Sunday, January 20, 2013

மத்திய கிழக்கில் அமெரிக்கக் கொள்கையின் அழுகிய அஸ்திவாரங்கள். Bill Van Auken

ரிஸானா நஃபீக் அரச படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, குறைந்தப்பட்சம் 45 இந்தோனேசியத் தாதியர் சௌதிச் சிறைகளில் சிரச்சேதம் செய்யப்படுவதைஎதிர்நோக்கி உள்ளனர்!

ஜனவரி 11ம் திகதி வளைகுடா ஷேக் நாடான பஹ்ரைனின் தலைநகரான மனாமாவில் ஒரு இடிந்துவிழும் கட்டிடத்தில் நிறுவப்பட்டிருந்த நெரிசல் நிறைந்த தொழிலாளர் முகாமைப் பாதித்த தீயில் மாண்டுபோன பதின்மூன்று குடியேறிய தொழிலாளர்களில் அனைவருமே இல்லாவிட்டாலும், பெரும்பாலனவர்கள் பங்களாதேசத்தை சேர்ந்தவர்களளாக இருக்கலாம்.

இத்தகைய நிகழ்வுகள், கொடூரமான முறையில் வளைகுடா ஒத்துழைப்புக் குழுவில் உள்ள பஹ்ரைனிலும் பிற முடியாட்சிகளிலும் வாடிக்கையாகிவிட்டது. கடந்த மே மாதம்தான் மனாமாவில் மற்றொரு நெரிசலான தொழிலாளர் முகாமில் ஒரு தீ விபத்து 10 பிற பங்களாதேசத் தொழிலாளர்களின் உயிர்களைக் காவுகொண்டது.

பஹ்ரைனிய முடியாட்சியும் தனியார் கட்டிட நிறுவனங்களும் முன்னேற்றமான வீட்டு வசதி, தொழில்துறையில் பாதுகாப்புத் தரங்கள் ஆகிய தேவைகளுக்கான முயற்சிகளை நிராகரித்துவிட்டன.

உலகெங்கிலும் பெரும் இகழ்வுணர்வைத் தூண்டிய இலங்கையை சேர்ந்த வீட்டு உதவித் தொழிலாளி ஒருவர் சிரச்சேதம் செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் பஹ்ரைனில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தன்னுடைய வயதை பற்றி பொய்கூறி, இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் ஒரு வறிய குடும்பத்தை விட்டு சௌதி அரேபியாவிற்கு நல்ல சம்பளம் தேடி வந்த ரிஸானா நஃபீக், பயிற்சியோ அல்லது அனுபவமோ இல்லாத அவருடைய 17வயதில், கட்டாயப்படுத்தி பராமரிக்க வைத்த ஒரு இளம் குழந்தையின் மரணத்திற்காக கொலை தண்டனை விதிக்கப்பட்டார். அவரிடம் இருந்து கட்டாயப்படுத்தி ஒரு ஒப்புதல் வாக்கு மூலத்தை சௌதி அரேபிய அதிகாரிகள் பெற்றிருந்தனர்; இதைப் பின்னர் அவர் மறுத்திருந்தார்; பாட்டிலில் இருந்து பால் குடிக்கையில் குழந்தை மூச்சுத் திணறி இறந்துவிட்டதாகவும் தன்னால் அக்குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என்றும் கூறினார்.

இந்தக் காட்டிமிராண்டித்தன மரண தண்டணைக்கு சர்வதேச கண்டனத்தை சௌதி முடியரசு உறுதியாக நிராகரித்துவிட்டது. இது, சிறுவயதினர் செய்ததாகக் கூறப்படும் குற்றங்களுக்கு மரண தண்டனை கூடாது என்னும் சர்வதேச உடன்பாடுகளை மீறி நடத்தப்பட்டது. இதை “தன் உள் விவகாரங்களிலும், நீதிமன்றத் தீர்ப்புக்களிலும் குறுக்கீடு” என்றும் அழைத்துள்ளது.

