Thursday, January 17, 2013

கொல்லப்பட்ட ரிஸானா நபீக்கும், தோற்கடிக்கப்பட்ட சரிஆ சட்டங்களும். -யஹியா வாஸித்-

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். மூச்சுவிடும் அனைத்து ஜீவராசிகளும் மவுத் என்ற பானத்தை அருந்தியே ஆக வேண்டும்.

இது ஒரு தர்பார். காட்டு தர்பார். 2770 கிலோ மீற்றருக்கப்பால் இருந்து, தன் வீட்டுக்கு, வேலைக்கு வந்த ஒரு சின்னஞ்சிறு குருவியை, கழுத்தை வெட்டிக்கொன்ற வறட்டுத்தனம். மதம் எனும் பெயரில், மதம் பிடித்தலையும் ஒரு இனத்தின் கொடூரச்செயல். ஆ என்றால் மனித உரிமை அமைப்புகள், ஊ என்றால் அம்னஸ்டி இன்டர் நெஷனல், அநீதியா, பெண்களுக்கா, விட்டோமா பார் என மாராப்பை மடித்துக்கட்டிக்கொண்டு நிற்கும் பெண்கள் அமைப்புக்கள் என எல்லாம் இருந்தும், ஓ... அவர்களா. அவர்கள் முஸ்லீம்கள், அவர்கள் இஸ்லாமியர்கள். அவர்களுக்கென்று தனியான சரீஆ சட்டங்களும். தனியான கோர்ட்டுக்களும் இருக்கின்றன. அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.


ஆம் மொத்த உலகமும் கப்சிப். ரிஸானா மவ்த். “அல்லாஹ்” அந்த குழந்தைக்கு சுவர்க்கத்தை கொடு நாயனே, என மொத்த சிறிலங்கா சிங்களவனும், தமிழனும், சோனவனும் ஜாதி, மத, பேதமின்றி அழுததைத் தவிர வேறு ஒரு துரும்பையும், எந்தப்பிசாசாலும் அசைக்க முடியவில்லை.

அப்படி என்றால், அந்த பரந்த பாரசீக மண்ணில் வாழும் மொத்த அரபிகளும், முழுக்க முழுக்க ஆண்டவனின் பிள்ளகைளா ? இப்படித்தான் இன்று மெளனமாக வெம்பி வெடித்தலையும் அத்தனை ஜீவன்களும் பொருமுகின்றன.

வணக்கத்துக்கு பாத்திரமான நாயன் அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன், அவனுக்கு உருவமில்லை. அவனது திருத்தூதர் முகம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள். இந்த முகம்மது நபி அவர்கள் எதைச் சொல்கின்றாரோ அல்லது சொன்னாரோ அதை பின்பற்று அதுதான் இஸ்லாம். அவர் எனது ஒன்மேன் ஆமி. அல்ஹம்துலில்லாஹ் ( எல்லாப் புகழும் இறைவனுக்கே ).இந்த முகம்மது நபி (ஸல்) அவர்கள் எதைச்சொன்னாரோ, அதை இந்த உலக முஸ்லீம்கள் பின்பற்றுகின்றனர். பின்பற்ற வேண்டும் என்பதும் இறைநியதி.

இந்த முகம்மது நபி அவர்கள் அரபு நாடான சவூதி அரேபியாவில் உள்ள, மக்கா எனும் இடத்தில் பிறந்து மதீனா என்ற இடத்தில் வளர்ந்ததாலும், அவருக்கு முன்னர் தோன்றிய ஆதம் (அலை) அவர்கள் தொடக்கம் பல ஆயிரம் நபி மார்களும் அதே அரபி மண்ணில் தோன்றி வாழ்ந்ததாலும், மூடி முக்காடு போட்டுக்கொண்டு திரியும் இந்த மொத்த அரபிக்களும் நியாயவாதிகளா என்பதை கொஞ்சம் உள்ளே புகுந்து ஆராய்வதே இந்த கிறுக்கலின் நோக்கம்.

