ஜெனிவாவில் TNA எதை சாதிக்கப்போகிறது!
ஜெனிவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவினரால் எதையும் சாதித்துவிட முடியாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே இதனை அவர் வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு செவிசாய்க்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பம்மாத்துக் காட்டிக் கொண்டிருக்கிறது என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்பு மீது குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த வருடம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை கூட்டத் தொடரில் கலந்து கொள்ளாமல் இங்கிருந்து கடிதம் அனுப்பியதாகக் கூட்டமைப்புத் தெரிவித்தது. ஆனால் இவ்வருடம் நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு சென்றிருக்கின்றனர். அவ்வாறு அங்கு சென்றவர்கள் கொண்டு செல்லும் கோரிக்கை என்ன? இந்தத் தீர்மானம் பற்றியும், இங்கு நடந்த சம்பவங்கள் பற்றியும் சர்வதேசத்திற்கு முழுமையாகத் தெரியும். இருந்தும் இவர்கள் அங்கு சென்று என்னத்தைச் சொல்லப் போகிறார்கள்.
மக்களால் தெரிவு செய்யப்பட்டு மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லும் நீங்கள் மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை வெளிப்படுத்த வேண்டும். தமிழ் மக்களிடம் இருந்து என்ன கோரிக்கை வருகிறது என்று மூன்றாம் தரப்பாக சர்வதேசம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பம்மாத்துக் காட்டிக்கொண்டிருக்கின்றது. தற்போது உலகத்தையும், தமிழர்களையும் ஏமாற்றுகின்ற செயற்பாட்டையே கூட்டமைப்பு செய்து வருகின்றது. தமது அரசியல் நலனில் கண்ணை மூடிக்கொடு சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
0 comments :
Post a Comment