Thursday, August 8, 2013

டீ.சீ.டீ நச்சு இரசாயனம் கலக்கப்பட்டுள்ள அங்கர் மெலிபன், டயமன்ட் பால்மாக்களுக்கு தடை!

டீ.சீ.டீ டய்சைனைட் டயமைட் எனும் நச்சு இரசாயனம் கலக்கப்பட்டுள்ளது என சந்தேகிக்கப்படும் பால்மா வகை களை, விற்பனை நிலையங்களிலிருந்து உடனடியாக அகற்றுமாறு உரிய பால்மா நிறுவனங்களுக்கு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இதற்கமைய, மெலிபன், பொஃன்டெரா மற்றும் பி.எம். மொஹமட் அலி ஆகிய நிறுவனங்களுக்கு இந்த அறிவிப்பு கிடைக்கப்பெற்றுள்ளதுடன் அங்கர் 110 அங்கர் முழு ஆடைப் பால்மா, மெலிபன், டயமன்ட் பால்மா ஆகிய பால்மா வகைகளே இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் பால்மா மாதிரிகளை இரசாயன தொழில்நுட்ப நிறுவனத்தில் பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் மஹிபால ஹேரத் தீர்மானித்துள்ளார். மேற்படி பால்மாக்களின் மாதிரிகள் இரசாயன தொழில்நுட்ப நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் டீ.சீ.டீ நச்சு இரசாயனம் கலக்கப்பட்டுள்ளமை உறுதியானால் அவற்றை சந்தையிலிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்குமாறும் அந்நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் மாதிரிகளை கொழும்பு துறைமுகத்திலிருந்து பெற்று, அவற்றில் க்ளோஸ்ட்ரிடியம் பொட்டலினம் பக்றீரியா கலந்துள்ளதாக என்று பரிசோதித்து அந்த பக்றீரியா இல்லாத பால்மாக்களுக்கு மாத்திரமே இறக்குமதி அனுமதி வழங்கவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, புரதச் சத்து அதிகமாகக் காணப்படும் மேலதிக போசாக்கு உணவு வகைகளையும் சந்தையிலிருந்து அகற்றுவதற்கு விற்பனைக்கு தடை விதிக்கவும் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com