Tuesday, June 18, 2013

இரு தமிழர்களுக்கு தூக்குத் தண்டனையை ஒத்தி வைத்தது குவைத்!

குவைத்தில் இந்தியத் தமிழர்கள் இருவருக்கு இன்று நிறைவேற்றப்பட இருந்த தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவது, இந்தியாவின் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை சேர்ந்த சுரேஷ்சும் சித்தாம்பூரைச் சேர்ந்த காளிதாஸும் கடந்த சில ஆண்டுகளாக குவைத்தில் சாரதிகளாக பணியாற்றி வந்தனர்.

கடந்த 2008-ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு கொலை வழக்கில் சுரேசுக்கும், காளிதாஸுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி குவைட் நாட்டுப் பொலிஸார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். சுரேஷ், காளிதாஸ் இருவரையும் ஜூன் 18ஆம் தேதி தூக்கிலிடுவதாக குவைட் நாடு அறிவித்திருப்பதாக ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியானது.

தனது மகனை காப்பாற்ற வேண்டும் என்று சுரேசின் தாயாரும், கணவரை காப்பாற்ற வேண்டும் என்று காளிதாஸின் மனைவியும் ஊடகங்கள் வாயிலாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மத்திய அரசின் துரித நடவடிக்கையினால் குறித்த இருவருக்குமான மரண தண்டனையை நிறுத்திவைத்துள்ளது என குவைட்டிற்கான இந்திய தூதர் சதீஷ் மேத்தா, வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு இ மெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தைச் சேர்ந்த சுரேஷ் சண்முகசுந்தரம், காளிதாஸ் செல்லையன் ஆகிய இருவருக்கும் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது கடந்த வெள்ளிக்கிழமை தெரியவந்தது. தண்டனை நிறைவேற்றும் நாள் நெருங்கிவிட்டதால், வார இறுதி நாளாக இருந்த போதிலும் குவைட் அரசு அதிகாரிகளைத் தாம் தொடர்பு கொண்டு தண்டனையை நிறுத்தி வைக்க கோரினோம். குவைட் சட்ட அமைச்சர் ஆகாஃப் உள்ளிட்டோரின் தலையீட்டின் பேரில் தமிழர்களுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தூக்குத் தண்டனையை குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குவைத்திற்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com