Tuesday, July 23, 2013

எம்மை ஏமாற்றும் கல்வி

அமெரிக்காவில் ஒரு கல்வி நிறுவனம் நடத்திய சுவாரஷ்யமான பரிசோதனை இது. ஒரு கண்ணாடி மீன் தொட்டியின் நடுவே தெள்ள‌த் தெளிவான கண்ணாடித் தட்டினை வைத்து அந்தத் தொட்டியை இரண்டாகப் பிரித்தார்கள். ஒரு பக்கத்தில் இருக்கும் மீன் அந்தக் கண்ணாடியின் வழியே அடுத்த பக்கத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்க முடியும் ஆனால் போக முடியாது.

கண்ணாடித் தட்டின் ஒரு பக்கம் பரகூடா என்ற ஒரு மீனையும், மறு பக்கம் மல்லெட் என்ற ஒரு மீனையும் வைத்தார்கள். இரண்டும் வெவ்வேறு வகை மீன்கள். பரகூடா மிக எளிதாக மல்லெட் என்ற மீனைக் கொன்று உண்ணக் கூடியது.

தொட்டியின் அடுத்த பக்கத்தில் மல்லெட்டைப் பார்த்தவுடன் அதை நோக்கி பரகூடா வேகமாக ஓடியது. இடையில் இருந்த கண்ணாடி தெரியவில்லை. ஓடிய வேகத்தில் பரகூடா கண்ணாடியில் இடித்தது. வலியால் துடித்து பின் திரும்பி வந்து மீண்டும் தன் உணவான மல்லெட்டை நோக்கி ஓடியது. மீண்டும் இடிபட்டது.

மீண்டும் மீண்டும் இந்த முயற்சி தொடர, முகத்தில் எல்லா இடங்களிலும் காயங்கள். வலியை உணர்ந்த பரகூடா நல்ல பாடத்தையும் கற்றுக் கொண்டது. அதற்குப் பின் அடுத்த பக்கம் போக முயற்சி செய்யவில்லை. இடையில் இருந்த கண்ணாடித் தட்டை எடுத்த பின்னும், அந்தப் பக்கம் போகாமல், அங்கேயே பட்டினியாக இருந்து செத்துப் போனது.

மாணவர்களும் இப்படித்தான். அவர்களுக்கும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அடுத்த வீட்டுக்காரர்கள், நண்பர்கள் என பல கண்ணாடித்தட்டுகள். உனக்கு எது முடியும், எது முடியாது என அவர்களே தீர்மானித்து அவர்களின் எண்ணத்தை மாணவரிடம் திணிக்கிறார்கள். அவனுக்குக் கணக்கு சுட்டுப் போட்டாலும் வராது என்பார் ஒருவர். அவனுக்கு சயன்சும் ஏலாது, ஆங்கிலமும் ஏலாது. எப்படி மருத்துவம் படிக்க முடியும்? சும்மா ஆர்ட்ஸில சேரட்டும் என்று இன்னொருவர். என்ஜினியர் டொக்டர் ஆகாட்டில் வேலையில்லை என்று வேறொருவர்.

அவன் அல்லது அவளுக்கு தங்கள் பெயரைத் தேர்ந்தெடுக்கத்தான் வாய்ப்பில்லைளூ அவர்கள் பெயருக்குப் பின்னால் போடும் பட்டங்களையாவது தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை அவர்களிடமே கொடுத்தால் என்ன? தம்மால் முடிந்த – விரும்பிய தொழிற்கல்வியைப் படிக்க அவர்களைப் போகவிட்டால் என்ன? பல மாணவர்களுக்கு அந்த வயதில் எதில் விருப்பம் அல்லது திறமை என அறிவது கடினம்தான். நமது நாட்டின் கல்வி முறையும், பெற்றோர்களின் உலக அறிவுக் குறைவும் அதற்குக் காரணம் என்பதே உண்மை. பெற்றோரும் இந்த சமூகமும் அந்தக் காலத்திலிருந்து ஓரிரண்டு படிப்புகளையே படிப்பென்று தெரிந்து வைத்திருக்கிறது.

நமது கல்விமுறையில், மாணவன் தானாகவே தனக்குத் தேவையான கல்வியைத் தேர்ந்துகொள்ளவும், எதிர்காலத்தில் என்ன தொழில் செய்யப் போகிறோம் என்பதைத் திட்டமிட்டுப் படிக்கவும் வழியில்லை. மாணவனுக்குப் பிடித்த பாடமாக இருந்தாலும், அவனுக்கு அதில் நல்ல திறமை இருந்தாலும், அதை அழித்து விட்டு, எது படித்தால் வேலையும் மதிப்பும் என்றே திணிப்புகள் நடக்கின்றன. எல்லா மாணவர்க்கும் ஒரே மாதிரியிலான பரீட்சைக்கு வேண்டிய தகவல்களை உள்ளே ஏற்றும் இன்றைய படிப்பு முறை மாற்றம் பெறவேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com