Monday, February 18, 2013

அரசியலுக்காக இனங்களை மோதவிடும் அரசியல் வாதிகள்!

வடக்கில் மீண்டும் ஆயுதக் கலாசாரத்தை ஏற்படுத்தி மக்களை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்ல சில சக்திகள் செயற்படுவதாகவும் அதற்காக அப்பாவி மக்களை காட்டிக் கொடுத்து அரசியல் செய்யும் சிலருக்கு மக்கள் துணை போய் விடக்கூடாது என்றும் வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் மன்னாரில் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 2 வது வலய சமுர்த்தி பிரிவில் 948 குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரண கொடுப்பனவுகளை முருங்கன் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் வழங்கி வைத்தார்.

நானாட்டான் பிரதேச செயலாளர் சந்திர அய்யா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் பேசுகையில் கூறியதாவது:இன்றைய சூழலில் தமிழ், முஸ்லிம் மக்கள் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களுக்கு என்னால் ஆற்றக்கூடிய அனைத்து பணிகளையும் செய்து வருகின்றேன். என்னில் இனவாதம், மதவாதம், மொழி வாதம் இல்லை. நானாட்டான் பிரதேச மக்கள் எதனை வேண்டி நிற்கின்றனரோ அதனை ஜனாதிபதியிடத்திலும், அமைச்சர் களிடத்திலும் இருந்து பெற்று வந்து தருகின்றேன்.

அரசாங்கத்தினால் இங்கு கொண்டுவரப்படும் அபிவிருத்தி திட்டங்களை இன்று ஒரு கூட்டம் ஒன்று சேர்ந்து தடுக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். எடுத்ததற்கெல்லாம் ஆர்ப்பாட்டம் அரச எதிர்ப்பு போராட்டங்கள் இனவாத சித்தாந்தங்கள் கூறி என்று அந்த கூட்டம் செயற்படுகின்றது. அவர்களுக்கு பின்னால் எமது மக்கள் செல்கின்றபோது எதனையும் அந்த மக்களால் பெற்றுக்கொள்ள முடியாது. வடமாகாணத்தில் முஸ்லிம்களும், தமிழர்களும் முரண்பட வேண்டும் என்பதே இவர்களின் தேவை. அன்று ஆயுத கலாசாரத்தை ஏற்படுத்தியவர்களுடன் பின்னால் இருந்த இவர்கள் இன்று ஒன்று மறியாத மக்களுக்கு உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கி அதனை ஊதி பெரிதாக்கி அவர்களது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ள முனைகின்றனர்.

நானாட்டான் பிரதேசத்தில் விவசாயிகளை பாதுகாக்கும் வகையிலும், அவர்களுக்கு தேவையானதை முறையாக பெற்றுக்கொடுக்கும் வகையில் திட்டங்களை தீட்டியுள்ளோம். அதற்கு 10 ஆயிரம் மில்லியன்கள் தேவையாகவுள்ளது. அதற்கு தேவையான நிதிகளை வெளிநாடுகளிலிருந்து பெற்றுத் தருவதற்கு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம்.சமுர்த்தி திட்டத்தின் மூலம் இந்த பிரதேச மக்கள் பல்வேறுபட்ட நன்மைகளை பெறவுள்ளனர். குறிப்பாக அவர்களது வாழ்வாதார வசதிகள், சுயதொழில் முயற்சிகளுக்கான உதவிகள், உள்ளிட்ட வங்கித் தொடர்புகள் என்பன அதில் முக்கியமானதாகும்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக், வடமாகாண ஆளுநரின் பிராந்திய ஆணையாளர் சம்சுதீன் லியாவுதீன், மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம். சியான், அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான அலிகான் ஷரீப், முணவ்வர், றிப்கான் பதியுதீன் உட்பட பலரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com