Wednesday, January 30, 2013

தீர்வுக்கு ஒத்துழைக்கும் கட்சிகளுடன் இணைந்து தமிழர்களுக்கு ஒரு தீர்வை தாருங்கள் ஜனாதிபதியிடம் கேட்டார் டக்ளஸ்

தமிழர்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஒத்துழைக்காமல் அடம் பிடிக்கும் அரசியல் கட்சிகளுக்கு இம் முயற்சியில் இணைந்துகொள்வதற்கு காலக்கெடு ஒன்றை விதிக்கவேண்டும். குறித்த கால எல்லைக்குள் அவர்கள் ஒத்துழைக்காவிடின் அவர்களைத் தவிர்த்துவிட்டு ஏனைய கட்சிகளுடன்பேசி தமிழர்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வை எட்டவேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற மேற்படி ஜனாதிபதியுடனான விஷேட சந்திப்பின் போது, தாம் விடுத்த கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விஷேட கவனம் செலுத்துவார் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான இச்சந்திப்பின் போது பின்வரும் விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.

• இறுதி யுத்தத்தின்போது சரணடைந்து, தொடர்ந்தும் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களில், இதுவரை விடுவிக்கப்படாதவர்களை விரைவாக அவர்களது பெற்றோர்கள், உறவினர்களிடம் ஒப்படைத்தல்.

• புனர்வாழ்வு பெற்று வரும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை அவர்களது பெற்றோர்களிடம்
ஒப்படைப்பதை தொடர்ந்தும் முன்னெடுத்தல்.

• இடம் பெயர்ந்த மக்களில் மீளக்குடியேற்றப்பட்டவர்களுக்கான மேலும் விஷேட வாழ்வாதாரத் திட்டங்களை முன்னெடுத்தல்.

• புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் உட்பட அனைத்து இயக்கங்களிலும் இருந்த முன்னாள் உறுப்பினர்களுக்கும் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்குதல்.

• ஜனாதிபதியின் விஷேட நிதி ஒதுக்கீட்டில் தொழிற்சாலைகள், மற்றும் கைத்தொழில் நிறுவனங்களை வடக்கில் நிறுவுவதன் மூலம் வேலையற்ற இளைஞர் , யுவதிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல்.

• வட மாகாணத்திற்கான தேர்தல் நடைபெறும் வரை, மாகாண நிர்வாக செயற்பாடுகளை கண்காணிப்பதில் கவனம் செலுத்துதல்.

• இந்திய இழுவலைப் படகுகளின் வருகை காரணமாக வட பகுதி வாழ் கடற்றொழிலாளர்கள் முகங்கொடுக்கும் தொழில் ரீதியான மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணுதல்.

• உள்நாட்டினுள்ளேயே ஒரு பிரதேசத்து கடற்றொழிலாளர்கள், இன்னொரு பிரதேச மக்களின் கடல் எல்லைக்குள் கடற்றொழிலில் ஈடுபடுவதால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு தீர்வு காணுதல்.

• புலம் பெயர்ந்து வாழும் தமிழ் பேசும் மக்கள் இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான இலகு நடைமுறையினை துரிதப்படுத்துதல். இதனூடாக இவர்களுக்கு தமது தாய்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கும், தங்களது ஆற்றல்களை தாய்நாட்டின் அபிவிருத்தி மற்றும் சமூக நலன் சார்ந்து பயன்படுத்துவதற்கும், இந்நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் அரசியலை முன்னெடுப்பதற்கும், அதனூடாக தங்களுக்கு வேண்டிய, சரியான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கும் வாய்ப்பளித்தல்.

• அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் தொடர்ந்தும் ஒத்துழையாமையை கடைப்பிடித்து வரும் கட்சிகளுக்கு, குறிப்பிட்ட காலக்கேட்டை வழங்குவதோடு, அக்கட்சிகள் தொடர்ந்தும் ஒத்துவராத பட்சத்தில், பங்களிப்பு வழங்குவதற்கு முன்வரும் அரசியல் கட்சிகளோடு பேசி அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காணுதல்.

• வடக்கின் சுதந்திரமான சிவில் நிர்வாக செயற்பாடுகளில் படையினரின் ஒத்துழைப்பை மேலும் அதிகமாக வலுப்படுத்துதல், ஆகிய விடயங்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ‌ அவர்களிடம் எடுத்து விளக்கியிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இது போன்ற ஜனாதிபதி அவர்களுடான விஷேட சந்திப்புகள் தொடரும் என்றும் தமிழ் பேசும் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கான நடைமுறைச் சாத்தியமான சகல வழிமுறைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி சில்வா, றிஷாட் பதியுதீன், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஈ.பி.டி.பி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.தவராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

1 comments :

Anonymous ,  January 31, 2013 at 4:49 PM  

Parties representing the tamils have the equal rights to represent the tamils,TNA is not only the sole representative of the tamils.So we hope the Hon.President would take alternative measures and bring an end
to the tamils crisis.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com