Sunday, July 21, 2013

அருகி வரும் ஒழுக்க விழுமியங்கள்! பெற்றோர் தம் கடமையிலிருந்து நீங்கினால் அதோகதிதான்! - சுஐப் எம். காசிம்

நாற்பெரும் சமயங்களைப் பின்பற்றி வாழும் சமூகம் நாம். பெளத்தம், இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் எனும் அரிய சமயங்கள் நமது வாழ்வைப் புனிதப்படுத்துகின்றன. குற்றம் களைந்து குணநலன் பேண வழிகாட்டுகின்றன. ஒழுக்கக்கட்டுப்பாட்டை வலியுறுத்துகின்றன. ‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ என்பது வள்ளுவர் வாக்கு.

ஒழுக்கம் உயர்வு தருவதால் அதை உயிராக மதித்து வாழுங்கள் என்பது அவரது போதனை. நமது இன்றைய சமூகத்திலே ஒழுக்கம் பேணப்படுகிறதா என்பது விடை காணப்பட வேண்டிய விஷயம். அன்றாடம் நிகழும் ஒழுக்கச் சீர்கேடுகள் குற்றச் செயல்களை ஊடகங்கள் தருகின்றன. எனினும் குற்றங்கள் குறைந்ததாக இல்லை.

இறையச்சமும் சன்மார்க்க நெறிமுறைகளும் அற்ற வாழ்க்கை முறை சமூகத்தை ஆட்டிப்படைக்கிறது. 2012 ஆம் ஆண்டில் பொலிஸ் திணைக்களம் பதிவு செய்த 1632 வழக்குகளில் பெரும்பாலானவை 18 வயதுக்குட்பட்ட இளைஞர் யுவதிகளின் குற்றங்கள் சம்பந்தமானவை. மாணவப் பருவத்தில் ஏற்படும் காதல் தொடர்பு வளரிளம் பருவ இளைஞர் யுவதிகளை களங்கப்படுத்துகின்றது. ஒழுக்கச் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.

அந்த மனிதர் ஒரு வியாபாரி. உழைப்பில் முழுநேரமும் செலவழிப்பவர். மனைவியும் ஒரே மகளும் அவரது குடும்பம். 14 வயது மகள் பள்ளி செல்ப வர். வீட்டு வேலை அனைத்துக்கும் ஒரு வேலைக்காரி. தொலைக்காட்சி நாட கங்கள் அம்மாவின் பொழுதுபோக்கு. பாடசாலை சென்று வந்து முழுநேரமும் செல்போனில் கதைப்பது மகளது பொழுது போக்கு.

பிள்ளையின் படிப்பு, நடத்தைப் போக்கு, பாதுகாப்பு பற்றி அம்மாவுக்கு எந்தக்கவலையும் இல்லை, கரிசனையும் இல்லை. செல்போன் மூலம் காதல் பிறந்தது. சிறிது காலத்தில் மகளின் உடம்பில் மாற்றம் தெரிந்தது. அயலவர்கள் அவதானித்தனர். தாய்க்குத் தெரிவித்தனர். தாயின் விழி பிதுங்கியது. தந்தை அறிந்து சீறி விழுந்தார். சம்பந்தப்பட்ட பையன் தலைமறைவு. சகல சம்பத்தும் உள்ள வீடு சோகமயமானது. ஒரு கன்னிப் பெண்ணின் நடத்தைப் போக்கை உன்னிப்பாக கவனித்து அவளது களங்கமற்ற நல்வாழ்வையும் ஒழுக்க சீலத்தையும் கட்டிக்காக்க வேண்டியவள் அன்னை. தன் கடமையில் இருந்து தவறிவிட்டாள். உழைப்பே உயிர் எனக் கருதிய தந்தை தன் உயிருக்கு உயிரான ஒரே மகளின் கற்பு நெறியைப் பாதுகாக்கும் கட்டாயக் கடமையில் இருந்து தவறி விட்டார். பள்ளிப்படிப்பிலே அதி கூடிய புள்ளி பெற்றுப் பாராட்டுப் பெற்ற இளம் பெண் தனது தகாத போக்கால் மற்றவரின் எள்ளி நகையாடலுக்கும் ஏளனக் கதைகளுக்கும் ஆளாகிவிட்டாள்.

கற்பிழந்த காரணத்தால் பொற்பிழந்து பொலிவிழந்து சோகமே உருவானாள். இத்தகைய கொடூர சம்பவங்கள் எல்லா இடங்களிலும் நிகழ்ந்த போதும் வெளிச்சத்துக்கு வருபவை சிலவே. அநேகமாக இரத்த உறவினர், அயல வர், காதலர்கள், நம்பிக்கைக்குரிய பெரியவர்கள் எனக் கருதப்படுபவர்களா லேயே பெண்கள் அசிங்கப்படுகின்றனர்.

