விமானத்தில் பறந்துதிரிந்தால் தமிழர் பிரச்சினை தீருமா!
எப்போதும் அதிருப்தியுடனும், மனவருத்தத்துடனும், எதன்மீதாவது குறைப்பட்டபடியும் இருப்பது நம்மில் பலருக்கு வழக்கம். நம்மை யாரும் புரிந்துகொள்கிறார்களில்லை என்றோ, நம் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்றோ, மற்றவர்களைப்போல் நமக்கு வாழ்வு அமையவில்லை என்றோ எப்போதும் கவலைப்பட்டபடியே மனதை வைத்துக்கொள்கிறோம். இதுபோல் திருப்தியற்ற மனம் உள்ளவர்களிடம் சந்தோஷமும் தங்குவதில்லை.
சந்தோஷத்திற்கும் திருப்திக்கும் நமக்குள்தான் எல்லைகள் இருக்கின்றன. எல்லைகளை நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் விரிவடையச் செய்துகொண்டே போனால், மனதில் மகிழ்ச்சியே வந்து சேராது. இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்க ஆசைப்பட்டபடி இருப்பவர்களுக்கு இருக்கின்றதையும் வாழமுடியாமலேதான் காலம் முடியும். வயதான உறவினர்கள் பலர், தன்பேரில் சொத்து எழுதி வைத்துவிட்டுப் போனபோதும், அதை அனுபவிக்க முடியாமல் அழுதுகொண்டிருந்த முல்லா கதை கேள்விப்பட்டிருக்கிறோம். அத்தனை சொத்துக் கிடைத்த பிறகும், இனி சொத்து எழுதிவைத்துவிட்டுச் சாகக்கூடிய உறவினர்கள் யாருமில்லையே என்ற கவலை முல்லாவுக்கு.
கவலைப்படுவது என்று ஆரம்பித்தால் எல்லாவற்றிற்கும்தான் கவலைப்படலாம். அது வாழ்க்கையை சந்தோஷமாகவும் திருப்தியாகவும் வாழ்ந்துவிட்டுப் போக உதவாது. தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கும் நாம் சர்வதேச நாடுகளையும் வருடந்தோறும் வரும் மகாநாடுகளின் முடிவுகளையும் எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோமே அல்லாமல், இந்த நாட்டுக்குள் தீர்த்துக்கொள்ளக் கூடிய வழிகள் பற்றிச் சிந்திக்காமலே வறட்டு வீம்புகளுடன் அப்பாவி மக்கள் மீது தொடர்ந்து கஷ்டங்களைச் சுமத்திக் கொண்டிருக்கிறோம்.
விமானத்திலேறி சர்வதேச அரசியல் அரங்கையெல்லாம் சுற்றிவந்துதான் எமது பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமா? பிள்ளையார் போல இங்கேயே புத்திசாலித்தனமாக நமக்கு வேண்டியதைப் பெற்றுக்கொள்ள முடியாதா? முடியாது என்று சொல்கிறவர்கள் என்ன முயற்சியைச் சமீப காலங்களில் செய்திருக்கிறார்கள் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டும்.
சிங்கள மக்கள் இனவாதச் சிந்தனைகளோடு இருக்கிறார்கள்ள நாம் விரும்புவதைத் தர அவர்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்று ஏதோ சிங்கள மக்கள்தான் உலகமகா கொடூரர்கள் - வீம்புக்காரர்கள் என்பதுபோல சொல்லிக் கொண்டிருப்பவர்களையே மக்களும் மறுபேச்சின்றி பாமரத்தனமாக நம்புகிறார்கள். இது தவறு. இப்போதை விட தீவிரமாக இனமுரண்பாடு இருந்த காலத்தில்தான் தமிழ்மக்களுக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதையே தனது அரசியல்திட்டமாக வைத்து சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதித் தேர்தலில் வென்றார்.
அதுபோல் நமக்குத்தான் தீர்வு அவசியமென்றால், இந்த நாட்டுக்குள் மூவின மக்களும் இணங்கி வாழ்வதற்குரிய தீர்வொன்றினை ஏற்படுத்திக்கொள்ள நாம் அனைத்துத் தரப்பினரது பிரச்சினைகளையும் காதுகொடுத்துப் பேசத் தயாராக இருக்கிறோம் என்ற செய்தியை தமிழ்த் தரப்பிலிருந்து வெளிப்படுத்தியாக வேண்டும். தமிழ்ப் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் அந்த நல்லிணக்க செய்தியைச் சொல்பவர்களாக இருக்க வேண்டும். ஏனைய இனத்தவரிடமும் நியாயமாகச் சிந்திக்கக் கூடிய தரப்பினரையாவது வென்றாக வேண்டும். அவர்களும் தமிழ்ப் பெரும்பான்மையினரின் அபிலாசை இதுவே என்று தத்தம் சமூக மக்களிடம் பிரச்சாரம் செய்யத்தக்கதாக இருக்க வேண்டும்.
தமிழ்மக்களில் பெரும்பான்மையோர் அத்தகைய இணக்க சமிக்ஞைகளை வெளிப்படுத்தக்கூடிய பிரதிநிதிகளைத் தங்கள் தலைவர்களாகத் தேர்ந்துகொள்வார்களாக இருந்தால், அதன்பிறகு ஏனைய சமூகங்களைச் சேர்ந்த பெரும்பான்மையினரும் தமிழர்களுக்குத் தீர்வு கொடாதே என்று ஒருபோதும் சொல்லப்போவதில்லை. இந்த யதார்த்த அணுகுமுறைதான் இங்கு பிரச்சினைகளைத் தீர்க்கும்.
1 comments :
What a pleasant luxuries life.They just fly on the sky,we just wait down
and anxiously wait that they will bring us all the Gifts what we need.
Everytime when they fly they will make promises.But one thing is sure they need not to fly wasting our money and making us fools just listen to our government what they say.We are sure there cannot be any other alternative for our issues.
Post a Comment