ஆணுமற்ற, பெண்ணுமற்ற, கண்ணுக்கு புலப்படாத, அந்த இறைவனுக்கு ஒரு ஆசைவந்தது. தானும், தன்னை சுற்றி ஒளியினால் படைக்கப்பட்ட மலக்குகள் ( தேவர்கள் ) கொஞ்சம் பேரும், காலா காலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோமே, கொஞ்சம் வித்தியாசமாக, பூமியைப்படைத்து, அதில் மரம், செடி, கொடிகளைப் படைத்து, மக்களையும் படைத்து, ஒரு திருவிளையாடல் நடாத்தித்தான் பார்ப்போமே என அல்லாஹ் ( கடவுள் ) ஆசைப்பட்டார். ஞானப்பழத்தை காட்டி, பிள்ளையாரிடமும், முருகனிடமும், சிவன் திருவிளையாடல் நடாத்த ஆசைப்பட்டதுபோல், எங்கள் அல்லாஹ்வும் ஒரு நீண்ட திருவிளையாடல் நடாத்த ஆசைப்பட்டார். அந்த ஆசை ஆதம் அலை அவர்களில் தொடங்கி, இப்றாகீம், இஸ்மாயீல் என கிளைவிட்டு, நபி முகம்மது அவர்களுடன் முடிவுற்று, பின்னர் அலி றலி, உதுமான் றலி என கலிபாக்களால் வழி நடாத்தப்பட்டு, இப்போது நாங்கதான் இந்த நாட்டுக்கு ராசா, நாங்க சொல்றதுதான் சட்டம், என்கின்ற ஒரு சாராரின் கையில் இருந்து கொண்டு சின்னா பின்னப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இனி, ரிஸானாவிடம் வருவோம். ரிஸானா என்ன மகிந்த ராஜபக்ஸ அவர்களின் மகளா விசேட விமானம் அனுப்பி அழைப்பிக்க. அல்லது விலைக்கு வாங்க வேண்டியவர்களையெல்லாம் விலைக்கு வாங்கி, மூன்றில் ரெண்டு பெரும்பான்மையில் மேட்டரை முடிக்க. ஜஸ்ட் சோத்துக்கு வழியில்லாமல், பிச்சை எடுக்கவும் முடியாமல், உவ்வாவுக்காக, பேரைமாற்றி, வயதை மாற்றி, பத்தோடு பதினொன்றாக பிழைக்கப்போன ஒரு வேலைக்காறி. வீட்டு வேலைக்கு என மலையகத்தில் இருந்து வரும் பெண்பிள்ளைகளை, இங்கு சிறிலங்காவில் உள்ள புதுப்பணக்காற வர்க்கம், குறிப்பாக முஸ்லீம்கள் எப்படி நடாத்துகின்றது என்பதையும், கீழ் சாதிக்காறரை மேல்சாதி ஹிந்துக்கள் என கூறிக்கொள்பவர்கள் யாழ்ப்பாணத்தில் எப்படி நடாத்துவார்கள் என்பதையும் கொஞ்சம் கற்பனை பண்ணி பார்த்துக் கொள்ளுங்கள். நாயை விட கேவலமாக நடாத்துவார்கள். நமது வள்ளல்கள்.

இதைவிட கேவலமாகத்தான் அரபு நாடுகளில் உள்ள 99 வீதமானவர்கள் நமது நாட்டவரை நடாத்துகின்றார்கள். குறிப்பாக சிறிலங்கா, இந்தியா, பாகிஸ்தான், பங்காள தேசம், பிலிப்பைன், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து வரும் வீட்டு வேலைக்காறர்களை அவர்கள் மனிதர்களாக மதிப்பதே இல்லை. மிஸ்கீன்கள் என்றே அழைப்பார்கள். ஆம் சோத்துக்கு வழியில்லாமல் பிச்சை எடுக்க எங்கள் நாட்டுக்கு வந்தவர்கள் என்றே கூறிக்கொள்வார்கள். முகத்தில காறி துப்புவார்கள், செருப்பை கழட்டி அடிப்பார்கள், பார்த் றூம்களில் நாள்கணக்கில் உணவின்றி பூட்டி வைப்பார்கள், கறண்டிகளை சூடேற்றி உடம்பில் சுடுவார்கள். நமது ஏழ்மை மொத்த தண்டனையையும் சகித்துக்கொள்ளும்.

நமது வாய் எதிர்க்கேள்வி கேட்க துள்ளும், உடம்பு ஒரு அடி முன்னேறி எதிர்கொள்ள தயாராகும், ஆனால் வீட்டு உறுதியை ஈடு வைத்து ஏஜென்ஸிக்கு கட்டிய பணம் எலும்பை முறிக்கும், அட்வான்ஸ்லெவல் படிக்கும் சின்னத் தம்பியின் ரியூசன் பீஸ் வந்து இதயத்தை பிளியும், கால்வலியால் அவதிப்படும் வாப்பாவின் கவலைதரும் சாயல் மனக்கண்முன்னே வந்து மண்டியிடம். இங்கு படும் அனைத்து வேதனைகளும் பஞ்சாய் பறந்து போகும். அரபிநாடுகளில் சரீஆ சட்டம் என்ற பெயரில் கற்பையிழந்த நம்நாட்டு கண்ணகிகள் ஏராளம், ஏராளம்.

