Friday, February 1, 2013

மன்னாரில் ஆரம்பமாகியது 2ம் கட்ட எண்ணெய் அகழ்வு!


மன்னார் கடற்பரப்பில் இரண்டாம் கட்ட எண்ணெய் அகழ்வின் நான்காவது எண்ணெய்க் கிணற்றின் அகழ்வு வேலைகளை கெய்ன் லங்கா நிறுவனம் இன்று முதலாம் திகதி ஆரம்பிக்கிறது.கெய்ன் இந்தியா மற்றும் கெய்ன் லங்கா நிறுவனங்களின் தொடர்பாடல் தலைவர் கலாநிதி சுனில் பாரதி இன்று முதலாம் திகதி முதல் அகழ்வு வேலைகளை தமது நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

கற்பிட்டி கடற்பரப்பிலிருந்து 22 கிலோ மீற்றர் (கடல்) தொலைவிலேயே அகழ்வு வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இக்கிணறு CLPL Wallago என பெயரிடப்பட்டுள்ளது.தோண்டப்படவுள்ள இக்கிணறு கடலிலிருந்து ஒரு கிலோ மீற்றர் ஆழத்திலும் மூன்று கிலோ மீற்றர் கடல் படுகையிலிருந்தும் அமைந்துள்ளது.

தர்க்க ரீதியாக நோக்கும் போது இக்கிணற்றில் எரிவாயு காணப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்றும் அங்கு எண்ணெய் இல்லை என்று கூற முடியாது என்றும் பேச்சாளர் சுனில் பாரதி தெரிவித்தார்.சிங்கப்பூரை தளமாகக் கொண்ட பிரான்ஸ் ஓஷியன் நிறுவனத்தைச் சேர்ந்த டிஸ்கவர் செவன் சீஸ் என்ற கப்பலை பயன்படுத்தியே அகழ்வு வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

6500 அடி ஆழம் வரையில் அகழ்வு பணிகளை மேற்கொள்ளும் வசதி கொண்டதாக கப்பல் அமைந்துள்ளது. அகழ்வு பணிகளில் ஈடுபடுவதற்காக நூற்றுக்கும் அதிகமான நிபுணத்துவம் கொண்டவர்களும் கப்பலில் தயார் நிலையில் உள்ளனர்.எண்ணெய் அகழ்வு பணிகளுக்கென 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இதுவரை முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இம்முதலீடு மேலும் அதிகரிக்கப்படலாம். அத்துடன் உள்ளூரில் பெற்றுக்கொண்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக 12.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக கெய்ன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

600 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் 3ளி தரவுகள் மூலம் அதிர்வுகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டதுடன் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இவ்வருட நடுப்பகுதியில் மேற்கொள்ள ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் அகழ்வுப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் துளையிடும் கப்பல் முற்கூட்டியே கிடைத்தமையும் ஒருங்கமைப்பு நடவடிக்கைகள் மிக சிறந்த மட்டத்தில் காணப்பட்டமையுமே அகழ்வு நடவடிக்கைகளை துரிதமாக ஆரம்பிக்க காரணங்களாக அமைந்தது.

கெய்ன் லங்கா மன்னாரில் மேற்கொண்ட முதலாவது கட்ட அகழ்வு பணிகளின் முடிவுக்கமைய CLPL NORADO 91 H / 1Z 91 H1Z மற்றும் CLPL BARRACUDA 1G / 1 ஆகிய இரண்டு கிணறுகளிலிருந்து எரிவாயு கண்டெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com