Monday, February 18, 2013

நீதிமன்றினால் தப்பியது வீரப்பனின் கூட்டாளிகள் நால்வரின்; தலை, வருகிறது தூக்கு கயிறு ?

இன்று தூக்கில் இடப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வீரப்பனின் கூட்டாளிகளின் தூக்கு கயிறு நீதிமன்ற உத்தரவினால் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவர்களின் வழக்கை நாளை மறுநாள் (புதன் கிழமை) இந்த வழக்கு விசாரணை மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

அப்போது விரிவான மனுதாக்கல் செய்யப்பட உள்ளது. எனவே புதன்கிழமை மேல்முறையீடு மனு மீது இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரும் தூக்கில் இருந்து தப்புவார்களா? என்பது அன்று தெரிந்து விடும்.

கர்நாடகாவில் பாலாறு பகுதியில் கடந்த 1993-ம் ஆண்டு வீரப்பன் கோஷ்டியினர் நடத்திய கண்ணி வெடி தாக்குதலில் கூட்டு அதிரடிப் படையைச் சேர்ந்த 22 போலீசார் பலியானார்கள்.

இது தொடர்பாக வீரப்பன் கூட்டாளிகளான ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கை விசாரித்த மைசூர் தடா கோர்ட்டு, 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.

தண்டனையை எதிர்த்து 4 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர்.

ஆனால் கடந்த 2004-ம் ஆண்டு தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு 4 பேருக்கும் ஆயுள் தண்டனையை மாற்றி தூக்கு தண்டனை அறிவித்தது. இதையடுத்து வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரும் ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுத்தனர்.

அந்த மனுவை சமீபத்தில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி தள்ளுபடி செய்தார். தற்போது வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரும் கர்நாடகா மாநிலம் பெல்காமில் உள்ள சிறையில் உள்ளனர்.

கருணை மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு அவர்களை தூக்கில் போட ஏற்பாடுகள் நடந்து வந்தது. ஒரே நாளில் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற அதிகாரிகள் எல்லா ஏற்பாடுகளையும் செய்தனர்.

அசோக் என்ற ஊழியர் கடந்த 3 தினங்களாக தூக்கில் போடுவது தொடர்பான ஒத்திகையை பார்த்து வந்தார். 4 பேர் உடல் எடை அளவுக்கு மண்மூடையை தொங்க விட்டு அவர் பயிற்சி பெற்றார். டாக்டர்களும் 4 பேர் உடல்நிலை சீராக இருப்பதாக கூறி இருந்தனர்.

இதைத் தொடர்ந்து மைசூர் கோர்ட்டு 4 பேரையும் தூக்கில் போடும் தேதியை இன்று அறிவிக்க இருந்தது. இந்த நிலையில் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் சார்பில் வக்கீல் சமீக் நரேன் என்பவர் இன்று (திங்கட்கிழமை) காலை டெல்லி சுப்ரீம்கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மேல் முறையீடு மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் மீதான குற்றச்சாட்டு பற்றி மறு விசாரணை நடத்த வேண்டும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்குகளில் தொடர்புடையவர்களின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்து மறு விசாரணை நடத்த முன் உதாரணங்கள் உள்ளன. எனவே வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், அல்டமாஸ் கபீர், ஏ.ஆர்.தவே, விக்ரம்ஜித் சென் மூவரும், 'வருகிற புதன்கிழமை இந்த மனு மீதான விசாரணை நடைபெறும். அதுவரை வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரையும் தூக்கிலிட கூடாது'' என்று இடைக்கால தடை விதித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com