இளவரசனின் மரணத்தில் மறைந்துள்ள சந்தேகங்கள்
தர்மபுரி இளவரசன் ரயில்பாதை அருகே, தலையில் பலத்த அடிபட்டு மூளை சிதறி உயிரிழந்த அவரின் மரணம் அனைவருக்கும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள துடன், இளவரசனின் குடும்பத்தினரும் இது தற்கொலை அல்ல கொலை என்று கூறி மறு பிரேதப் பரிசோதனை செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இளவரசனின் மரணம் குறித்து பல்வேறு சமூக அமைப்பு களும் பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளனர். இன்றைய நிலவரப்படி, இளவரசனின் உடலை மறு பிரேதப் பரிசோனை செய்வது குறித்து, மருத்துவர் ஆய்வு செய்த பிறகு முடிவு செய்யப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
இளவரசனின் உயிரற்ற உடல் இருந்த இடத்தை தர்மபுரி எக்ஸ்பிரஸ் ரயில் 11.30 மணிக்கு கடந்து சென்றுள்ளது. பிரேத பரிசோதனையின் அறிக்கைப்படி 12 - 1 மணிக்குள் தான் உயிர் பிரிந்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. அந்த வழியாகச் செல்லும் அடுத்த ரயில் வண்டியான குர்லா எக்ஸ்பிரஸ் 1.30 மணிக்கு சென்றுள்ளது.
குர்லா ரயில்வண்டியின் ஓட்டுனர் விசாரணையில் கூறும்போது, தான் ஒரு உயிரற்ற சடலத்தை பார்த்ததாக கூறியுள்ளார்.
முதல் வண்டி - 11.30
மணி உயிர் பிரிந்த நேரம் - 12 - 1 மணிக்குள் (பிரேதப் பரிசோதனை அறிக்கை)
அடுத்த வண்டி - 1.30மணி.
இந்தத் தகவலை மரணமடைந்த இளவரசனின் உறவினர் ஒருவர் தெரிவித் துள்ளார்.
இளவரசனின் மரணம் குறித்து அரசும் உளவுத்துறையும் காவல்துறை மூலமாக முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட்டு மக்களை குழப்பி வருவதாக பல்வேறு அமைப்பிநரும் தெரிவிக்கின்றனர். இளவரசனின் சட்டை பையில் கடிதம் இருந்ததாகவும் அதை ஒருவர் எடுத்து சென்றுவிட்டதாகவும் பின்னர் விசாரித்து அதை கைப்பற்றியதாகவும் கூறிய காவல்துறையினர் அந்த நபரை ஏன் கைது செய்யவில்லை?.
இளவரசன் எழுதியதாக கூறப்படும் கடிதம் குறித்து பல்வேறு அமைப்புகளின் சந்தேகக் கேள்விகள் வருமாறு,
இறந்த இளவரசனின் பையில் கடிதம் இருந்தது அந்த நபருக்கு எப்படி தெரியும்?
அவர் ஏன் அதை எடுக்க வேண்டும்?
அதை ஏன் அவர் மறைக்க வேண்டும்?
மறைத்ததை யார் மூலம் கண்டறிந்தனர்?
அப்படியானால் கடிதத்தை எடுத்தவருக்கும், மறைத்த செய்தியை தெரிந்து வைத்திருந்தவருக்கும் என்ன தொடர்பு?
இளவரசனின் உயிரற்ற உடலை முதலில் பார்த்தவருக்கு கடிதம் பற்றி தெரிந்து இருந்ததா?
தெரிந்து இருந்தால் ஏன் அதை அவர் அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை?
இளவரசனின் உயிரற்ற உடலை முதலில் பார்த்தவர் கடிதம் பற்றி அறியாமல் இருந்திருந்தால் அவர் அதிகாரியை சந்திக்க சென்ற போது கடிதத்தை அந்த நபர் எடுத்து சென்றாரா?
அப்படியானால் அந்த நபர் இளவரசனின் உடலருகே தடயத்தை உருவாக்கவோ அல்லது அழிக்கவோ முயற்சித்துள்ளார்?
கடிதத்தை எடுத்தபோது 'பார்த்தவர்' உடன் இருந்தாரா?
சம்பவம் நடந்த இடத்தில் அவர்களுக்கு என்ன வேலை?
அப்படியானால் அவர்கள் சம்பவம் நடந்தபோது அங்கு இருந்திருக்க வேண்டும்?
முதலில் உடலை பார்த்த'கேங் மேன்' அவர்கள் அங்கு இருந்ததை பார்த்தாரா?
தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் அதிகாரி எடுத்த நடவடிக்கை என்ன? எவ்வளவு நேரத்தில் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்றனர்? யார் யாருடன் சென்றார்? காவல்துறை இருந்ததா?
கடிதம் இருந்திருந்தால் இதுவரை ஏன் அதை வெளியிடவில்லை?
கடிதம் சட்டை பையில் இருந்ததாக சொன்ன காவல்துறையினர் இப்போது யாரோ சொல்லி யாரிடமிருந்தோ கைபற்றியதாக முரணாக கூற வேண்டிய காரணம் என்ன? என்பது போனற பல கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த கேள்விகளுக்குப் பின்னால் உள்ள உண்மையை அரசோ, காவல்துறையோ வெளிக்கொண்டு வருமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் பிரேதப் பரிசோதனை செய்யும் நேரமும் முன்னுக்குப்பின் முரணாக கூறப்பட்டது. பிறகு திடீரென யாருக்கும் தெரிவிக்காமல் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேதப் பரிசோதனை செய்யும் முன் உறவினர்களிடம் கையொப்பம் வாங்க வேண்டும். யாரிடம் கையொப்பம் வாங்கி பிரேதப் பரிசோதனை நடத்தினார்கள் எனபது தெரியவில்லை. இளவரசனின் உறவினர்கள் யாரிடமும் கையொப்பம் பெறப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
இளவரசனின் உயிரற்ற உடல் கிடந்த இடத்தில் ஏன் இதுவரையில் தடையவியல் துறை எந்தவித ஆய்வையும் மேற்கொள்ளவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.
தற்போது இளவரசனின் உடலை மறுபிரேதப் பரிசோதனை செய்வதற்காக ஏன் அரசும், நீதித்துறையும் தாமதம் செய்து வருகின்றன. பல வழக்குகளில் இறந்த உடலை அடக்கம் செய்த பிறகும் கூட சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்படியிருக்க இளவரசன் மரணத்தில் எதை மறைப்பதற்காக இவ்வாறு நடைமுறைக்கு முரணாக அனைத்தும் நடந்து வருகிறது. இந்தக் கேள்விக்கிப் பின்னால் உள்ள உண்மை தான் என்ன?
0 comments :
Post a Comment