முன்னாள் புலி உறுப்பினர்கள் அனைவரும் வருட இறுதிக்குள் சமூகத்துடன் இணையவுள்ளனர்!
புனர்வாழ்வு பெற்றுவருகின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எஞ்சியுள்ள 340 முன்னாள் போராளிகளையும் இந்த வருட இறுதிக்குள் சமூகமயப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு குறிப்பிடுகின்றது.
சமூகமயப்படுத்தல் செயற்பாடுகளை துரிதப்படத்தும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக, வவுனியா மருதமடுவில் இயங்கிவந்த புனர்வாழ்வு முகாம் ஓரிரு தினங்களுக்கு முன்னர் மூடப்பட்டதாக அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சிவலிங்கம் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த முகாமில் புனர்வாழ்வு பெற்றுவந்த 100 முன்னாள் போராளிகளும் பூந்தோட்டம், சேனதுறை மற்றும் கந்தகாடு ஆகிய புனர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் தற்போது மூன்று புனர்வாழ்வு முகாம்களே இயங்கி வருகின்றன.
பூந்தோட்டம் முகாமில் 122 பேரும், சேனதுறை முகாமில் 119 பேரும், கந்தகாடு முகாமில் 99 பேரும் என மொத்தமாக 340 முன்னாள் போராளிகள் தொடர்ந்து புனர்வாழ்வு பெற்று வருவதாக அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் கூறியுள்ளார்.
ஏற்கனவே 24 முகாம்கள் இயங்கிவந்ததுடன், இதுவரை 12 ஆயிரத்துக்கும் அதிகமான முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment