Wednesday, January 30, 2013

சீனாவில் iPad விற்பனைக்கு எதிராக வழக்கு- உற்பத்திகள் பறிமுதல்

iPad விற்பனை உலகச் சந்தையில் சூடாக இருக்கும் நிலையில், iPad டேப்லெட் தயாரிப்பாளர் ஆப்பிள் நிறுவனத்துடன் சட்ட யுத்தத்தில்
இறங்கியுள்ளது ஒரு சீன நிறுவனம். உலகச் சந்தையில் iPad விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீன நிறுவனம் வழக்கு தொடர்ந்ததில், சீனாவின் சில பாகங்களில் iPad விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது. விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த iPad டேப்லெட்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

iPad தயாரிப்பாளர் ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள சீன நிறுவனத்தின் பெயர் ஷென்ஸென் ப்ரெவியூ டெக்னோலஜி.

iPad என்ற பெயர் (ட்ரேட்-நேம்) ப்ரெவியூ டெக்னோலஜி என்ற இந்த நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2001-ம் ஆண்டே iPad பெயரை சீன நிறுவனம் பதிவு செய்து, தனக்கு உரிமையாக்கி கொண்டுள்ளது. அதே பெயரில் ஆப்பிள் நிறுவனம் தமது டேப்லெட்டை விற்பனை செய்வது சட்டவிரோதமானது என்பதே சீன நிறுவனம் தொடர்ந்துள்ள வழக்கு.

இதில் வேறு ஒரு முக்கிய விவகாரமும் உள்ளது.

iPad என்றதும் ஆப்பிள் நிறுவனத்தின் பெயர்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். ஆனால், உண்மையில் அந்தப் பெயரின் ஒரிஜினல் உரிமையாளர் ஆப்பிள் அல்ல. தாய்வான் நிறுவனம் ஒன்றிடம் இருந்தே iPad என்ற பெயரை பணம் கொடுத்து வாங்கி, அதைப் பிரபலப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம். அந்த தாய்வான் நிறுவனமும், தற்போது வழக்கு தொடர்ந்துள்ள சீன நிறுவனமும் சகோதர நிறுவனங்கள்.

அரசியல் ரீதியாக தாய்வானை ஒரு நாடாக சீனா இன்னமும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், தாய்வானில் நடைபெற்ற விற்பனை சீனாவில் சட்டப்படி செல்லுபடியாகாது என்ற பாயின்டை வைத்திருக்கிறது சீன நிறுவனம். இதனால், சீனாவில் iPad என்ற ட்ரேட் நேமின் உரிமையாளர்கள் நாமே என்கிறது ப்ரெவியூ டெக்னோலஜி நிறுவனம்.

iPad என்ற பெயர் சீனாவிலும் தமக்கே சொந்தம் என்று ஆப்பிள் நிறுவனம் கடந்த வருடம் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்து தீர்ப்பளித்தது ஒரு சீன நீதிமன்றம்.

தற்போது iPad விற்பனை சூடுபிடித்துள்ள நிலையில், மீண்டும் கோர்ட்டுக்கு போய்விட்டது சீன நிறுவனம். கோர்ட் உத்தரவின்படி, சீனாவின் செங்சோ நகரம் உட்பட, மொத்தம் 8 நகரங்களில் ஆப்பிள் நிறுவன தயாரிப்பான iPad டேப்லெட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அடுத்த சில தினங்களில் 40 நகரங்களில் இதே நடவடிக்கையை சீன நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.

சரி. சிக்கல் சீனாவில் மட்டும்தானே.. இதனால் iPadன் உலக விற்பனை எப்படி பாதிக்கும்?

இங்குதான் உள்ளது மற்றொரு விவகாரம். ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பாக iPad விற்பனையானாலும், அதன் தயாரிப்பு தொழிற்சாலைகள் அமைந்திருப்பது அமெரிக்காவில் அல்ல.. சீனாவில்! தயாரிப்பு செலவு குறைவு என்பதால் சீனாவில் வைத்தே அவற்றைத் தயாரிக்கிறது ஆப்பிள்.

இப்போது சீன நிறுவனம் தொடுத்துள்ள வழக்கில், iPad என்ற பெயரில் சீனாவில் விற்பனை செய்யக்கூடாது என்பதுடன் நின்றுவிடவில்லை. அந்தப் பெயரில் தயாரிப்பு வேலைகளோ, ஏற்றுமதியோகூட செய்ய முடியாது என்கிறது.

தமக்கு உரிமையான பெயரில் வெளிநாட்டு நிறுவனம் (ஆப்பிள்) டேப்லெட்களை தயாரித்து, ஏற்றுமதி செய்வதை நிறுத்துமாறு கஸ்டம்ஸ் இலாகாவுக்கு உத்தரவிடுமாறு கோர்ட்டை கேட்டுக் கொண்டிருக்கிறது சீன நிறுவனம். கோர்ட் அப்படியொரு உத்தரவு கொடுத்தால், சீனாவில் இருந்து iPad ஏற்றுமதி நின்றுபோகும். உலகச் சந்தையில் iPad கிடைக்காத நிலை ஏற்படும்.

சரி. இதற்கு தீர்வு என்ன?

வழக்கு தொடுத்துள்ள சீன நிறுவனமும், iPad என்ற பெயரின் ஒரிஜினல் உரிமையாளரான தாய்வான் நிறுவனமும் சகோதர நிறுவனம் என்று சொன்னோம் அல்லவா? இரண்டுக்கும் ஒரே உரிமையாளர். அவரது பெயர், யாங் லொன்-சாங். இவர் இப்போது கடும் பணமுடையில் உள்ளார். இவரது நிறுவனங்கள் மில்லியன் கணக்கான டாலர் கடனில் உள்ளன.

இவர் தமது கடன்களில் இருந்து விடுபடக்கூடிய தொகை செட்டில்மென்ட் ஒன்றுடன் ஆப்பிள் நிறுவனம் வரும் என்று எதிர்பார்க்கிறார். ஆப்பிள் பணம் கொடுத்து இவரது வாயை அடைக்காவிட்டால், உலகச் சந்தையில் iPad மார்க்கெட் ஷேரை இழக்கும்!.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com