Tuesday, June 25, 2013

இதய நோய் உங்களுக்கு வராமல் தடுக்கும் சிறந்த வழிகள்

இன்றைய காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள வர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அன்று 90 முதல் 100 வயது வரை ஆரோக்கியமாக இருந்து மறைந்தவர்கள் ஒரு புறம், இன்று 30 மற்றும் 40 களிலேயே மருத்துவ காப்பீட்டினை முழுமையாக பயன்படுத்தும் நிலவரம்!

அந்த வகையில் இன்றைய தலைமுறையை ஆட்டிப்படைக்கும் மோசமான நோயாக இதய நோய் இருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் பெரும்பாலானோர் இறப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால், அது இதய நோயாகத் தான் இருக்கும்.

ஏனெனில் அங்குள்ளவர்கள் உண்ணும் உணவு முறைப்பார்த்தால், நிச்சயம் இதய நோய் வராமல் என்ன வரும். ஏனெனில் எப்போதும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளான பீட்சா, பர்க்கர் போன்றவற்றை சாப்பிடுவது, மதுபானத்தை அளவுக்கு அதிகமாக அருந்துவது, புகைப்பிடிப்பது என்றெல்லாம் இருந்தால், இதயம் பாதிப்படையாமல் ஆரோக்கியமாக இருக்குமா என்ன?

அதுமட்டுமின்றி அளவுக்கு அதிகமான வேலைப்பளு இருந்தாலும், இதயம் பெரிதும் பாதிக்கப்படும். ஏனெனில் இந்த நேரம், மனமானது பெரிதும் பாதிக்கப்பட்டு, இதயத்தில் அதிகமான அழுத்தம் ஏற்படுகிறது.

எனவே இத்தகைய பாதிப்பு இதயத்தில் ஏற்படாமல் இருக்கவும், பாதிக்கப்பட்டுள்ள இதயம் குணமாகவும் ஒருசிலவற்றை மனதில் கொண்டு, அதனை பின்பற்றி வந்தால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதோடு, உடலையே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

புகைப்பிடிப்பது இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களில் புகைப்பிடிப்பது முக்கியமான ஒன்று. ஏனெனில் சிகரெட்டில் இருக்கும் புகையிலையானது, இதயத்தின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பொருட்களில் ஒன்று. எனவே புகைப்பிடிப்பதை தவிர்த்தால், இதய நோய் வராமல் தடுக்கலாம்.

கொலஸ்ட்ரால் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், அவை கரோனரி இதய நோயை உண்டாக்கும். எப்படி என்றால் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடும் போது, அதில் உள்ள கொலஸ்ட்ரால், தமனிகளின் சுவர்களில் அதிகமாக தங்கி, தமனிகளின் அளவை குறைந்து, ரத்த ஓட்டத்தை தடுக்கும். எனவே எப்போதும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதிலும் கொலஸ்ட்ரால் அளவானது 200 குறைவாக இருக்க வேண்டும்.

உடல் எடை இதய ஆரோக்கியத்தை கெடுப்பதில் அதிக உடல் எடையும் முக்கிய பங்கு வகிக்கிறது. சொல்லப்போனால், தற்போது மாரடைப்பு வருபவர்களின் உடலைப் பார்த்தால், அவர்களது உடல் எடை யானது, அளவுக்கு அதிகமாக இருக்கும். எனவே உடல் எடையில் கவனமாக இருக்க வேண்டும்.

உடற்பயிற்சி தினமும் உடற்பயிற்சி செய் வது மிகவும் அவசியமான ஒரு செயல்களில் ஒன்று. தினமும் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

நீரிழிவு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தாலும், இதயம் பாதிக்கப்படும். ஏனென்றால் நீரிழிவும் ஒரு வகையில் இதய நோயை உண்டாக்கும். அதிலும் குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கு பெரிய அளவில் ஆபத்தை விரைவில் ஏற்படுத்தும்.

உணவுகள் குறைந்த கொழுப்புள்ள உணவுகள், பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், இதயநோய் வருவதை தடுக்க முடியும். குறிப்பாக பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் வைட்டமின் “சி” நிறைந்தை பழங்கள் மற்றும் காய்கறிகள் இதயத்தை பாதுகாக்கும்.

