Sunday, February 3, 2013

நோபல் பரிசுக்கு மலாலாவின் பெயர் பரிந்துரை!!

2013ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தானை சேர்ந்த மலாலாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.பாகிஸ்தானின் பெண்களின் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த மலாலா, தலிபான்களால் சுடப்பட்டதால், உயிருக்கு போராடிய நிலையில் இங்கிலாந்து மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். பல மாதங்கள் சிகிச்சைக்கு பின்னர் தற்போது அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ள போதும், பிரிட்டனில் அகதிகள் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என நார்வே ஆளும் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர், நோபல் பரிசு வழங்கும் குழுவுக்கு மலாலாவின் பெயரை பரிந்துரை செய்துள்ளனர்.

பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தக்கை சேர்ந்த மலாலா யூசுப்சாய், அங்கு பெண்குழந்தைகள் பள்ளிக்கு செல்ல கூடாது, கல்வி கற்க கூடாது என விதிக்கப்பட்டிருந்த கடுமையான சட்டங்களை எதிர்த்து குரல் கொடுத்ததோடு இப்பிரச்சினையை ஊடக வெளிச்சத்திற்கும் கொண்டுவந்தார்.

கட்டுரைகளும் எழுதினார். இதையடுத்தே அவர் தலிபான்களால் சுடப்பட்டிருந்தார். எனினும் இவரின் துணிச்சலான செயற்பாட்டை அடுத்தும் அவர் கல்வி மீது கொண்டுள்ள தீராத தாகத்தினாலும் 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசினால் தேசிய சமாதான விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தார்.

இந்த வருடத்திற்கான நோபல் பரிசுக்கான பெயர்களை பரிந்துரைக்க நேற்றே கடைசிநாள் என்பதனால் சிறுமியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆஸ்லோவில் உள்ள அமைதி ஆய்வு நிறுவன தலைவர் பெர்க் ஹார்ப்விகென் கூறுகையில், அமைதிக்கான நோபல் பரிசுக்கு மலாலா பெயர் பரிந்துரைக்கப்படுவது இதுவே சரியான நேரம். மனித உரிமை, குழந்தைகள் கல்விக்காக போராடிய அந்த சிறுமியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது மிக சரியானது தான் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com