இலங்கையை தோற்கடித்து கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா!
மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கையை தோற்கடித்து கிண்ணத்தை இந்தியா கைப்பற்றியது இதன்மூலம் தாமே உலக சாம்பியன் என்பதை இந்தியா மீளவும் நிரூபித்துள்ளது.
குயின்ஸ்பார்க் ஓவல் மைதானத்தில் இலங்கை அணியும் இந்திய அணியும் பலப்பரீட்சையில் ஈடுபட்டன. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 201 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. குமார் சங்ககார 71 ஓட்டங்களையும், லஹிரு திரிமான்ன 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் ரவீந்த்ர ஜடேஜா 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இலங்கை அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 171 ஓட்டங்களை பெற்று பலமான நிலையிலிருந்தது. எனினும் மீதமுள்ள 7 விக்கெட்டுக்களும் 40 ஓட்டங்களுக்குள் இழக்கப்பட்டன.
இதேவேளை 202 ஓட்டங்களை வெற்றியிலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.4 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து இலக்கையடைந்தது. ஒரு கட்டத்தில் 182 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலையிலிருந்த இந்திய அணியை அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனி நிதானமான துடுப்பாட்டத்தின் மூலம் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.
45 ஓட்டங்களை பெற்ற அவர் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவானார். பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இதேவேளை தொடரின் சிறப்பாட்டக்காரராக இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் தெரிவு செய்யப்பட்டார்.
0 comments :
Post a Comment