ஆச்சரியம் நிறைந்த இலங்கை
இலங்கையை சிங்கப்பூராக மாற்றும் கனவை ஜே.ஆர்.ஜெயவர்த்தன 1970களில் பிரபலமாக்கினார். பதவிக்கு வந்த பிறகு அவருக்கு, போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்ற வீம்பு முக்கியமாகி சாண் ஏற நினைத்து முழம் சறுக்கிக் கொண்ட அவலகதி நேர்ந்தது. நாட்டின் பொருளாதாரத்தை யுத்தக்கறையான் அரிப்பதற்கான ஆரம்ப வசதிகளைச் செய்துகொடுத்தவராக அவர் அமைந்தார்.
யுத்தத்தை முடித்து வைத்த இன்றைய அரசும், இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக ஆக்குவோம் என்று சொல்லும்போது, பழையபடி சிங்கப்பூர்க் கனவே மனதுக்குள் இருப்பதை உணர முடிகிறது. இந்தியாவில் அண்ணா ஹசாரேயின் ஊழலுக்கெதிரான போராட்டத்தின் போதும், ஊழலை ஒழித்துவிட்டால் நாட்டை முன்னேற்றி விடலாம் என்னும்போது சிங்கப்பூர் உதாரணமே அங்கும் சொல்லப்பட்டது.
சிங்கப்பூர் பலருக்கும் ஒரு இலட்சிய சமூகமாக இன்று தோன்றுவதற்குக் காரணங்கள் உண்டு. ஊழலைக் கட்டுப்படுத்தியதன் காரணமாக அங்கு மக்கள் வாழ்வில் பெரும் வளம் ஏற்பட்டிருக்கிறது என்பது கண்கூடான செய்தியாக இருக்கிறது. அண்ணா ஹசாரேயின் போராட்டத்தின் போது இப்படி ஒரு குறுஞ்செய்தி சுற்றுக்கு விடப்பட்டது.
1982ஆம் ஆண்டு சிங்கப்பூரில் லோக்பால் மசோதா சட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரே நாளில் 142 ஊழல் மந்திரிகளும் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். இன்று சிங்கப்பூரில் நூற்றில் ஒருவரே ஏழை. அரசுக்கு யாரும் வரி செலுத்துவதில்லை. அங்கு 92 வீத கல்வியறிவு நிலவுகிறது. சிறப்பான மருத்துவ வசதிகளும் மிகக் குறைந்த விலைவாசியும் உள்ள சிங்கப்பூரில் கறுப்புப் பணத்தின் அளவு பத்து சதவிகிதம் மட்டுமே. அங்கு நூற்றில் ஒருவரே வேலையில்லாமல் இருக்கிறார்.
சிங்கப்பூர் அரசு ஊழலுக்கு எதிரான அமைப்பை நடைமுறைப்படுத்துவதில் எப்படி வெற்றி பெற்றது என்பதே கவனிக்க வேண்டியதாகிறது. சுதந்திரத்துக்கு முந்தைய, பிரிட்டிஷ் காலனியாக இருந்த சிங்கப்பூரில் ஊழல் மலிந்து இருந்ததற்குக் காரணிகளாக இருந்தவை குறைந்த ஊதியம், ஊழலுக்கு தகுந்த தண்டனையின்மை என்றார் நவீன சிங்கப்பூரின் சிற்பியாகச் சொல்லப்படும் லீ க்வான் யூ. 1959ல் சிங்கப்பூர் இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றது.
ஒரு தூய நிர்வாகத்தை அளிப்போம் என்று உறுதியளிக்கும் வகையில், பதவிப் பிரமாணத்தின்போது ஆளும் பிஏபி கட்சியின் உறுப்பினர்கள் முழுக்க முழுக்க வெண்ணிற ஆடைகள் அணிந்து வந்தனர். அரசுக்கு கிடைத்த ஒவ்வொரு டொலர் வருமானமும் ஒழுங்காக அரசுக் கணக்கில் சேர்க்கப்பட்டு, வழியில் மடைமாற்றப்படாது கடைநிலைக் குடிமகனுக்கு அதன் முழுப் பலனும் கிடைப்பதை நாங்கள் ஒவ்வொரு நாளும் உறுதி செய்தோம், என்கிறார் லீக்வான்யூ.
இன்று, நேர்மையான நிர்வாகம் உள்ள நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. லஞ்சம் கேட்பதோ, வாங்குவதோ கூடாது. லஞ்சமாகப் பணம் வாங்கியது உறுதி செய்யப்படாதபோதும், ஊழல் செய்யும் எண்ணத்துடன் செயல்பட்டதாக நிருபிக்கப்பட்டால் போதும், சிறைத் தண்டனை அளிக்கப்படும்.
ஆசியாவில் ஊழல் ஒழிப்பில் முன்னிலையில் நிற்கும் சிங்கப்பூர், ஏனைய தேசங்களுக்கு சில பாடங்களை உணர்த்துகின்றது. ஊழலுக்கு எதிரான சட்டம் இருந்தாலும், ஊழலைக்களையத் தேவையான ஆள் பலம் மற்றும் அமைப்பு இருந்தாலும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் வெற்றி பெறவேண்டுமானால் உறுதியான அரசியல் தலைமை அவசியம் என்பதே அது.
2 comments :
இலங்கையை சிங்கபூராக நிச்சயம் மாற்றலாம். அதற்கு முதலில் ஒரு நேர்மை, நீதியான ஜனாதிபதி தேவை. அதன்பின்னர் இன, மத, மொழிக்கு முன்னுரிமையற்ற அரசியல்யமைப்பு, அத்துடன் சகல மக்களும் சமவுரிமையுடன் வாழும் அந்தஸ்து தேவை. அதன்பின்னர் உலக நாடுகளின் நன்மதிப்புடன், மக்களின் ஒத்துழைப்புடன் எமது நாட்டை சிங்கபூருக்கு மேலாக மாற்ற முடியும். இதை சக்திமிகு ஜனாதிபதி இராஜபக்சா மனதார நினைத்தால், நிச்சயம் செய்து முடிக்கலாம்.
First of all, there should be zero corruption in government. The corrupted politicians, government officials should be sentenced to life time prison.
Will it happen? Who will do?
Post a Comment