காணி ஆக்கிரமிப்பும் விற்பனையும் சட்ட விரோதமாகும் - இஸட். ஏ. எச். ரஹ்மான்
தனியாரினால் ஆக்கிரமிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்ற மருதமுனை நவியான் குளப்பகுதி காணியை மீட்டெடுப்பதற்கு கல்முனை மாநகர சபை, காணிப் பதிவாளர் திணைக்களத்தின் உதவியை நாடியுள்ளது.
இப்பிரச்சினை தொடர்பாக கல்முனை மாநகர சபையின் ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் இஸட். ஏ. எச். ரஹ்மான் மாநகர சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கவன ஈர்ப்புப் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.
அங்கு இப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து கல்முனை மாநகர சபையின் செயலாளரினால் கல்முனை மாவட்ட காணிப் பதிவாளருக்கு மாநகர சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தனியாரினால் ஆக்கிரமிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்ற குறித்த காணிகளுக்கான பதிவை இடைநிறுத்தி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இக்கடிதத்தின் பிரதிகள் அம்பாறை மாவட்ட செயலாளர், கல்முனை பிரதேச செயலாளர், கல்முனை பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி போன்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவ்விடயம் தொடர்பாக கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் இசட். ஏ. எச். ரஹ்மான் கவன ஈர்ப்புப் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையில் கூறியதாவது:
மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரிக்குப் பின்னால் அமைந்துள்ள நவியான் குளப்பகுதி காணி அரசுக்கு சொந்தமான தரிசு நிலமாகும். மழை, வெள்ளப் பெருக்கு காலங்களில் மருதமுனைப் பிரதேசம் வெள்ள அபாயத்தில் இருந்து பாதுகாக்கப்படுவது இக்குளப் பகுதியின் மூலமே.
அது மாத்திரமின்றி ஏனைய காலங்களில் அல்மனார் மத்திய கல்லூரி மாணவர்களின் விளையாட்டுத் திடலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எனினும் இக்குளப்பகுதி காணியை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்திருப்பதுடன் அதனை துண்டு துண்டாக விற்பனை செய்தும் வருகின்றார். இக்காணித் துண்டுகள் மலிவாகக் கிடைப்பதால் மக்களும் போதிய விளக்கமின்றியும் அதன் பாரதூரம் தெரியாமலும் கொள்வனவு செய்து வருகின்றனர்.
இந்தக் காணி ஆக்கிரமிப்பும் விற்பனையும் சட்ட விரோதமாகும் என்பதை கல்முனை மாநகர சபையினதும் பொது மக்களினதும் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
ஆகையினால் இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு கல்முனை மாநகர சபை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்.
இதற்காக காணிப் பதிவாளர் திணைக்களம் மற்றும் பொலிஸ் என்பவற்றின் உதவியை நாடுவதுடன் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கோருகின்றேன்.
(பி.எம்.எம்.ஏ.காதர்)
0 comments :
Post a Comment