Friday, February 15, 2013

உங்கள் நண்பர்கள் எமக்கும் நண்பர்கள், உங்கள் எதிரிகள் எமக்கும் எதிரிகளே -பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன்


உங்கள் நண்பர்கள் எமக்கும் நண்பர்கள், உங்கள் எதிரிகள் எமக்கும் எதிரிகளே என பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், பாகிஸ்தான் பிரதமரான ராஜா பெர்வேஷ் அஷ்ரப்பிடம் தெரிவித்துள்ளார்.நேற்று செவ்வாய்க்கிழமை இங்கிலாந்துக்கு விஜயம் செய்த பாகிஸ்தான் பிரதமர் ராஜா பெர்வெஷ் அஷ்ரஃப் பிரித்தானிய பிரதமரை சந்தித்து பேசினார்.நேற்று லண்டனில் உள்ள 10 டவுனிங் வீதியில் அமைந்திருக்கும் பிரதமர் இல்லத்தில் இருவருக்கும் இடையே இச்சந்திப்பு நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள், மற்றும் இராஜ தந்திர உறவுகள் என பல விடயங்கள் இருவருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டன.

இதன் போது ஆப்கானிஸ்தான் தொடர்பில் கருத்துரைத்த பாகிஸ்தான் பிரதமர் அஷ்ராப், ஆப்கானின் உயர் சமாதானக் குழுவுடன் இணைந்து அங்கு ஸ்திரத்தன்மை ஏற்பட பாகிஸ்தான் விரும்புகின்றது. ஆப்கானில் குடியிருந்த நேட்டோ உட்பட சர்வதேச படைகள் அங்கிருந்து மெல்ல மெல்ல விடைபெறும் நிலையில் அங்கு அமைதியைக் காப்பதற்கு ஆப்கான் இராணுவம் இன்னமும் தங்களை வலிமைப் படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.

சமீபத்தில் ஆப்கான் அதிபர் கர்சாயியும் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியும் இலண்டனில் சந்தித்து தலிபான்களை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததை கெமரூன் வரவேற்றார். மேலும் இவ்வருடம் கோடைக் காலத்தில் இது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தான் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ளதையும் கெமரூன் தெரிவித்தார்.

கெமரூனும் அஷ்ரஃப்பும் இந்தியா குறித்துப் பேசிக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது. இது தொடர்பாகக் கெமரூன் கூறுகையில்,'ஆசியாவின் மிகப் பெரும் சக்திகளில் அடங்கும் இந்தியாவும் பாகிஸ்தானும் தமக்கிடையே வர்த்தக உறவுக்கான கதவைத் சுதந்திரமாகத் திறந்து வைத்தால் ஒருமித்த பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியும்.' என்றார்.

இதேவேளை ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளுக்கு குறைந்த வரியில் ஏற்றுமதிப் பொருட்களை விற்கும் வகையில் அதனுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு உதவி செய்தமைக்காக அஷ்ரஃப் தனது நன்றிகளையும் கெமரூனுக்குத் தெரிவித்துக் கொண்டார்.

1 comments :

Arya ,  February 15, 2013 at 4:33 AM  

Hehehehe , is india enamy to both ???????????????

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com