Tuesday, February 5, 2013

மோதலை துண்டி விட்டு அரசியல் செய்யும் கறுப்பு ஆடுகள் யார்!

இலங்கையின் சுதந்திர தினமாகக் கொண்டாடப்படும் நாள் தான் உலக புற்றுநோய் தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது. பெப்ரவரி 4-ஆம் திகதி, உலக புற்றுநோய் தினம். இந்த நாட்டின் இனப்பிரச்சினை என்பதும் ஏதோ புற்றுநோய் போலவே தீர்க்க முடியாத வியாதியாகத் தொடர்வது வேதனையளிக்கவே செய்கிறது. இதற்கான விழிப்புணர்வை நாம் உருவாக்கிக் கொள்வதற்கான தினமோ வாரமோ இன்னும் கைகூடவில்லை.

விவேகமிக்க மனிதர்கள் நிச்சயமாகப் போரைத் தவிர்ப்பர் என்பது கிரேக்கப் பொன்மொழி. இந்த விவேகம் கைகூடாத சண்டித்தன வக்கிரங்களின் மிச்சங்களே இன்னும் இங்கே ஒலித்தபடி உள்ளன. போர் முடிந்ததில் நிம்மதியுறாமல், மேலும் சண்டை நிலையைத்தக்க வைத்துக்கொள்ள என்னவெல்லாம் பேசமுடியுமோ அந்த விரோத வசனங்களே தமிழ் அரசியல் பேச்சாகத் தொடர்கிறது.

மக்கள் எதிரியை நினைத்து எந்நேரமும் விரோத - பயத்துடன் இருப்பதும், இடைவிடாமல் அவலங்களைச் சுமப்பதும் தான் அவர்களைப் போரை விரும்பும் நிலைக்குத்தள்ளும் மற்றைய சமூகங்க ளுக்கு எதிராக ஒன்றுதிரளும் ஆவேசத்தை உருவாக்கும் என்று இது காலவரை செயற்பட்ட விதத்தின் மாற்றமெதுவுமில்லாத நிலைதான் இப்போதும்.

தங்களது இனரோசத் தினவுகளுக்காக மக்கள் வாழ்வைச் சிதைப்பது குறித்த எந்த வெட்க உணர்வும் கிடையாது! இப்போதும் கூட, மக்களை நிம்மதியாக வாழவைக்க-சமூகத்தின் சீரழிவுப் பயணத்தை நிறுத்த எப்படி,யாருடன், என்ன பேச வேண்டும் என்ற தெளிவு வரவில்லை! வெளிநாடுகளின் நிகழ்ச்சிநிரலில் எங்களுக்கான விடிவும் இருக்கும் என்பதற்கு மேல் நம்மில் பெரும்பாலானோரால் சிந் திக்கவே முடியவில்லை.

மேலும் மேலும் எங்களை எதிர்க்குமாறு எதிர்த்தரப்பைச் சீண்டிக் கொண்டிருப்பதும், விரோத உணர்வை பிரமாண்டமாக்கிப் பிரசாரம் செய்வதும் சண்டைப்பிரியர்களின் தேவை. இதற்காக அவர்களுக்கு எதிர்த்தரப்பிலுள்ள தீவிரவாதமும், விரோத மனப்பாங்கும் நலிவுற்றுவிடாமல், அவற்றைத் தூண்டி வரவேற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

கிறிஸ்துவுக்கு முந்திய காலத்து கிரேக்க தொல்நாடகம் ஒன்றின் உரையாடல் பகுதியைப் வாசித்தபோது, மோதல் நிலையைத் தூண்டி விட்டு அரசியல் செய்பவர்களின் கருத்துகள் எப்போதும் ஒன்றுபோ லிருப்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது. அந்த நாடகத்தில் வரும் ஒரு உரையாடல் இது:

எதிரிகளாக அல்லாமல் நாம் நண்பர்களாக இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா? உங்கள் மீதான தாக்குதல்களை நாம் நிறுத்திவிட்டால் இரு தரப்பிலுள்ளோர்க்கும் அது நல்லது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வில்லையா?

இல்லை. எங்களுக்கு ஊறு விளைவிப்பது நீங்கள் காட்டும் பகைமை அல்ல. மாறாக, நாங்கள் உங்களுடன் நட்புடன் இருந்தால் எங்கள் குடிமக்கள் அது எங்கள் பலவீனம் என்று கருதுவார்கள். மாறாக, நீங்கள் எங்கள் மீது காட்டும் வெறுப்பும் பகைமையும்தான் எங்களது வல்லமைக்கான சான்றாக அமையும்.... சண்டையைக் கைவிட்டுப் பேச வருவதன் மூலம் பேரழிவைத் தடுக்க முடியக்கூடும்தான். ஆனால், எங்களைக் கோழைகளாக எண்ணிக்கொள்ள இடமளித்ததாகிவிடும். ஆகவே உங்களைக் கோபப்படுத்தவும் ரோசமூட்டவும் வேண்டியதையே நாம் செய்வோம். எங்கள் மீதான பகைமையை எக்காரணம் கொண்டும் இல்லாதொழித்து விடாதீர்கள். எதிரி இல்லாத ஒரு சூழலை நம்மால் கற்பனை செய்ய முடியாது. நாம் சாதாரண குடிமக்களைப் போலாகிவிடுவோம். அது வேண்டாம்.

இரண்டாயிரம் வருஷங்களுக்குப் பிறகான நமது சிந்தனையும் இன்னும் இதுபோலவே இருக்கிறது. இன மொழி தேசரோசங்களுக்காகச் சாகவும் சாகடிக்கவும் தயாராக இருக்கும் சண்டமாருதப் பேச்சாளர்களினுள் ஒளிந்திருக்கும் ஞாயங்களை விளங்கிக் கொள்வதே, மக்களும் சமூகமும் காப்பாற்றப்படுவதற்கான முதற்படி.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com