மீண்டும், இந்த வெறுப்பூட்டுகின்ற நடவடிக்கை எந்த அர்த்தத்திலும் ஒரு சித்தப்பிரம்மை அல்ல. கடந்த வருடம் சௌதி ஆட்சி 79 பேரை சிரச்சேதம் செய்தல் மூலம் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது; அதற்கு முந்தைய ஆண்டு 82 பேர் அவ்வாறு சிரச்சேதம் செய்யப்பட்டனர்.

ரிஸானா நஃபீக் அரச படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, குறைந்தப்பட்சம் 45 இந்தோனேசியத் தாதியர் சௌதிச் சிறைகளில் சிரச்சேதம் செய்யப்படுவதை எதிர்நோக்கி உள்ளனர் என்ற தகவல்கள் வந்துள்ளன. இதைத்தவிர இலங்கை, பிலிப்பின்னா, எதியோப்பிய மற்றும் இந்திய வீட்டுத் தொழிலாளி பெண்களும் இதே விதியை எதிர்நோக்கியுள்ளனர் எனத் தெரிகிறது; ஆனால் அவர்களுடைய எண்ணிக்கை என்ன என்பது தெரியவில்லை.

பல நேரங்களிலும் இப்பெண்கள் தங்கள் முதலாளிகளுடைய உடல்ரீதியான வன்முறை, பாலியல் ரீதியான தாக்குதல்களில் தங்களைக் காத்துக் கொள்கையில் கொலைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். மற்ற வழக்குகளில், மகளிர் பல ஆண்டுகள் வாரம் முழுவதும் நாள் ஒன்றிற்கு 15-20 மணி நேரம் கட்டாய வேலை செய்வதால் ஏற்படும் மன முறிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்; பல நாட்கள் தொடர்ந்து உழைக்கும் அவர்களுக்கு பல நேரமும் ஊதியமும் கிடைப்பதில்லை.

சௌதி அரேபியாவில் உள்ள 1.5 மில்லியன் வீட்டு வேலைசெய்யும் பெண் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் கொடூரத் தவறுகளுக்கு தண்டனை அளித்தல் என்பது மிகவும் அபூர்வம்தான். மிக இழிந்த வழக்குகளுள் ஒன்று ஒரு இந்தோனிசிய வீட்டுத் தாதியான சுமியதி பின்டி சலன் முஸ்தபா (Sumiati Binti Salan Mustapa) உடையதாகும்; இவருடைய சௌதி முதலாளி இவருடைய உதடுகளை ஒரு கத்திரக்கோலால் வெட்டிவிட்டார்; உச்சந்தலையில் சூடான இரும்பினால் சுட்டார்; பல கத்திக் குத்துக்களும் உடைந்த எலும்புகளும் இத்தீய தவறுகளின் விளைவாகப் பல காலமும் நீடித்தன. ஆனால் ஒரு சௌதி அரேபிய நீதிமன்றம் முதலாளியை, சித்திரவதை செய்ததற்கு சாட்சியம் இல்லை எனக் கூறி விடுவித்து விட்டது. பல நேரங்களில் பெண்கள் வீட்டுக் கட்டிடங்களில் இருந்து வெளியே எறியப்பட்ட நிகழ்வுகள் தற்கொலைகள் எனப் பட்டியிலிடப்பட்டு விடுகின்றன.

இழைக்கப்படும் இந்த அட்டூழியங்களின் அடித்தளத்தில் —கொடூர தீவிபத்துக்கள் மற்றும் சிரச்சேதங்கள் என— தற்கால வடிவமைப்பின் ஒருவகை அடிமைத்தன முறைதான் உள்ளது. மரபார்ந்த வகையிலான அடிமைத்தனம், நேரடியாக மனிதர்களை வாங்குதல், விற்றல் என்பது 1962ம் ஆண்டுதான் சௌதி பேரரசில் இருந்து அகற்றப்பட்டது.

