Saturday, August 17, 2013

ராஜபக்‌ஷ பயங்கரவாதத்தை எதிர்த்து..... மங்கள

ராஜபக்‌ஷ பயங்கரவாதத்தை எதிர்த்து, இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக எதிர்வரும் 22 ஆம் திகதி கட்சி பேதங்கள் இன்றி ''சமத்துவ சக்தி'' ஒன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக சமத்துவ சக்தி செயல்திட்டக் குழுவின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் நன்மைகருதி புதியதொரு இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு, புதிய கருத்துப் பரிமாற்றல்களை ஆரம்பிப்பதற்கான காலம் தற்போது வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'ராஜபக்ஷவினரது பயங்கரவாதத்திற்கு கீழ்ப்படியாமல் சீருடையின் கௌரவத்தை பாதுகாத்து கொள்ளுமாறு இராணுவத்தினரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

வெலிவேரிய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதுடன் தாக்குதலுக்கு கட்டளையிட்டது யார்? என்பது கண்டுப்பிடிக்கப்பட வேண்டும். இந்த சம்பவம் தொடர்பில் நடத்தப்படும் விசாரணையானது திருடனின் தாயிடம் போய் மறைவிடத்தை கேட்பது போன்றது.

வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் முற்றாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. எனினும் நாடு முழுவதும் மற்றுமொரு பயங்கரவாதம் வியாப்பித்து வருகிறது. அதிகார போதை தலைக்கேறி போன நபர்களும், அவர்களின் உறவிகள், சகாக்கள் என்று சகலரும் அதிகாரத்தை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த ராஜபக்ஷ பயங்கரவாதம் முழுநாட்டுக்கும் வினையாக மாறியுள்ளது.

ஜனாதிபதியின் பிள்ளை விளையாட்டு மைதானத்தில் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் நடுவரை தாக்கும்போது, பிரதேச மட்டத்தில் இருந்து தலைவர்களின் பிள்ளைகளும் பாடசாலை அதிபர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

ஆசிரியர்களை மண்டியிட வைத்து, அரச ஊழியர்களை மரத்தில் கட்டி வைத்து மேற்கொள்ளப்படுமு் மற்றுமொரு ராஜபக்ஷ பயங்கரவாத்தை தினமும் பாரக்கவும் கேட்கவும் முடிகிறது.

தெரணியலை தோட்டத்தில் தமது வியாபாரிகளுக்கு தடையாக இருக்கும் தோட்ட அத்தியட்சகர்களை படுகொலை செய்வதும் ராஜபக்ஷ பயங்கரவாதிகள்தான் என்பதில் எந்த இரகசியமும் இல்லை.

அதேநேரம் ராஜபக்ஷ பயங்கரவாதிகளின் பாலியல் வல்லுறவுச் சம்பவங்களால் உலகில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படும் நாடுகளில் இலங்கை பிரதான நாடாக மாறியுள்ளது.

தினமும் 7 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதுடன் 03 சிறார்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதாக பொலிஸ் அறிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தங்காலையில் இடம்பெற்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியின் நாமல் ராஜபக்ஷவின் நீலப்படை அணியுடன் சம்பந்தப்பட்ட பிரதேச சபை தலைவர் இருந்தது போல், நாட்டில் ஏனைய பகுதிகளில் இடம்பெறும் பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவுகள் உட்பட 80 சதவீதமான குற்றச் செயல்களின் பின்னணியில் அதிகார போதை தலைக்கேறி போன ராஜபக்ஷ பயங்கரவாதிகளே இருக்கின்றனர் என்பது தெளிவானது.

தமது நெருக்கமான அரசியல்வாதிகளை பயன்படுத்தி மட்டுமல்லாது இராணுவம் மற்றும் பொலிஸாரை பயன்படுத்தி ராஜபக்ஷவினர் பயங்கரவாதத்தை முன்னெடுத்து வருகின்றனர். ராஜபக்ஷ பயங்கரவாதத்தை கொண்டு நடத்தும் பொறுப்பு இராணுவத்திற்கும் பொலிஸுக்கும் வழங்கப்பட்டுள்ளது' என்றார்.

1 comments :

கரன் ,  August 17, 2013 at 5:20 PM  

எட்டாப்பழம் புளிக்கும் என்று சொல்வார்கள். இதே ராஜபக்சக்களுடன் இருந்து வெளியேறியவர்தான் இந்த மங்கள. சரியான பங்கு கிடைக்கவில்லை என்பதுவே வெளியேற்றத்திற்கு காரணம். இவர் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் அனால் அதை நம்புவதற்கு மக்கள் தயார் இல்லை என இவருக்கும் தெரியும் ஆனால் சொல்கின்றார்..

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com