Tuesday, January 22, 2013

48 மணித்தியாலம் தடுத்து வைத்து விசாரணை செய்யும் சட்டக் கோவை 77 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பிடியாணையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தாமல் 48 மணித்தியாலங்கள் தடுத்துவைக்கலாம் என்ற குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் 77 மேலதிக வாக்குகளினால் பாராளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பிலேயே இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 110 வாக்குகளும் எதிராக 33 வாக்குகளும் கிடைத்தன.

48 மணித்தியாலய சட்டம் என்றால் என்ன?

பிடியாணையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தாமல் 24 மணித்தியாலங்கள் மட்டுமே தடுத்து வைத்து விசாரிக்கலாம் என்றிருந்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுடனேயே குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டள்ளது.

ஏன்? இந்த சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டமூலத்தின் 8 ஆம் வாசகமானது அரசியலமைப்புக்கு அமைவாக இல்லையெனவும் இதனால் இந்த குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை விசேட பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

48 மணித்தியாலங்கள் தடுத்துவைப்பதற்காக 15 வகையான தவறுகளாவன...

1. கொலை.
2. கொலையாகாத குற்றமுடைய மரணம் (கைமோச கொலை).
3. கொலை முயற்சி.
4. கொலை புரிவதற்காக ஆட்கவர்தல் அல்லது ஆட்கடத்தல்.
5. தவறாக அடைத்துவைக்கும் நோக்கில் ஆளொருவரை ஆட்கடத்தல் அல்லது ஆட்கவர்தல்.
6. கடுங்காயத்திற்கு உட்படுத்தும் உளக்கருத்துடன் (நோக்கத்துடன்) ஆட்கடத்தல் அல்லது ஆட்கவர்தல்.
7. ஆளொருவரை மறைத்துவைத்தல் அல்லது அடைத்துவைத்தல்.
8. கற்பழிப்பு.
9. மரணத்தை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு புரியப்படும் திருட்டு.
10. மரணம் அல்லது கடுங்காயம் விளைவிக்கும் வகையில் கொள்ளை.
11. மரணம் விளைவிக்கக்கூடிய ஆயுதந்தாங்கிய படுகொலை.
12. மேற்கூறப்பட்ட எவையேனும் தவறுகளுக்கு புரியும் முயற்சி.
13. வெடிப்பொருட்களை, தீங்குவிளைவிக்கும் ஆயுதம் ஒன்றை அல்லது துவக்கு ஒன்றைப் பயன்படுத்தி புரியப்படும் தவறு.
14. மேற்கூறப்பட்ட தவறொன்றுக்கு உடந்தையாக செயற்படல்.
15. மேற்கூறப்பட்ட தவறொன்றுக்கு உடந்தையளிப்பதற்கு அல்லது தவறைப்புரிவதற்கு சூழ்ச்சி செய்தல்.

இந்த குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நீதியமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com