Tuesday, July 9, 2013

13 வதும் தெற்கின் இடதுசாரி ஜனநாயக சத்திகளும் - சுகு-ஸ்ரீதரன்

13 வது திருத்த சட்டத்தின் காணி ,பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் இனவாத பிரச்சாரங்களுக்கெதிராக இடதுசாரிகளும் தெற்கின் ஜனநாயக சத்திகளும் உறுதியாக குரல் கொடுப்பது சமூகங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான நல்ல தருணமாகும். திட்டவட்டமாக நறுக்கு தெறித்தாற்போல் விடயங்களைச் சொல்வது தமிழர் தரப்பில் அரிதாகவே காணப்படுகிறது.

13 வதைப்பற்றிப் பகிரங்கமாகப் பேசுவதில் தமிழர்தரப்பில் ஒரு தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 25 வருடங்களுக்கு மேலாக இலங்கை அரசியல் யாப்பில் அங்கமாகி விட்ட 13 வதை இல்லாதொழிப்பதற்கான போராட்டம் பேரினவாதிகளால் அவ்வப்போது முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தாலும் தமிழர் தரப்பில் 13 வதற்கு ஆதரவான உறுதியான குரல் வெளிப்படுத்தப்படவில்லை.

இப்போது அதற்கு சாவுமணி அடிப்பதற்கான முயற்சிகளுக்கெதிராக இடதுசாரிகளும் ஜனநாயக சத்திகளும் உறுதியான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள்.

தமது அமைச்சரவை பதவி போனாலும் பரவாயில்லை என்றளவிற்கு வாசு, ரஜீத , டிலான் போன்றவர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

டியூ ,திஸ்ஸ, வாசு , டிலான், ரஜித போன்றவர்கள் உட்பட பலர் தமது ஆட்சேபனையை பதிவு செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ் முஸ்லீம் ஜனநாயக சத்திகள் இவர்களுடன் இணைந்து செயற்படவேண்டிய தருணம் இதுவாகும்.

இந்த சக்திகள் தனிமைப்படுவதற்கு நாம் இடமளிக்கக் கூடாது.

13 வதில் பொலிஸ் காணி அதிகாரங்களை நீக்கும் திருத்தம் செய்யக் கூடாது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் கிட்டாது என இவர்கள் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்கள்.

இது எல்லாம் எமக்குத் தேவையில்லை. உலகம் எமக்கு இன்னொரு கொசோவாவை பெற்றுத் தரும் என்ற குரல்கள் எல்லாம் போகாத ஊருக்கு வழி சொல்லும் மோசடியாகும்.

நாங்கள் ஏதோ ஒரு இடத்தில் இருந்து தான் ஆரம்பிக்க முடியும். உண்மையான அர்த்தத்தில் இலங்கையை பல்லினங்களின் நாடாக மேம் படுத்துவதற்கு ஏதாவதொரு இடத்தில் ஆரம்பிக்க வேண்டும். அது 13 வதாகத்தான் இருக்கிறது.

இதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டு யதார்த்தமில்லாத சூனியத்திலிருந்து விடயங்களைத் தொடங்க முடியாது. கனவு காண்பது நல்லதுதான். ஆனால் மக்களின் இருப்பு பாதுகாப்பு என்பவற்றிற்கு உத்தரவாதமில்லாத கனவுகளால் பிரயோசனமில்லை.

உசுப்பேத்தும் கவர்ச்சிகரமான சொற்சிலம்பங்களை விட யதார்த்தமான அணுகுமுறைகளே இன்று தேவைப்படுகின்றன. பொறுமையும், தூரநோக்கும் கொண்ட அணுகுமுறை இன்று தமிழர் தரப்பில் தேவைப்படுகிறது.

எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதே எமது 30 வருடஅனுபவமாக இருக்கிறது. எனவே நிதானம் தேவை.

தமிழ் முஸ்லீம் மலையக சமூகங்களும் தெற்கின் இடதுசாரி ஜனநாயக சத்திகளும் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் சேர்ந்து செயற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இச்சந்தர்ப்பத்தை இழந்து விடக் கூடாது. குறிப்பாக தமிழ்த்தலைமைகள் இந்த இடதுசாரி ஜனநாயக சத்திகளுடன் இணைந்து செயற்படுவதற்கு முன்னெடுப்பை மேற்கொள்ளவேண்டும் என்று அரசுக்குள்ளேயும் வெளியேயும் அவர்கள் தனித்து குரல் கொடுக்கிறார்கள்.

அவர்களுடன் எம்மையும் இணைத்து கொள்ள வேண்டும் .

இலங்கையில் பிர்ச்சனை தீரவேண்டும் என்று விருப்பம் உள்ளவர்கள் அதனைத்தான் செய்வார்கள். ஆனால் மக்களின் பிரச்சனைகளில் மானசீகமான அக்கறை இல்லாதவர்கள் உசுப்பேத்தி தேர்தல்களில் வெற்றி பெறுவதிலேயே குறியாக இருப்பார்கள்.

