீழுள்ளவர்களுக்கு பொருத்தமற்றதாக கருதப்படும் மது மற்றும் பிற போதை மருந்துகள் பற்றிய தகவல்கள், இணைய தள மன்றங்கள், YouTube மற்றும் முரண்பட்ட அரசியல் பார்வைகள் உள்ளிட்ட வலைத் தளங்களை அணுகுவதையும் கட்டுப்படுத்துகிறது.”

வயது வந்தோருக்கான வடிகட்டலுக்கும் அதே விஷயங்கள் பொருத்தப்படும் என்று இக்குழு குறிப்பிடுகிறது. தீவிரவாதம், ஆயுதங்கள், மந்தநிலை, வன்முறை, போர் மற்றும் தாலிபான் போன்ற பல தடைசெய்யப்பட்ட வார்த்தைகளை உள்ளடக்கிய எந்த வலைத் தளத்தை பார்வையிடுவதும் இங்கிலாந்து இணைய பயன்பாட்டாளர்களிடமிருந்து தடை செய்யப்படும். அப்படியென்றால், உலக சோசலிச வலைத் தளம் அனைத்து சாத்தியக் கூறுகளிலும் தணிக்கைத்துறையின் வடிகட்டல் பட்டியலில் உள்ளடங்கும்.

கேமரூனின் தொழில்நுட்ப ஆலோசகர்களுள் ஒருவராகவும் இருக்கும் விக்கி பீடியாவின் இணை நிறுவனர் ஜிம்மி வேல்ஸ், இந்த வடிகட்டியை “முற்றிலும் நகைப்பிற்கிடமான ஒரு கருத்து” என்று தெரிவித்ததுடன் இந்த கொள்கையை செயல்படுத்தத் தேவையான மென்பொருள் வேலை செய்யாது என்றும் வலியுறுத்தினார்.

வலைத் தள சிறுவர் ஆபாச வீடியோக்களுக்கு அடிமையாகியிருக்கும் ”சிறுவர் பாலியலில் ஆர்வமுள்ளவர்களின்” விஷயத்தைப் பொறுத்தவரையில், கேமரூனின் விதிகள், ‘ஆம், நான் ஆபாசப்படம் பார்க்க விரும்புகிறேன்” என்பதை குறிப்பிட வேண்டியிருக்கும் என்பதை ஒருவர் உணர்ந்துகொள்ளவேண்டும், என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வேல்ஸ் ஒரு விஷயத்தை விட்டு விட்டார். இந்த புதிய அமைப்பின் கீழ், வெறும் ஆபாசப் படம் என்பதில் மட்டுமல்லாமல், அனைத்து விஷயத்திலும் எது ஆட்சேபனைக்குரியது அல்லது எது ஆட்சேபனைக்குரியதல்ல என்பதை அரசே தீர்மானிக்கும். அது தனிநபரின் வடிகட்டல் தேர்வுகளின் விரிவான தகவல்களை சேகரிக்கும் தகமையை வைத்திருப்பதுடன், இங்கிலாந்தின் அனைத்து இணைய தள பயன்பாட்டாளர்களின் விவரக்குறிப்பிற்கான ஒரு பரந்த தரவுத் தளத்தையும் உருவாக்கும்.

பிபிசி வலைத் தளம் உள்ளிட்ட எண்ணற்ற இணைய தள மன்றங்கள், பிரிட்டிஷ் பொதுமக்களில் பலரின் பதில்களைத் தெரிவிக்கும் வாசகங்களுடன் நிரம்பி இருக்கிறது.

”இது ஆபாசப் படம் பற்றியதல்ல. அப்படி இருந்ததுமில்லை. அடுத்தது என்ன, வெளிநாட்டு செய்தி வலைத் தளங்களா? அரசியல் கலந்துரையாடல் மன்றங்களா? சமூக ஊடகமா? அவர்கள் இணைய தளத்தை தணிக்கை செய்ய ஆரம்பிக்கும் நாள் புரட்சி ஆரம்பிக்கும் நாளாக இருக்கும்” என்று ஒருவர் எழுதுகிறார்.

”இன்று ஆபாசப்படங்கள், அடுத்தது தற்போதைய அரசாங்கத்தை விமர்சிக்கும் கட்டுரைகளா. நமக்கு எப்படி தெரியும்?” என்று இன்னொருவர் குறிப்பிடுகிறார்.

இணைய தள தணிக்கையை பரவலாக்கும் இங்கிலாந்து அரசாங்கத்தின் முயற்சி வாடிக்கையாளரின் அகன்ற வரிசைக் கணக்கில் இருக்கும் ”தேர்வு செய்க” என்ற அழுத்தியுடன் (“opt-in” button) முடிந்துவிடுவதில்லை. அரசாங்கத்தின் வடிகட்டியை தவிர்க்க முயற்சிக்கும் வலைத் தள உரிமையாளர்கள் மற்றும் வலைப் பதிவு (bloggers) உரிமையாளர்கள் சுய-தணிக்கை அல்லது தடை செய்யப்படுவது என்ற இரு தேர்வுகளுள் ஒன்றை எதிர்கொள்வார்கள். வடிகட்டிக்கு அகப்படாது செல்ல முயல முயற்சிக்கும் எவரும் அடையாளம் காணப்பட்டு, பதிவு செய்யப்பட்டு தீவிர வலைத் தள கண்காணிப்பு மற்றும் வலைத் தள போக்குவரத்து பகுத்தாய்வுக்கு உட்படுத்தப்பட்டு குற்றம் சாட்டப்படும் சாத்தியக் கூறுகளை எதிர்கொள்வார்கள்.