குடும்ப மரியாதை கருதிச் சில சம்பவங்கள் மூடி மறைக்கப்படுகின்றன. பெற்றார் வெளிநாடு செல்லும் குடும் பங்களில் உறவினர், பாட்டிமாரின் பராமரிப்பில் உள்ள இளம்பிள்ளைகள் நாசகாரர்களால் வஞ்சிக்கப்படுகின்றனர். வறுமை காரணமாக வெளியூர் சென்று தொழில்புரிவோரின் பிள்ளைகள் ஒழுங்கான பராமரிப்பும் பாதுகாப்பும் இன்றிக் களங்கப்படுத்தப் படுகின்றனர்.

பிள்ளைகளைப் பெற்றார் இதயபூர்வமாக நேசிக்க வேண்டும். நமது பெற்றார் உண்மையில் நம்மை நேசி க்கிறார்கள். நமது கல்வி முன்னேற்றம், வாழ்வு நல னில் அக்கறை கொள்கிறார் கள்.

அதேவேளை நமது தகாதபோக்கை அனுமதிக்க மாட்டார்கள். தண்டிப்பார்கள் என்ற பயமும் பிள்ளைகளுக்கும் இருக்க வேண்டும். அத்தகைய பிள்ளைகள் பெற்றாரின் கட்டுப்பாட்டுக்கு அடங்கி வாழ்வர். வாழ மறுத்தால் திருத்தும் கடமை பெற்றோருக்குண்டு. வீட்டிலும் பாடசாலைகளிலும் வெளிச்செல்லும் இடங்களிலும் பெற்றாரின் கண்டிப்பான, உன்னிப்பான பாது காப்பு பிள்ளைகளுக்குத் தேவை.

பெண்பிள்ளைகளின் பாதுகாப்பிலும் ஒழுக்கக் கட்டுப்பாட்டிலும் பெற்றார் கவனம் செலுத்துவது போலவே இளைஞர்களும் ஒழுக்கம் பேணி வாழவேண்டும். பெற்றோர் அதற்கான பயிற்சிய ளிக்க வேண்டும். தமது பிள்ளைகள் எங்கே போகிறார்கள்? அவர்களது நண்பர்கள் பண்பு டையவர்களா? அல்லது தீய நடத்தையுடையவர்களா என்பதைக் கண்காணிக்க வேண்டியது பெற்றாரின் கடமை.

தீய எண்ணமுள்ளவர்கள் குழுவாகச் சேர்ந்து ஓர் இளம் பெண்மீது பாலியல் துரோகம் செய்து விட்டுத் தப்பித்துக் கொள்வதற்காகப் பாதிக்கப்பட்டவளைக் கொலையும் செய்கிறார்கள். இத்தகைய மிருகக் குணங்களில் இருந்து இளைஞரை மீட்க வேண்டியது பெற்றார் கடமை. சன்மார்க்கப் போதனை, இறைவணக்கத்தில் ஈடுபாடு போன்ற பயிற்சிகளையளிப்பதும் இளைஞரைத் திருத்தப் பயன்படும் என நம்பலாம்.

14 வயது வரை பிள்ளைகள் கட்டாயமாகக் கல்வி கற்க வேண்டிய காலம். பெற்றார் பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துகிறார்களா அல்லது வேறு பராக்கில் ஈடுபடுகிறார் களா என்பதைக் கவனித்துக் கல்வி முன்னேற்றம், ஒழுக்கக் கட்டுப்பாடு, பண்பாட்டு வளர்ச்சி பெற ஆக்கமும் ஊக்கமும் அளிப்பது பெற்றார் கடமை.

அதைவிடுத்து

10,12 வயதிலேயே செல்போன் பாவனையை அனுமதிப்பது பிள்ளைகள் இலகுவாக கெட்டுப் போகத் தாய் தந்தையரே வழிவகுப்பதாக அமையும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக நேர ஈடுபாடு, முழுநேர, செல்போன் பாவனை, கணனி மற்றும் இன்ரநெற் போன்ற நவீன தொழில்நுட்ப சாதனங்களில் முழுநேர ஈடுபாடு என்பது இளைஞர் யுவதிகள் வழிகெட்டுப்போக காரணமாக அமைகின்றது.

பொலிஸ் திணைக்களத்தின் கூற்றுப்படி சிறுவர், பெண்கள் மீதான துஷ்பிரயோகக் கொடுமைகள் தினமும் 15 சம்பவங்களுக்குக் குறையாமல் பதிவாகின்றன. இவற்றுள் 70-75 சத வீதமான குற்றச் செயல்கள் கற்பழிப்புச் சம்பந்தப்பட்டவை. 16 வயதுக்குட்பட்ட ஓர் இளம் யுவதி அவளது சம்மதத்துடன் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட் டாலும் சட்டப்படி ஒரு குற்றச் செயலாகக் கருதப்படும்.

பெருகிவரும் துஷ்பிரயோகக் குற்றங்களை ஒழிக்கப் பொலிஸ் திணைக்களம் கரிசனையுடன் கடமையாற்றி வருகிறது. நாடெங்கும் 432 பொலிஸ் நிலையங்கள் உள்ளன. சகல பொலிஸ் நிலையங்களிலும் சிறுவர் பெண்கள் பாதுகாப்புப் பிரிவு ஒன்று செயற்படுகிறது. பெண் பொலிஸார் இப்பிரிவில் கடமை செய்கின்றனர்.

