Sunday, February 24, 2013

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ரணில் நா ட்டை பிளவு படுத்த முயற்சியாம். சாடுகின்றார் பிரசன்ன ரணதுங்க.

நாட்டை இருகூறுகளாக பிளவுபடுத்த உடன்படிக்கை கைச்சாத்திட்ட எதிர்க்கட்சி தலைவர், இன்றும் வடபுலத்திற்கு சென்று, நாட்டை பிளவுபடுத்தவே பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாக, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எல்ரிரிஈ பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முன்னர், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வடபுலத்தில் வாழ்ந்ததை, எதிர்க்கட்சி தலைவர் மறந்துள்ளதாக, ஏகல பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் , அன்று ரணில் விக்ரமசிங்கவிற்கு வடபுலத்திற்கு செல்ல முடியவில்லை. இன்று அவருக்கு யாழ். குடாநாட்டுக்கு செல்ல முடிந்தது. வடபுல மக்களின் காணி நெருக்கடிகள் தொடர்பில், அவர் தமிழ் தேசிய்க கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்தி, அவற்றை மீள பெற்றுத்தருவதாக கூறியுள்ளார்.

யுத்தம் ஆரம்பமாகுவதற்கு முன்னர், வடபுலத்தில், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்ததை, அவர் மறந்துவிட்டார். எல்ரிரிஈ பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பின்னர், சிங்கள, முஸ்லிம் மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர். இருப்பினும், இம்மக்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில், ரணில் விக்ரமசிங்க எதுவித கருத்துகளையும் தெரிவிப்பதில்லை.

அன்று உடன்படிக்கையில் கைச்சாத்திடக்கூட, ரணில் விக்ரமசிங்கவிற்கு யாழ்ப்பாணத்திற்கு செல்ல முடியவில்லை. இன்று ஜனாதிபதி பெற்றுக்கொடுத்த சமாதானத்தினூடாக, யாழ்ப்பாணத்திற்கு சென்று, மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்தி, நாட்டை தாரை வார்கக முயற்சிக்கின்றார்.

யுத்தத்திற்கு முன்னர், இப்பிரதேசங்களில் அனைத்தின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்ததைக்கூட அவருக்கு அங்கு நினைவு கூறக்கூட முடியாத நிலை உள்ளது. இவர் ஒருபோதும், தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டு கருத்து தெரிவிப்பதில்லை. ஜெனீவா மாநாட்டை இலக்காகக் கொண்டே, இவரது கருத்துகள் அமைந்துள்ளன.

ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட முப்படையினர், எமக்கு நிரந்தர சமாதானத்தை பெற்றுத்தந்துள்ளனர். இவர்களை காட்டிக்கொடுப்பதற்கே, இவர் முயற்சிக்கின்றார். யுத்தத்தின்போது அனைத்து மக்களும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கியதை போன்று, நாட்டுக்கு எதிராக மேற்குலக சக்திகள் முன்னெடுத்துள்ள சூழ்ச்சிகளை தோற்கடிக்கவும், அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com