பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு ஆதரவு வழங்காத கட்சியினர் ஜனநாயக விரோதிகள் - ரம்புக்வெல்ல!
நாட்டின் நலன் கருதி அரசாங்கம் மேற்கொள்ளும் ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளுக்கு சகல கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் எனவும், அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு ஆதரவு வழங்காத கட்சியினர் ஜனநாயக விரோதிகளாகவே கருதப்படுவர் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன் முதலாவது அமர்வு எதிர்வரும் ஜுலை 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அரசாங்கம் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. ஜனநாயக ரீதியாக இதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் உச்ச அளவில் எடுத்துள்ளது.
அத்துடன் பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு ஐ. தே. க., ஜே. வி. பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் சமுகமளிப்பதில்லை என தெரிவித்துள்ளதுடன் அதற்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.
இந்நிலையில் அக்கட்சிகள் பங்கேற்காமல் தெரிவுக் குழுவின் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட இடமுள்ளதா என அமைச்சரிடம் கேட்டபோது, வெற்றி தோல்வி என்பது வேறு, ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து அவர்கள் தெரிவுக் குழுவில் பங்கேற்பது முக்கியம் எனவும், அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான சர்ச்சைகளுக்கு ஜனநாயக முறையில் தீர்வு காண்பதற்கே அரசாங்கம் பாராளுமன்றத் தெரிவு குழுவை நியமித்துள்ளது என்பதை அவர்கள் உணர வேண்டும் எனவும், அவர்கள் இத் தெரிவுக் குழுவுக்கு சமுகமளிப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment