Saturday, July 20, 2013

விக்னேஸ்வரனை நியமித்ததை முன்னாள் புலிகள் விரும்பவில்லை என அமைச்சர் வாசு சொல்கிறார்!

விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக நியமித்தமையை புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் மற்றும் முன்னாள் புலிகள் ஆகியோர் விரும்பவில்லை. அவர்கள் இத்தெரிவை எதிர்க்கின்றனர் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

எது எப்படியாயினும் எமது கட்சி அரசாங்கத்துடன் இணைந்து மாகாண சபை தேர்தலில் போட்டியிடுகின்றது. வடக்கில் வெற்றி பெறும் திட்டங்களுடனேயே போட்டியிடுகின்றோம். அரசாங்கத்தின் அபிவிருத்திகள் வடக்கில் எமக்கு வெற்றி கிடைத்தால் துரிதப்படுத்தப்படும் எனக்குறிப்பிட்ட அவர் மாகாண சபையை எதிர்ப்பவர்களுக்கு நடைபெறவுள்ள தேர்தல்களில் மக்கள் சிறந்த பாடம் புகட்டுவார்கள். மக்கள் இத் தேர்தலில் வழங்கும் பல இலட்சம் வாக்குகள் மாகாண சபையை எதிர்ப்பவர்களுக்கு சிறந்த பதிலாகும்.

மாகாண சபையை எதிர்ப்பவர்கள் தமது எதிர்ப்பு உண்மையானால் இம்முறை மாகாண சபை தேர்தல் பிரசாரங்களின் போது மக்கள் முன் சென்று தேர்தலை பகிஷ்கரிக்குமாறும் வாக்களிக்க வேண்டாமென்றும் பிரசாரம் செய்ய வேண்டும். எதிர்ப்பவர்களுக்கு நான் சவால் விடுக்கின்றேன். முடிந்தால் எதிர்த்து பிரசாரம் செய்யுங்கள். ஆனால், என்ன வேடிக்கையென்றால் மாகாண சபை முறைமையை எதிர்ப்பவர்கள். தேர்தலில் போட்டியிடுவதற்காக தமது வேட்பாளர்களை அதிகளவு போட்டியிடச் செய்வதற்கு முட்டி மோதிக்கொள்கின்றனர்.

மாகாண சபை முறைமையை நீதிமன்றத்தால் ஒழிக்க முடியாது. இது தொடர்பில் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை மட்டும் நாடாளுமன்றத்திற்கு வழங்க முடியும். இறுதி முடிவை நாடாளுமன்றமே எடுக்க வேண்டும். ஏனென்றால் நாடாளுமன்றமே இறையாண்மை கொண்டது. அத்தோடு 13ஆவது திருத்தம் இலங்கை அரசியலமைப்பில் சட்டமாக உள்ளது என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com