எப்போது கிடைக்கும் எமக்கு நிரந்தர சமாதானம்....!!!!!
இன்று ஆங்கிலேயரிடமிருந்து இலங்கை மக்கள் சுதந்திரம் பெற்ற நாள். சுதந்திரமாக வாழ விரும்புதல் எப்போதும் மனிதர்களிடம் இருக்கக் கூடிய அவாதான். ஆனால் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான முறைகளும் மனித நாகரிக வளர்ச்சியோடு மாறிவர வேண்டியவை.
அடிமைப் புரட்சிக் காலத்துக் கோட்பாடுகளை இன்றும் சுதந்திரத்திற்கான கோஷங்களாக ஒப்புவித்துக் கொண்டிருக்க முடியாது. ஒன்றினது சுதந்திரம் மற்றையதன் சுதந்திரத்தை மறுதலிப்பதன் மூலமே அடையப்பட முடியும் என்று உணர்ந்திருந்தவை அன்றைய மனித உயிர்கள். நேருக்கு நேராகவாளால் வெட்டியோ துப்பாக்கியால் சுட்டுக்கொண்டோ, நீயா நானா உயிர் வாழ்வது என்று தீர்மானித்துக் கொண்ட காலம் அது.
நாம் விவேக மனிதர்களாக மேலும் மேலும் முன்னேறி வளர்ந்து வந்துவிட்டோம். இன்று, ஒருவர் இன்னொருவரை அடக்காமல், ஆனால் இருவரும் சேர்ந்து வாழ்வதற்குரிய வழிமுறையைக் கண்டு கொள்ளுதலே சுதந்திரத்திற்கான மனித ஏற்பாடாக இருக்க முடியும் என்று புரிந்துகொண்டிருக்கிறோம்.
எனது சுதந்திரம் இன்னொருவரைக் காயப்படுத்துவதாக இல்லாமல் நான் பெற்றுக்கொள்வதற்கு, பேச்சின் முறையும் வழியும் தெரிந்த நாகரிக மனிதர்களாகி இருக்கிறோம். வாழ்க்கையின் மீது கனவை ஏற்றி யதார்த்தத்திலிருந்து தப்பித்துக்கொள்ள ஆவேசத்தையும் முரசங்களையும் நம்பிய காலத்தையும் கடந்து வந்துவிட்டோம்.
இதந்தரு மனையினீங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும் சுதந்திர தேவியைத் தொழுதிட மறக்கிலேனே என்கிற பாரதியின் உணர்வு எல்லோர்க்கும் இருப்பதுதான். ஆனால், சுதந்திரத்தையும் உரிமையையும் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளுக்கும், நாம் கடந்த காலத்தில் போய்நிற்க முடியாது. இன்றைய சூழலுக்கு ஏற்பத்தான் நாம் முயற்சிகளைச் செய்ய முடியும். இன்று நமது மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கவில்லை. பதுங்கு குழிகளுக்குள் பாயும் உயிர்ப் பய ஓட்டமில்லை.
இந்த நிலையில், மக்கள் பருப்பும் அரிசியும் கேட்கவில்லை; சுதந்திரம்தான் கேட்கிறார்கள் என்னும் தலைவர்களின் வாய் வீச்சு, மக்களைத் தியாகிகளாக்கிப் பிழைக்கும் ஏமாற்றுத்தான்! அவர்களைத் துயரங்களில் அழுத்திக் கதிரை அரசியல் செய்ய எண்ணும் குரூரம்தான்.
மக்களின் அன்றாடத் துன்பங்கள் தெரியாத, தங்களது வாழ் நிலையிலிருந்து இவர்கள் பேசுகிறார்கள். மக்களை மேலும் மேலும் கஷ்டங்களில் தள்ளுவதை மறைப்பதற்காக போதை வசனங்களை அவர்களுக்குத் தருகிறார்கள்.
மக்களுக்குச் சுதந்திர வாழ்வு கிடைப்பதைப் பறித்து, சுதந்திரத்திற்காக இன்னுமின்னும் கஷ்டப்படுங்கள் என்னும் ஆவேசப் பேச்சையே விதம் விதமாகத் தந்து கொண்டிருக்கிறார்கள். எவ்வளவுக் கெவ்வளவு மக்களின் துயர் கடுமையாகிறதோ அவ்வளவுக்கவ்வளவு கொள்கைப்பிடிப்பு வெறியேற்றிக் கொண்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.
இவர்களிடமிருந்து நாம் மீள வேண்டும். மற்றவர்களைச் சகித்துக்கொள்ளல் என்பதே நமக்குத் தேவைப்படுகிற மிக முக்கியமான மனத்தயாரிப்பு. நமது இருப்பும் வாழ்வும் மகிழ்ச்சியும் மற்றவர்களின் இருப்பையும் மகிழ்வையும் ஏற்றுக்கொள்வதிலும், அழித்தொழித் தல் ஆவேசங்களின்றி ஏற்றுக்கொள்ள வைப்பதிலும்தான் இருக்கிறது என்பதை உணரவேண்டும்.
மற்றவர்களுடன் பன்மைத் தன்மையான ஒரு சூழலில் வாழ்வ தற்கும் அதனால் இதம் பெறவுமான ஒரு மனோநிலையே நமது தேவை. இனத்தாலோ மொழியாலோ மதத்தாலோ கலாசாரத்தாலோ இன்னுமின்னும் நாம் காண்பித்துக் கொள்ளும் வித்தியாசங்களாலோ நம்மிடமிருந்து வேறுபடுகிறவர்களைத் தண்டிக்கும், அழிக்கும் உரிமையையோ ஆவேசத்தையோ எடுத்துக்கொள்ளாது, சேர்ந்து வாழ்தலை நாம் பழக வேண்டும்.
சுதந்திரத்தை நேசித்தல் என்பது இதுவாகத்தான் இருக்க முடியும்.
0 comments :
Post a Comment