பதிலி வழங்கிகள் (proxy servers) மற்றும் மெய்நிகர் தனியார் வலைத் தளங்கள் (virtual private networks -VPNs) போன்ற வலை தணிக்கையை தவிர்க்கமுயலும் கருவிகளை இயக்கமுயலுவதை தானாகவே தடை செய்வதற்காக அரசாங்கத்தின் firewall அமைக்கப்படுகிறது. இது அதிகளவிலான அடையாளம் தெரியாமலிருப்பதை இயலுமானதாக்கும் மற்றும் வலுவாக மறைகுறியமைக்கப்பட்ட Tor வலைத் தளத்துடன் இணைக்கின்ற இலவச மென்பொருளான Tor software bundle இனை அணுகுவது போன்றவற்றையும் தணிக்கை வடிகட்டிக்குள் உள்ளடக்கிவிடும் சாத்தியம் உள்ளது.

ஆச்சரியமின்றி, Tor சேவை பரந்தளவில் பயன்படுத்தப்படுவதுடன் சர்வாதிகார ஆட்சிகளால் நியமிக்கப்பட்ட வலைத் தள கண்காணிப்பு மற்றும் போக்குவரத்து பகுத்தாய்வுக்கு எதிராக சர்வதேச அளவில் எதிர்ப்பாளர்கள் மற்றும் அரசியல் கருத்து வேறுபாடு உள்ளவர்களை தற்காத்துக் கொள்வதற்கான ஒரு கருவியாக நம்பத்தகுந்த மதிப்பை பெறுகிறது. அமெரிக்க தகவல் வெளியிடுபவரான எட்வார்ட் ஸ்னோவ்டெனால் அமெரிக்க, பிரித்தானிய அரச கண்காணிப்பு திட்டங்கள் வெளிப்படுத்தப்பட்ட பின்னர் VPNs, Tor இன் பாவனைகள் மிகவும் அதிகரித்துவிட்டன.

பொதுவாக மற்றும் குறிப்பாக Tor இனாலும் மற்றும் VPN களால் பயன்படுத்தப்படும் உயர்மட்டத்திலான மறைகுறிகளின் காரணமாக, அரசாங்கத்தால் ஒரு நபரின் இணைய செயல்பாடுகள் கண்காணிக்கப்படுவது மிகவும் சிக்கலாகிறது. இந்த தொழில்நுட்பங்கள் ஒரு இணைய சேவை வழங்குபவர்கள் (ISP) ஒரு நபரின் வலைத் தள செயல்பாடுகள் குறித்த தகவல்கள் சேகரிப்பதிலிருந்து தடுத்து, அவற்றை ஒரு நபரின் பெயர், வயது, தொலைபேசி எண், மற்றும் ஏனையவற்றுடன் தொடர்புபடுத்தி பார்ப்பதை தடுக்கின்றது. அதனால்தான் அவை பிரபலமாகியுள்ளன.

ஏற்கனவே இணைய அணுகலை தடை செய்வதற்கான இதேபோன்ற ஒரு அமைப்பை இயக்கி வருகின்ற, இங்கிலாந்தின் கைப்பேசி குழுமங்களை பற்றி திறந்த உரிமைகள் குழுவால் (Open Rights Group- ORG) நடத்தப்பட்ட ஒரு புலனாய்வில் இந்த புதிய வடிகட்டியின் தாக்கங்களின் சில விஷயங்கள் வெளிப்படுத்தப்பட்டன. அதன் சொந்த வலைத் தளம் மட்டும் தடை செய்யப்படவில்லை, அரசியலில் இடது சார்பு கருத்துடையவை உள்ளிட்ட 60 வலைத் தளங்கள் அதே நேரத்தில் தடை செய்யப்பட்டிருப்பதாக அவர்களிடம் தெரிவித்திருந்தன என்று ஜனவரி-மார்ச் 2012இல் ORG தெரிவித்தது. ஒரு அட்டவணை வடிவத்தில் முழு பட்டியலையும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

எட்வார்ட் ஸ்நோவ்டெனால் அம்பலப்படுத்தப்பட்ட தகவல்களுடன் சேர்ந்து, கேமரூனின் சமீபத்திய நோக்கம் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு சர்வாதிகார ஆட்சியை செயல்படுத்துவதற்கான முன்னோக்கிய தயாரிப்புகளை செய்வது பற்றிய ஒரு தெளிவான அறிகுறியாகும். தொழிலாள வர்க்கம் தம்முன்னால் இருக்கும் இந்த பாரிய அபாயங்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். VPN கள் மற்றும் பதிலி வழங்கிகளை நம்பியிருப்பதைவிட, அனைத்துக்கும் மேலாக தேவைப்படுவது என்னவென்றால் ஒரு சோசலிச அரசியல் முன்னோக்கில் ஆயுதபாணியாக்கப்பட்ட ஒரு வெகுஜன புரட்சிகர கட்சியை அமைப்பதே.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com