எனவே பாதிக்கப்படும் சிறுவர் சிறுமியர் பெண்கள் 1929 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அல்லது நேரில் வந்து பயமில்லாமல் முறையீட்டைப் பதிவு செய்ய முடியும். நடந்த விஷயங்களை மறைக்காமல் வெளிப்படையாகவும் உண்மையாகவும் முறையீடு செய்வது குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த உதவியாக அமையும் என்கிறார் பொலிஸ் திணைக்கள அதிகாரி.

சமூகத்திலே பெருகிவரும் ஒழுக்கச்சீர்கேட்டுக் குற்றங்களை ஒழித்துச் சிறுவர் சிறுமியர் பெண்களைப் பாதுகாக்கத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அதிகாரசபையின் தலைவி அனோமோ திசாநாயக்க பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார். சிறுவர் சிறு மியர் பெண்கள் மீதான துஷ்பிரயோகக் குற்றங்கள் வெளிப்படையாகவே அதிகரித்து வருகின்றன. எனினும் பாதிக்கப்பட்டவர்களை இயன்றவரை பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் எமக்குள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 1929 எனும் இலக்கத்தில் எமக்கு முறை யிடலாம். நேரிலும் வரலாம். நாங்கள் உரிய நடவடிக்கை எடுப்போம்.

பிரச்சினையைக் கட்டுப்படுத்த பொதுமக்களது விழிப்புணர்வும் ஒத்துழைப்பும் கட்டாய தேவையாக உள்ளது. பல சம்பவங்கள் முறையிடப்பட்டாலும் கற்பழிப்பே அநேகமான குற்றச் செயலாகும்.

கற்பழிப்பு என்று சொல்லவே வாய் கூசுகிறது. காதுகள் கேட்க மறுக்கின்றன. அத்தனை கொடுமையானது கற்பழிப்புக் குற்றம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மன அமைதியும் துணிவும் மறுவாழ்வுக்கான மனோ நிலையும் தேவை. அதற்காக நாடெங்கும் 360 சிறுவர் பாதுகாப்பு உளவளச் சிகிச்சை நிலையங்களை அமைத்துள்ளோம்.

இங்கே கடமை புரியும் உளவளவாளர்களும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளும் உளவளச்சிகிச்சை அளிப்பார்கள். இது தவிர பிரதேசச் செயலாளர் பிரிவுகள் தோறும் விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை
நடாத்தி வருகிறோம். பாதிக்கப்பட்டவர்கள் மீது அனுதாபம் கொண்டு நாம் நடவடிக்கை எடுத்தபோதும் அரசியல், பணம் போன்ற செல்வாக்குகள் ஊடுருவிச் சாட்சிகளை வலுவற்றதாக்கி விடுகின்றது. எனினும் பாதிக்கப்பட்டவர்களுக்காகவே நாம் பணிபுரிந்து வருகின்றோம்.

பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பாகச் சிறுவர் பாதுகாப்பு சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் மனித விழுமியங்களை மதிக்காத கொடுமையான மகளிர் பாலியல் துஷ்பிரயோகம் எவ்வகையிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 1938 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டால் நாம் நடவடிக்கை எடுப்போம். குற்றவாளிகள் கட்டாயமாகத் தண்டிக்கப்பட வேண்டும். நீதிமன்ற விசாரணையும் தீர்ப்பும் துரிதமாக நடைபெற வேண்டும். 10 வயதில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வழக்கை 12 ஆண்டுகளில் விசாரித்துத் தீர்ப்பளிக்கும்போது அவளது வயது 22 ஆகிறது. இடைப்பட்ட அவளது பொன்னான இளமைக்காலம் பயனற்றுப் போகின்றது. விசாரணையும் தீர்ப்பும் தாமதமாகும்போது வழக்காளி வழக்கை வாபஸ்பெற நேர்ந்தால் குற்றவாளி தப்பித்துக்கொள்ள வாய்ப்புண்டு. அத்துடன் குற்றமிழைத்த காலத்துக்கும் தீர்ப்புக்கும் இடைப்பட்ட குறைந்தது 3 வருடங்களாவது விசாரித்துத் தீர்ப்பு வழங்கச் சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டும் என்றார்.

பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்கள் உடல், உள, உணர்வு ரீதியான பாதிப்பையும் சுயகெளரவத்துக்கு இழுக்கையும் ஏற்படுத்துகின்றன.

பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியர் பெண்களின் வாழ்வை மலரச் செய்ய அரச திணைக்களங்களுடன் சமயப் பெரியவர்களும் அரசியல்வாதிகளும் சமூகத் தலைவர்களும் சிவில் சமூகமும் இணைந்து கரிசனையுடன் ஒத்துழைப்பு நல்கிச் சமூகச் சீர்கேட்டை ஒழிக்க முடியும்.

(நன்றி: தினகரன் வாரமஞ்சரி)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com