கடத்தி கட்டாயமாக துணை சகாரா ஆபிரிக்கர்களை அடிமைப்படுத்துவதற்கு மாறாக புதிய அமைப்புமுறை, உலகம் முழுவதும் ஒருங்கிணைந்துள்ள முதலாளித்துவ முறையின் ஆதரவைக் கொண்டுள்ளது; ஏனெனில் அது பில்லியன் கணக்கான மக்களை, குறிப்பாக ஆசியாவில் வறிய நிலையில் தள்ளியுள்ளது; அவர்கள் வெளிநாடுகளில் வேலைகளை தேடி அலையும் கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளனர்.

ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் இந்த தொழிலாளர்களுக்கு வேலை பெற்றுத்தர அளவுகடந்த கட்டணத்தை வசூலிக்கின்றன, குடியேறுபவர்கள் இதையொட்டி சௌதி அரேபியா இன்னும் வளைகுடாவில் இருக்கும் முடியரசுகளில் அடிமை போன்ற வேலைமுறைக்கு ஒப்புக் கொள்கின்றனர். ஒரு முறை அங்கு வந்துவிட்டால் அவர்கள் கஃபாலா என்னும் முறையின் கீழ் வந்துவிடுகின்றனர்—அதாவது நிதியுதவி அளிப்பவர் ஆதரவு முறையில்; இதன்படி நிதியுதவி அளிப்பவர்கள்-முதலாளிகள் வரம்பற்ற அதிகாரங்களை குடியேறும் தொழிலாளர்கள் மீது கொண்டுள்ளனர். அவர்கள் பொதுவாகத் தொழிலாளர்களின் கடவுச்சீட்டை பறித்து வைத்துக் கொண்டுவிடுகின்றனர்; இதையொட்டி அவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் போகிறது.

ஆபத்தான, சுரண்டல் நிறைந்த வேலைகளைவிட்டு நீங்க முற்படுபவர்கள் நிதியுதவி அளிப்பவர் அனுமதி இல்லாமல் வேறிடங்களில் வேலை நாட அனுமதிக்கப்படுவதில்லை. பொதுவாக ஊதியம் வழங்கப்படாமலேயே நாட்டை விட்டு வெளியே அனுப்பப்படுவர். இத்தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கம் அமைப்பது சட்டவிரோதம் ஆகும். அவர்களுடைய ஊதியத் தரங்கள் இரு தசாப்தங்களாக தேக்க நிலையில் உள்ளன; ஆனால் வாழ்க்கைச் செலவுகளோ விரைவில் உயர்கின்றன. இந்த முதலாளிகள் தொழிலாளிகளை பிறருக்கு வாடகைக்கு விட்டு அந்த ஊதியத்தையும் இலாபமாகப் பெறுகின்றனர்.

வளைகுடா நாடுகளில் கிட்டத்தட்ட இத்தகைய தொழிலாளர்கள் 15 மில்லியன் பேர் உள்ளனர். இவர்கள் தொழிலாளர் தொகுப்பில் பாதிக்கும் மேல் ஆவர்; பெரும்பாலான தொழிலாளர்கள் தனியார் துறையில் உள்ளனர். இவர்கள்தான் வானளாவிய கட்டிடங்களையும், ஆடம்பர அரண்மனைகளையும் மனாமா, துபாய், ரியாத் ஆகிய இடங்களில் நெடுஞ்சாலைகளையும் கட்டுபவர்கள்; ஒட்டுண்ணி ஆளும் பேரரசுகளின் எண்ணெய் வருமான மரபினரால் பெறப்படும் நிதி மூலம் ஊதியம் கொடுக்கப்படுகின்றனர்.