இந்த உசுப்பேத்தும் அரசியல் எத்தகைய விபரீதங்ளை ஏற்படுத்தியிருக்கிறது என்று நாம் ஆற அமர இருந்து சிந்தித்தால் புரியும்.

தற்போது பேரினவாதிகளும் தங்கள் பங்கிற்கு பொதுப்பலசேனா, தேசிய சுதந்திரமுன்னணி, சிஹலஉறுமய என வெவ்வேறு பெயர்களில் புற்றீசல்கள் போல் சிறுபான்மைச் சமூகங்களுக்கெதிரான குரோதத்தையும் விரோதத்தையும் வளர்த்து வருகிறார்கள்.

பேரழிவுகளுக்கான குணம் குறிகளை இது கொண்டிருக்கிறது. இந்த விபரீத பாசிச அரசியல் தான் இந்த நாட்டை குட்டிச்சுவராக்கியது என்பதற்கு பெரிய ஆராய்ச்சிகள் தேவையில்லை. “வினாசகாலே விபரீத புத்தி” என்பார்கள். என்னவோ சமூகம் முழுவதும் இந்த இந்த விபரீத சிந்தனை ஆதிக்கம் செலுத்துகிறது. புத்தபகவான், காந்தியடிகளின் அன்பு கருணை என்பன நலிவடைந்து போயிருக்கின்றன.

இந்தியாவின் செழுமைமிகு சுதந்திர இயக்கத்தின் கருவூலங்கள் உலகளாவிய அளவில் நிற -இனவாதங்களுக்கு எதிரான சத்தியாக வியாபித்திருக்கிறது. 18 மைல் தூரத்தில் உள்ள இலங்கையில் அது நலிவடைந்து சிதைந்து போயிருக்கிறது. இன சமூகங்கள் சமத்துவமாக நோக்கப்படுவதற்கு இலங்கை நெடுந்தூரம் இன்னும் பயணிக்க வேண்டியிருக்கிறது.

அச்சமற்ற சுதந்திரமான வாழ்வொன்று இங்கு ஸ்தாபிக்கப் படவேண்டியிருக்கிறது. அது இலங்கையின் சகல சமூகங்களுக்கும் அவசியப்படுகிறது. சுதந்திர மனிதர்களாக சக சுதந்திர மனிதனுடன் உறவாடுவதே இங்கு முக்கியமானதாகும்.

கீழ்மைப்படு;த்துதல், ஒவ்வொரு திருப்பு முனையிலும் இரண்டாந்தரப் பிரசை என்ற முத்திரை இங்கு பிரச்சனை. நீங்கள் இராணுவ ,பொலிஸ் உளவுத்துறை கண்காணிப்பின் கீழ் இரண்டாந்தரப் பிரசைகளாக மன அமைதி அடையுங்கள் என்பதுதான் ஒரேநாடு ஒரே தேசம் என்ற வார்த்தை அலங்காரத்தின் அகங்காரமாக இருக்கிறது.

இது மாறவேண்டும் . யாமார்க்கும் குடியல்லோம் என்ற நிலை அமரத்துவமானதாகும்.

மனித குலத்தின் மீது நிறம் ,இனம், மதம், சாதியின் பெயரால் இருக்கும் தழைகள் அறுபட வேண்டும். எல்லாவற்றிற்கும் அப்பால் வர்க்க சமூகம் அழிந்த அமரத்துவ நிலையை மார்க்சியம் வலியுறுத்துகிறது. இன சமூகங்கிளிடையே சத்துவம் என்பது மனித குலத்தின் இலட்சிய சமத்துவத்தின் ஒரு பகுதியே. இந்த பிரகாசமான எண்ணங்களை மறுப்பவர்களுக்கும் சார்பானவர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளே இலங்கையில் இன்று நிலவிக் கொண்டிருப்பது

இலங்கையின் அரசாங்க முறைமையில் கண்ணியமான சுயமரியாதையுள்ள பங்காளர்களாக தமிழ் முஸ்லிம் மலையக மக்கள் இணைத்துக் கொள்ளப்படவேண்டும்.அதற்கு இப்போதிருக்கும் அதிகாரப் பரவலாக்கல் கட்டமைப்பு பலப்படுத்தப் படவேண்டும்.

அதனை பலவீனமக்கும் முயற்சிகள் முழு வீச்சுடன் எதிர்க்கப்படவேண்டும். தோற்கடிக்கப்படவேண்டும். உள்நாட்டு முயற்சிகளுடனும் அண்டைநாட்டு மற்றும் சர்வதேசஅனுசரணையுடனும் அது தோற்கடிக்கப்படவேண்டும்.

அனைத்து இன மக்களும் கண்ணியமாக வாழ்வதற்கான நுழை வாயில் அது.

சுகு-ஸ்ரீதரன்
பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணி.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com