Tuesday, July 16, 2013

வங்கதேசத்தில் போர் குற்றம் புரிந்த 91 வயது தலைவருக்கு 90 ஆண்டு சிறை தண்டனை! தீர்ப்பை எதிர்த்து கலவரம் வெடித்துள்ளது!

வங்கதேசத்தில் ஜமாத், இ, இஸ்லாமி கட்சித் தலைவர் குலாம் அஜம் மீதான இனப்படுகொலை வழக்கில் அவருக்கு 90 ஆண்டு சிறை தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1971ம் ஆண்டின்போது, பாகிஸ்தானில் இருந்து இப்போதைய வங்கதேசம் பிரிந்தது. அப்போது நடந்த போரின்போது, பாகிஸ்தான் ராணுவம், உள்ளூர் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து படுகொலைகள், கொடுமைகள், வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டது.

அப்போது அமைச்சர் பொறுப்பில் இருந்தவர் குலாம் அஜம். இப்போது இவருக்கு 91 வயதாகிறது. ஜமாத்,இ,இஸ்லாமி என்ற கட்சியின் தலைவராகவும் உள்ளார். இவரும் பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து, இனப்படுகொலையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடக்கிறது.

வழக்கில், கடந்த ஆண்டு குலாம் அஜம் கைது செய்யப்பட்டார். ஆனால், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வந்தார். ஏற்கனவே போர் குற்றச்சாட்டுக்கு உள்ளான 4 பேர் மீதான வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குலாம் அஜம் மீது 5 பிரிவுகளில் 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் நேற்று தீர்ப்பு கூறியது. 3 நீதிபதிகள் கொண்ட இந்த தீர்ப்பாயத்தின் 2வது நீதிபதியான அன்வருல் ஹாக் முதலில் தன்னுடைய கருத்தை வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘‘நாஜிக்கள்தான் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக வரலாறுகள் சொல்கின்றன. ஆனால், 1971ம் நடந்த சுதந்திரப் போரில் பாகிஸ்தான் ராணுவம், இங்குள்ளவர்களுடன் சேர்ந்து இனப்படுகொலையில் ஈடுபட்டிருக்கிறது’’ என்றார். அதைத் தொடர்ந்து தீர்ப்பாயத்தின் தலைமை நீதிபதி ஏ.டி.எம்.பாஜில் கபீர் தீர்ப்பை வாசித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

குலாம் அஜம் மீதான அனைத்து வழக்குகளிலும் அவர் குற்றவாளி என்பது நிரூபணமாகி உள்ளது. அவர் நேரடியாக இனப் படுகொலைகளில் ஈடுபடவில்லை என்றாலும், அவர்தான் அதை பின்னால் நின்று நடத்தினார் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனைதான் விதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு 90 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. தீர்ப்புக்காக குலாம் அஜம் ஆம்புலன்ஸ் மூலம் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு தீர்ப்பை அவர் கேட்டார். இனப்படுகொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5வது நபர் குலாம் அஜம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் இந்த தீர்ப்பினைக் கண்டித்து ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இந்த சம்பத்தில் பத்திரிகையாளர்கள், போலீசார் உள்ளிட்ட 12 பேர் காயம் அடைந்தனர்.

சத்கிரா மாவட்டத்தில் உருட்டுக்கட்டைகள், கத்தி, பெட்ரோல் குண்டுகளால் போலீசாரை தாக்கினர். இதையடுத்து கலவரக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

காசிபூரில் போராட்டக்காரர்களால் துரத்தப்பட்ட பஸ் மோதியதில் 9 வயது சிறுமி இறந்தாள். தினஜ்பூரில் நடந்த தாக்குதலில் ஒருவர் இறந்தார்.

குலாம் ஆசமுக்கு தண்டனை வழங்கியதை ஏற்காத ஜமாத் கட்சி இன்று நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனால் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. வணிக நிறுவனங்கள் இயங்கவில்லை. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையொட்டி தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com