Thursday, August 29, 2013

நவிபிள்ளை நடவடிக்கையின் இறுதி அங்கம் இராணுவத்தினரை சிலுவையில் அறைவதாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வந்திருப்பது பழிவாங்கும் எண்ணத்துடனேயே என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இலங்கையில் கட்டாயம் மனித உரிமைகள் தொடர்பான அலுவலகம் ஒன்றை அமைக்கும்படியும், யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து முறைப்பாடு செய்யப்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கைக்கு வரும்படி நவநீதம்பிள்ளையை அழைத்தவர்கள் உண்மையை கண்டறிவதற்கே அழைத்ததாகக் கூறுகின்ற போதும் நவநீதம்பிள்ளை அவ்வாறு செயற்படுவாறா என்ற சந்தேகம் உள்ளதெனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நவநீதம்பிள்ளை இலங்கை வந்து செயற்படும் முறை குறித்து இதற்கு முன்னர் தான் கூறியவற்றை அமைச்சர் நினைவுபடுத்தியுள்ளார்.

நவநீதம்பிள்ளை தான் வெளியிடவுள்ள அறிக்கைக்கு ஆதாரம் திரட்டி வலு சேர்க்கவே இலங்கை வந்துள்ளதாகவும் இந்நாட்டு பிரஜைகளிடம் கேள்வி கேட்டு தனது அறிக்கைக்கு தேவையானவற்றை அவர் பெற்றுக் கொள்வார் என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினரை சிலுவையில் அறைவதே இந்த செயற்பாட்டின் நிறைவு அங்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நவிபிள்ளையின் வருகை மூலம் போலி ஆவணங்கள் கைமாற்றப்பட்டுள்ளதென தகவல்கள் வெளியாகியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

நாட்டில் நிலையான அரசாங்கம் ஒன்று காணப்படுவதாகவும் ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை பலவீனமான அரசாங்கமாக மாற்ற முயற்சிப்பதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com