என்ர வீட்டு வேலைக்காறி நீ, என்வீட்டுக்கு வேலைக்கு வந்தவள் நீ, உனக்கு என்ன மன்னிப்பு நான் வழங்குவது. உனக்கு நான் மன்னிப்பு வழங்கினால், என் கவுரவம் என்னாவது. செத்துப் போ சனியனே. இதுதான் அந்த சவூதி அரேபிய தம்பதிகளின் தீர்க்கமான தீர்வு. அயல் வீட்டாரையும் உன்வீட்டாரைப் போல் நேசி, உன் எதிரியிடமும் அன்புகாட்டு என்று போதித்த இஸ்லாம் தோன்றிய மண்ணில் காட்டு மிராண்டித்தனமான ஒரு முடிவு. இதே சவூதி அரேபியாவின் மன்னரின் மகன், கடந்த மூன்று வருடத்துக்கு முன், இங்கிலாந்தில் லண்டன் மாநரில் உள்ள ஒரு பிரபல்யமான ஹோட்டலின் லிப்ட்டுக்குள் வைத்து, தனது கறுப்பு வேலைக்காறரை அடித்துக்கொன்றதையும், இன்று ரிஸானா விடயத்தில் சரிஆ சட்டம் தனது கடமையைச் செய்தது என நியாயம் பேசும் மொத்த உலமாப் பெருமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். அவ்வேளை இவர்களது சரிஆச் சட்டங்களும், மார்க்கத்தீர்ப்புகளும் மௌனித்து மௌத்தாகியது வேடிக்கையான ஒரு விடயம்.


இன்றும் யூரியூப்பை தட்டினால் இவர்களது சரிஆச் சட்டங்களின் மாட்சிமைகளை காணலாம்.( youtube – telugu womens life made hell in dubai, Saudi prince in night club spend one million dollar, Saudi prince killing his servant )

இப்படியான யோக்கியர்களிடம்தான், நாம் எங்கள் குழந்தை ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்குங்கள் என மன்றாடினோம். இவர்கள் மன்னிப்பு வழங்கக் கூடியவர்களா ? மன்னிப்புக்கும் இவர்களுக்கும் பல காத மைல்தூரம் என்பதை இறைவன், முகம்மது நபியை அந்த அரபி மண்ணுக்கு தூதுவராக அனுப்பும் போதே அறிவித்துவிட்டான். ஆம் இந்த பரந்த உலகில் திருத்த முடியாத, அதாவது பிறந்த பெண்குழந்தைகளை சுடுமணலில் புதைக்கின்ற, அடிமை வியாபாரத்தை தனது தொழிலாக செய்கின்ற, எவராலும் திருத்த முடியாத ஒரு சமூகம் பாரசீகத்தில் இருக்கின்றது. முதலில் அவர்களை திருத்த வேண்டும் என்று சொல்லித்தான் இறைவன், தனது தூதராக முகம்மது நபியை அந்த மண்ணுக்கு அனுப்பினான்.

அந்த முகம்மது நபியையே உண்டு இல்லை என பண்ணிய மண்ணின் மைந்தர்கள்தான் இன்று, அந்த பாரசீகத்தையும், அதைச்சுற்றியுள்ள தேசங்களையும், இஸ்லாத்தால் முற்றாக வெறுக்கப்பட்ட மன்னராட்சியை செய்து கொண்டு, சரிஆச் சட்டங்களை தமக்கேற்றவாறு, புகுத்திக்கொண்டு ஆட்சி செய்துகொண்டிருக்கின்றனர். இதை தட்டிக்கேட்க நாதியற்ற, அவர்களிடம் கையேந்தும் ஒரு சமுகமாகத்தான் மொத்த முஸ்லீம்களும் வாழ்ந்துகொண்டு, அல்லாஹ் பார்த்துக்கொள்வான் என்ற ஒரு தந்திரமான முக்காட்டுக்குள் ஒளிந்து கொள்கின்றார்கள்.

இங்கு ஒரு விடயத்தில் அல்லாஹ்வை பாராட்டத்தான் வேண்டும். ரிஸானா என்கின்ற அந்த சின்னஞ்சிறு பட்டாம் பூச்சியை வைத்து எங்கேயோ, எவ்விடத்திலோ ஒரு ஆட்டத்தை தொடங்கியுள்ளான். இது ரிஸானா இல்லாமல் ஒரு ஆரியவதியாகவோ அல்லது ஒரு பெரேராவாகவோ இருந்திருந்தால், நேற்று அனுராதபுர பள்ளிவாசலுக்குள் பெரஹரா நடாத்தியவர்கள், இன்று தெமட்டகஹா மர பள்ளிவாசலுக்குள் சாமி ஆடியிருப்பார்கள். அதற்கும் நமது உலமாக்கள் ஒரு பக்கமும், மெத்தப்படிச்ச அரசியல்வாதிகள் இன்னொரு பக்கமும் இருந்து கொண்டு, கழுவின மீனில நழுவின மீன் கதை சொல்லியிருப்பார்கள். ஆம் அல்லாஹ் போதுமானவன். தெட்டத்தெளிவானவன்.

Telugu women's life made hell in Dubai - Part 1Telugu women's life made hell in Dubai - Part 2Telugu women's life made hell in Dubai - Part 3Saudi Prince in Night Club spend one million dollar

Saudi prince killing his servantyahiyawasith@ymail.com

17-01-2013

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com