அமைச்சர் மைத்திரிபால செயலாளர் நாயகம் பதவியிலிருந்து வெளியேற்றம் (.............?)
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பற்றியும், அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் பற்றியும் சந்தேகத்திற்கிடமான, மக்கள் அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கை கொள்ளத்தக்கதான கருத்துக்களைக் கூறியதற்காகவும், பொலிஸாருக்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்டளைகள் பிறப்பித்ததற்காகவும், கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு மாற்றமான முறையில் ஊடகங்களுக்குகருத்துத் தெரிவித்ததற்காகவும் எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளக செய்திகள் அறிவிக்கின்றன. இது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் அறுவர் கொண்ட விசேட ஒழுக்காற்றுக் குழுவொன்றை நியமிப்பதற்காக ஜனாதிபதி கவனம் எடுத்துள்ளதாகவும் உள்ளக செய்திகள் தெளிவுறுத்துகின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்ப்புக்கேற்ப, அமைச்சர் மைத்திரிபால சிரிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து நீக்கப்படவுள்ளார் என நம்பகத்தன்மை வாய்ந்த செய்திகள் வெளியாகியுள்ளன. வெற்றிடமாகவுள்ள இடத்திற்கு ரத்னசிரி விக்கிரமநாயக்கா, ஷமல் ராஜபக்ஷ, நிமல் சிரிபால த சில்வா உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஐவரின் பெயர் பிரேரணைக்குட்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
செயலாளர் நாயகம் பதவி மாற்றத்தோடு ஏனைய பதவிகளிலும் மாற்றங்கள் நிகழவுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கூட்டமொன்றைக் கூட்டாமல் பதவி மாற்றங்களை மேற்கொள்ள முனைவது கட்சியின் சட்டக் கோவையை மீறும் செயலாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேட்ட உறுப்பினர்கள் கருத்துரைக்கின்றனர்.
ஜூலை மாதத்தில் பதவிகள் மாற்றப்படவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தற்போது வகிக்கின்ற சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்கு அதற்குப் பதிலாக சிரேட்ட அமைச்சர் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சுயவிருப்பின் பேரில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி பசில் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டமை குறித்து சுதந்திரக் கட்சியின் சிரேட்ட உறுப்பினர்கள் அதிருப்திடைந்துள்ளமையும் தெரியவருகிறது.
(கேஎப்)
0 comments :
Post a Comment