ஆல்கஹால் ஆல்கஹாலை சரியான அளவு குடித்தால், இதய நோய் வருவதை தடுக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். ஆனால் அதையே அதிகம் சாப்பிட்டால், ரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, மார்பக புற்றுநோயும் வரும். எனவே அளவாக, டானிக் போன்று சாப்பிடுவது நல்லது.

ட்ரான்ஸ் கொழுப்புகள் பேட்டி ஆசிட்களில், ட்ரான்ஸ் பேட்டி ஆசிட் உள்ள உணவுகளை சாப்பிட்டால், இதய நோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. இந்த கொழுப்புகள் மிகவும் கொடுமையானது. எனவே இவற்றை அறவே தவிர்க்க வேண்டும். இத்தகைய ட்ரான்ஸ் கொழுப்புகள் இறைச்சிகளில் அதிகம் இருக்கும். குறிப்பாக மாட்டிறைச்சியில் அதிகம் இருக்கும்.

வைட்டமின்களில் கவனம் ஆன்டிஆக்ஸிடன்ட்களை வழங்கும் வைட்டமின்கள் உடலுக்கு மிகவும் அவசியம். அதிலும் வைட்டமின் ஈ மற்றும் போலேட் மற்றும் வைட்டமின் B போன்ற ஹோமோசைஸ்டீனை குறைக்கும் ஏஜென்ட்களை உடலில் சேர்க்கும் போது, அவை இதய நோய் வராமல் தடுக்கும்.

ஆனால் அந்த ஹோமோசைஸ்டீன் அளவுக்கு அதிகமாக இருந்தால், அதிக கொழுப்புக்கள் உடலில் இருந்தால் எப்படி இதயத்திற்கு ஆபத்தை விளைவிக்குமோ, அதே அளவு ஆபத்தை உருவாக்கும். எனவே இந்த ஹோமோசைஸ்டீனை குறைக்க மருந்துகள் எதுவும் சாப்பிடாமல், போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் B உள்ள உணவுகளை சாப்பிட்டால், ஹோமோசைஸ்டீனை சரியான அளவில் பராமரித்து வரலாம்.

மனஅழுத்தம் அதிகமான வேலைப்பளுவின் காரணமாக நிறைய பேர் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மன அழுத்தம் ஏற்படும் போது இதயத்திற்கு அதிகமான அழுத்தம் ஏற்பட்டு, இதயத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே மனஅழுத்தம் ஏற்படும் போது, அப்போது அதனை குறைக்க தியானம், மூச்சு விடும் பயிற்சி போன்ற மனதை ரிலாக்ஸ் செய்யும் பயிற்சிகளை செய்து வந்தால், இதயத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். இவ்வாறு செய்யும் போது உடலில் ரத்த ஓட்டமானது சீராக அனைத்து உறுப்புகளுக்கும் பாயும்.

மருத்துவ ஆலோசனை குடும்ப நல மருத்துவரிடம் அவ்வப்போது உடல் நிலையை அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு பரிசோதிக்கும் போது, ஏதாவது குறைபாடு உடலில் தென்பட்டால், அதனை சரிசெய்ய என்னென்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை பெற்று, அந்த உணவுகளை தவறாமல் சாப்பிட வேண்டும்.

இதனாலும் இதய நோய் வராமல் தடுக்கலாம். ஏனெனில் அனைவருக்குமே ஒரே மாதிரியான நிலையில் உடலானது இருக்காது, எனவே மருத்துவ ஆலோசனையை மேற்கொள்ளவேண்டும்.

கொழுப்பின் அளவை தொடர்ச்சியாக பரிசோதித்தல் ஒவ்வொரு வருடமும் உடலிலுள்ள கொழுப்பின் அளவை தவறாமல் பரிசோதித்து அறிவது, இதயம் பலவீனமடைவதை தடுப்பதற்கான முதன்மையான வழிமுறையாகும்.

இவ்வாறு கொழுப்பின் அளவினை அறிவதன் மூலம் உடலுக்கு கொடுக்க வேண்டிய சரியான அளவிலான உணவு, உடற் பயிற்சி ஆகியவற்றை அறிந்து, அவற்றை முறையாக பயன்படுத்துவதன் மூலமாக ஆரோக்கியத்தைப் பெறலாம். மேற்கண்ட வழிமுறைகளை தவறாமல் பின்பற்றும் போது, பலமான இதயத்தை கொண்டவராகவும் மற்றும் இதய நோய்களிலிருந்து விடுதலை பெற்றவராகவும் இருக்க முடியும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com