Friday, March 15, 2013

உங்கள் எலும்பை வலுப்படுத்த வேண்டுமா? உண்ண வேண்டியன இவை...

துரித கதியில் எலும்பு முறிவை ஏற்படுத்தும் ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ நோய் தற்போது இளம் வயதினரையும் விட்டுவைப்பதில்லை, அவர்களையும் பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண்களுக்கு மாதவிலக்கு முடிவடையும் காலத்தில் ‘ஆஸ்டியோபோரோசிஸ்’எனப்படும் எலும்பு திறன் குறைவு நோய் ஏற்படுவது வழக்கம். இந்நோயின் காரணமாக எலும்புகள் போதிய சக்தியில்லாமல் எளிதில் உடையும் நிலையை அடைகின்றன.

பாவம் இளைய தலைமுறையினர்

சுண்ணாம்பு சத்து, விட்டமின் டீ ச்சத்து குறைவு போன்றவற்றால் இந்த நோய் ஏற்படுகிறது. ஒரு காலத்தில் வயதானவர்களை மட்டுமே தாக்கிய இந்த நோய் தற்போது இளம் சந்ததியினரையும் வாட்டி தைக்கிறது.

பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது, போதிய அளவு உடற்பயிற்சி செய்யாமை போன்ற காரணங்களால் ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ நோய் இளைஞர்களை தாக்கி வருகிறது.

கால்சியம் அதிகம் உள்ள பால், கீரைகள் போன்றவற்றை சாப்பிடாமல் இருப்பதும் இந்த நோய் தாக்குவதற்கு காரணமாக அமைகிறது.

மேலும் விட்டமின் டீ குறைபாட்டினாலும் முதுகெலும்பை தாக்கும் ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ நோய், பின்னர் கை, கால் என்புகளையும் பாதிக்கச் செய்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

எனவே, சத்தான உணவுகளை சாப்பிட்டால் இந்நோயிலிலிருந்து விடுபடலாம் எனக்கூறும் வைத்திய நிபுணர்கள் அதற்கான உணவுகளையும் பரிந்துரைத்துள்ளனர்.

பால் மற்றும் பால் பொருட்கள்

குறைந்த கொழுப்புச் சத்துள்ள பால் பொருட்களை சாப்பிட வேண்டும். சீஸ், யோகட், பன்னீர், போன்றவற்றில் கல்சியம் காணப்படுகிறது. இவற்றை சாப்பிட்டால், எலும்புகள் பலமடையும்.

விதைகள்

பாதாம், பிஸ்தா விதைகளில் உடலுக்குத் தேவையான தாதுப்புகள் உள்ளன. கல்சியம், மக்னீசியம், மங்கனீஸ், பொசுபரசு போன்றவைகள் காணப்படுகின்றன. இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் பாதிப்படையாமல் தப்பிக்கலாம்.

சத்தான காய்கறிகள், பழங்கள்


புருக்கோலி, முட்டைக்கோஸ், முட்டைக்கோவா, பீட்ரூட் போன்ற காய்கறிகளை தினசரி சேர்த்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.

விட்டமின் சி சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுவதும் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். தோடம்பழம், கொய்யாப் பழம், ஸ்ரோபரீஸ், வாழைப்பழம், அப்பிள் பழம் போன்றவை எலும்புகளை பாதுகாப்பாக வைத்திருக்கும்.

நல்லது நல்லது பேரீச்சம் பழம் நல்லது

பேரிச்சம்பழத்தில் கல்சியம், மங்கனீஸ் போன்றன உள்ளன. அதேபோல் தாமிரச்சத்துக்களும், மங்கனீசியமும் காணப்படுகின்றன. இது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

விட்டமின் டீ ச்சத்து

எலும்புகளின் வளர்ச்சிக்கும், சருமத்திற்கும் விட்டமின் டீ அவசியம். எனவே, விட்டமின் டீ ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். சூரிய ஒளியில் விட்டமின் டீ உள்ளது.

பருப்பில் இருக்கும் சத்து பற்றி அறிவீரோ

கருப்பு உளுந்து கல்சியம் சத்து நிறைந்தது. அதேபோல் சோயாபோஞ்சி , கொள்ளு போன்றவற்றில் கல்சியச் சத்து காணப்படுகின்றன.

அதேபோல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட மீன் உணவுகளை உட்கொள்ளலாம். உணவியல் நிபுணர்கள் கூறியுள்ள இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்பு உடைதல் நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com