Sunday, March 17, 2013

இலங்கை விடயத்தில் இந்தியாவும் ஐ.நா வில் அறிக்கை சமர்ப்பித்தது.

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா.மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானங்கள் மீது வருகின்ற புதன் வியாழக்கிழமைகளில் வாக்கெடுப்புக்களும் இடம்பெறவுள்ளன.

இதற்கிடையே, கவுன்சில் கூட்டத்தில் இலங்கை தரப்பு நியாயங்களை முன்வைக்கின்ற அரசதரப்பு பிரதிநிதிகள் குழுவிற்கு தலைமை தாங்குகின்ற அமைச்சர் மகிந்த சமரசிங்க காலமுறை ஆய்வறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் போருக்கு பின்னர் கடந்த 4 ஆண்டுகளாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு பணிகள் பற்றி தெளிவாக விளக்கினார்.

இலங்கை அரசினால் வைக்கப்பட்ட அந்த அறிக்கை மீது விவாதங்கள் இடம்பெற்றன. இலங்கை அரசின் அறிக்கைக்கு சீனா, பாகிஸ்தான், ரஷியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும், பொதுமன்னிப்பு சபை, மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் அறிக்கையை எதிர்த்து பேசினார்கள்.

அறிக்கையின் மீது நேற்றுடன் விவாதம் முடிவடைந்தது. அறிக்கையின் மீது பேச இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைக்காததால், இந்திய பிரதிநிதியால் கருத்து தெரிவிக்க முடியவில்லை.

இலங்கையினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் : போரின் போது நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்த 'படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு' வழங்கிய 207 பரிந்துரைகளில் 113 பரிந்துரைகளை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டதாகவும், மீதம் உள்ள 94 பரிந்துரைகளை ஏற்க முடியவில்லை; குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஏற்கப்பட்ட பரிந்துரைகளில் மும்மொழி திட்டம், சிவில் பகுதியில் இருந்து ராணுவத்தை விலக்கிக் கொள்ளுதல், ராணுவ முகாம்களில் இருப்பவர்களை திருப்பி அனுப்புதல், உயர் பாதுகாப்பு பகுதியில் இருந்து ராணுவத்தை விரைவில் வாபஸ் பெறுதல் ஆகியவையும் அடங்குகின்றன. இவை இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஏற்கப்பட்ட பரிந்துரைகள் என இந்திய தரப்பு திருப்தி காண்கின்றது.

இவ்வறிக்கை தொடர்பில் விவாதத்தில் பங்கு கொள்ளமுடியாமல் போனதை அடுத்து இந்தியா எழுத்து மூலமாக அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அவ்வறிக்கையில் :

2வது சுற்று காலமுறை ஆய்வறிக்கை தாக்கல் செய்ததற்காக இலங்கைக்கு நன்றி.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (எல்எல்ஆர்சி) பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை இலங்கை ஏற்றதை பாராட்டுகிறோம்.

அத்துடன், மறுவாழ்வு பணிகள், வடக்கு மாகாணத்தில் படைகளை குறைத்தல் போன்றவற்றையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சிறப்பாக செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து சுதந்திரமாகவும், நியாயமாகவும் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

தமிழர்கள் மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு பணிகள் வேகமாக நடக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தல்களை நடத்த வேண்டும் என்ற இலங்கையின் உறுதிமொழியை வரவேற்கிறோம்.

இலங்கை அரசியல் சட்டத்தில் உள்ளபடி, அனைத்து மக்களும் வாக்களிக்கும் ஜனநாயக கடமையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

மறுவாழ்வு பணிகள் தொடர்பான பரிந்துரைகளை அமல்படுத்துவதில் இலங்கை வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

அதே போல், தேசிய புனரமைப்பு பணியில் தீவிரமாக ஈடுபடவும், அரசியல் தீர்வு காணும் பணியை விரைவுபடுத்தவும் இலங்கை அரசை வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க வேண்டுமென எந்த கோரிக்கையும் அறிக்கையில் இடம் பெறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் வரும் 20, 21 தேதிகளில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தரும் என எதிர்வுகூறப்படுகின்றது. இது இந்தியாவின் இரட்டை வேடத்தை வெளிப்படையாக காட்டி நிற்கின்றது.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர இருக்கும் கண்டன தீர்மானத்தின் மீது ஏற்கனவே 3 முறை திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

கடைசியாக ஒருமுறை வருகிற செவ்வாய்க்கிழமை அந்த அறிக்கையில் திருத்தம் செய்ய வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு அது ஐ.நா.மனித உரிமை கவுன்சில் முன்பு தாக்கல் செய்யப்படும் என்று சொல்லப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com