இவர்களுடைய படு பாதாளமான நிலைமைகள் ஒன்றும் இரகசியமானதல்ல. அமெரிக்க அரச திணைக்களத்தின் ஜனநாயக, மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பிரிவின் ஆண்டு அறிக்கைகளில் இவர்கள் இடம் பெறுகின்றனர். பஹ்ரைன் பற்றிய அறிக்கையில் வீட்டுத் தொழிலாளர்கள் “தங்கள் அடையாள ஆவணங்களை முதலாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும், ஓய்வு நேரம் அதிகம் இவர்களுக்குக் கிடையாது, ஊட்டச்சத்து உணவும் கிடையாது, சொற்களாலும் உடல்ரீதியாவும் தவறாக நடத்தப்படுகின்றனர்; இவற்றுள் பாலியல் தொல்லை மற்றும் பாலியல் பலாத்காரம் ஆகியவையும் அடங்கும்.” எனக் கூறப்பட்டுள்ளது. “மேலும், பல நேரங்களில் முதலாளிகள் ஊதியங்களை வெளிநாடுகளில் இருந்துவரும் தொழிலாளர்களுக்கு நிறுத்தி வைத்து விடுகின்றனர்; நாட்டை விட்டு வெளியே செல்ல அவர்களை அனுமதிப்பதில்லை” என்றும் அது கூறுகிறது. இது கிட்டத்தட்ட அடிமை முறை நிலையைத்தான் காட்டுகிறது.

இதேபோன்ற நிலைமையைத்தான் சௌதி அரேபியாவிலும் அரச திணைக்களம் கண்டுள்ளது; அங்கு 8.5 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உழைக்கின்றனர். இரு நாடுகளிலும் அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டுள்ளன, சித்திரவதை வாடிக்கையானது, தணிக்கை முறை அமுல்படுத்தப்படுகிறது, மத சிறுபான்மையினர் (பஹ்ரைனில் பெரும்பான்மை ஷியாவினரே) மிருகத்தனமாக அடக்கப்படுகின்றனர்; அரசியல் எதிர்ப்பாளர்கள் கொலை செய்யப்படுகின்றனர், சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

ஆனால் இந்த அறிக்கைகள் அனைத்தும் காட்சிப் பொருள்கள்தான். இப்பிராந்தியத்தின் அமெரிக்க கொள்கைகளை இவை பாதிப்பதில்லை; அது, சௌதி அரேபியா, வாஷிங்டனின் முக்கிய அரபு நட்பு நாடான பஹ்ரைன் (அமெரிக்காவின் ஐந்தாம் கடற்படைப் பிரிவிற்குத் தளம் கொடுத்துள்ளது), பென்டகனின் மத்திய கட்டுப்பாட்டு முன்னிலைத் தலைமையகம் மற்றும் இணைந்த விமான செயற்பாடுகள் மையத்தைக் கொண்ட கட்டார் ஆகிய சர்வாதிகார ஆட்சிகளை நம்பியுள்ளது.

இவைதான் ஒபாமா நிர்வாகத்தின் முக்கிய நட்பு நாடுகளாகும், இவை சிரியாவில் “மனித உரிமைகள்”, “ஜனநாயகம்” என்ற பெயரில் குறுங்குழுவாத உள்நாட்டுப் போருக்கு ஊக்கம் கொடுத்து ஆயுதங்களையும் அளிப்பவர்கள், ஈரான் மீதான போருக்கு தயாரிப்பு செய்பவை.

மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூறையாடும் கொள்கை முறைக்கு, இந்நாடுகளில் பகுதி அடிமைத்தனத்தில் இருக்கும் பெரும்பாலான குடியேற்றத் தொழிலாளர்கள் நிலைமையை விட வேறு எதுவும் குற்றச்சாட்டிற்கு தேவையில்லை. இவை, அவர்களை ஆளும் ஆட்சிகளின் தீவிர பிற்போக்குத்தனம் மற்றும் மத்தியகாலத் தன்மையைத்தான் காட்டுகின்றன.

இந்த ஏகாதிபத்தியக் கொள்கையின் அஸ்திவாரங்கள் முற்றிலும் அழுகிய தன்மை கொண்டவை, அது புரட்சிகர வெடிப்புக்களை தாமதப்பட்டு என்பதை விட விரைவாகவே தோற்றுவிக்கும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com