Wednesday, March 20, 2013

யாழில் அமெரிக்கா,இந்தியாவை எதிர்த்து பாரிய ஆர்ப்பாட்டம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இலங்கைக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்க முற்படுவதை எதிர்த்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று(20.03.2013) புதன்கிழமை பாரிய ஆர்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழ். கோட்டை முனியப்பர் ஆலய முன்றலில் ஆரம்பமாகிய இந்த ஆர்பாட்டப் பேரணியானது, முனியப்பர் வீதியூடாக வைத்திசாலை வீதி, மணிக்கூட்டு கோபுர வீதி, ஸ்டான்லி வீதி, கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதிகள் ஊடாக அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.

இதில் குறிப்பாக 'அமெரிக்காவே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வாபஸ்பெறு, ஐ.நா.வே இன்னுமொரு போராட்டத்தை உருவாக்காதே, மீண்டும் எங்களுக்கு போர் வேண்டாம், இந்தியாவே முதலில் உனது பிரச்சினையை தீர்த்துக்கொள், ஒபாமா இரக்கமற்ற இரத்த உறிஞ்சி' போன்ற பல்வேறு வாசகங்களை எழுப்பியவாறு இந்த ஆர்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இந்த அர்பாட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன், விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர், ஈ.பி.டி.பி. கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், இராணுவத்தினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டதுடன் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் உருவப்பொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com