Friday, February 1, 2013

யுத்தத்தில் அழிக்கப்பட்டு மீண்டும் உயிர் பெற்றிருக்கும் கிளிநொச்சி மஸ்ஜிதுல் ஆப்தீன் ஜூம்ஆ பள்ளிவாசல் திறந்து வைக்கப்படுகிறது-பி.எம்.எம்.ஏ.காதர்-

கடந்த 30 வருடகால கொடிய யுத்தத்தில் அழிந்து போன பலவற்றில் கிளிநொச்சி ஆப்தீன் ஜூம்ஆப்பள்ளிவாசலும் ஒன்றாகும். 30 வருடங்களுக்குப் பின் இப்பள்ளிவாசல் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை (2012.02.01) திறந்து வைக்கப்படுகிறது. முஸ்லிம்களும் தமிழர்களும் மிகவும் அந்நியோன்யமாக வாழ்ந்த காலம் அது. அக்காலத்தை யாரும் இலகுவில் மறந்து விட முடிய. அதே போன்று தான் யுத்த காலத்தில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டதையும் இலகுவில் மறந்துவிட முடியாது.

இந்த நிலையில் கடந்த கால யுத்தத்தால் அழிக்கப்பட்ட இப்பள்ளிவாசல் தற்போது புதுப்பொலிவுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இப்பள்ளிவாசல் பற்றி வாசகர்கள் அறிந்திருப்பது பொருத்தமாகும்.

1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷ் இரண்டாம் எலிசபெத் மஹாராணியின் பணிப்புரையில் அவரது ஆளுநரினால் கிளிநொச்சி கண்டி வீதிக்கு அருகாமையில் (அரை ஏக்கர்) 80 பேர்ச்சஸ் நிலம் கிளிநொச்சியில் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் சமய வழிபாட்டு தலம் அமைக்க வழங்கப்பட்டிருக்கிறது.

அக்காலத்தில் கிளிநொச்சியில் காக்காகடைச் சந்தியில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இந்தியாவின் தோப்புத்துறை என்ற இடத்தைச் சேர்ந்த ஆப்தீன் காக்கா சேகுகாக்கா ஆகியோருடன் இக்காணி கையளிக்கப்பட்டிருக்கிறது.

அப்போது இந்தியர்களின் கடைகளில் கணக்குப்பிள்ளையாக ஏ.எல்.ஏ.சாகுல் ஹமீட் என்பவரும் விற்பனையாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அப்துல் ஹமீட் என்பவரும் கடமையாற்றியிருக்கின்றனர்.

அப்போது தான் இந்தியாவைச் சேர்ந்த வர்த்தகரான ஆப்தீன் காக்கா என்பவரின் பணச் செலவில் தொழுகைக்காக பள்ளிவாசல் கட்டப்பட்டது. அதனால் ஆப்தீன் என்பவரின் பெயரையே இப்பள்ளிவாசலுக்கு சூட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அதன் பின்பு 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி சமய விவகார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டது. பதிவு இலக்கம் R/889/kn/02 ஆகும்.

அதன் பின்னர் 1960ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி கிளிநொச்சி கச்சேரியின் அனுமதியுடன் முதலாவது நம்பிக்கையாளர் சபை அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நம்பிக்கையாளர் சபையில் இந்தியாவைச் சேர்ந்த ஆப்தீன் காக்கா, சேகு காக்கா, இஸ்மாயில் காக்கா போன்றோர் சபையில் அங்கம் பெற்றிருந்தனர். இவர்கள் இந்தியா சென்ற பின்னர் இலங்கையின் மருதமுனையைச் சேர்ந்த ஏ.எல்.ஏ.சாஹீல் ஹமீட் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அப்துல் ஹமீட் உள்ளிட்ட சிலர் நிர்வாகத்தை பொறுப்பேற்றனர். அவர்களுக்குப் பின்னர் பள்ளிவாசலோடு தொடர்புடைய ஒரு சிலரும் நிர்வாகிகளாக இருந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தான் 1996 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி புதன்கிழமை தங்கள் சொத்துக்களை இழந்து எல்லா முஸ்லிம்களும் விரப்பட்டமை மறுக்க முடியாததாகும்.

சுமார் 14 வருடங்களின் பின் அரசாங்கத்தின் போர் நிறுத்த காலத்தில் முஸ்லிம்கள் கிளிநொச்சிக்குச் சென்று தங்கள் காணிகளை அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதன் பின்பு 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின் அங்கு சென்ற மக்கள் தங்கள் காணிகளும் சொத்துக்களும் அழித்தொழிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2010 ஆம் ஆண்டு யூ.எல்.ஏ.வாஹித், எஸ்.எச்.சாஜஹான் (ஜே.பி), எம்.எஸ்.றாசிக் ஆகியோருடன் இன்னும் சிலர் ஒன்றிணைந்து இப்பள்ளிவாசல் அமைந்திருந்த காணியை இனங்கண்டு காணியை துப்பரவு செய்து தொழுவதற்கு சிறிய கொட்டிலொன்றை அமைத்தனர்.
இதன் பின்பு புதிதாகப் பொறுப்பேற்ற நிர்வாகம் எடுத்த முயற்சியின் பயனாக மெளலவி எம்.எல்.நெளபர் கபூரி தலைமையிலான நிதாஉல் ஹைர் நிறுவனத்தின் மூலமாக அழகிய பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இப்பள்ளிவாசல் இன்று (2013.02.01) வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படுவது புதிய வரலாற்றுத் தடயமாகும்.

படங்கள் 6. 1989 ஆம் ஆண்டு தோற்றம், 7, 8. 2004 ஆம் ஆண்டு காட்சி, 9. 2010 ஆம் ஆண்டு கொட்டில், 10. பள்ளிவாசலுக்கு சொந்தமான கடைத்தொகுதிகள் காட்சி, 11. 2012 காணித்துப்புரவாக்கும் காட்சி, 12. 2013 புதிய பள்ளிவாசல்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com