பிரிட்டிஷ் உளவுத்துறை அல்-காய்தா தளபதியை கொல்ல மறுத்தது! “எங்கள் வேலை அதுவல்ல”
டென்மார்க்கை சேர்ந்த உளவாளி ஒருவர், தாம் அல்-காய்தாவின் முக்கிய தளபதி ஒருவர் பற்றிய தகவல் கொடுத்த போதிலும், பிரிட்டிஷ் உளவுத்துறை அவரைக் கொல்ல மறுத்தது என்று கூறியிருக்கிறார். மோர்ட்டென் ஸ்ட்ரோம் என்ற இந்த உளவாளி, அல்-காய்தாவுக்குள் ஊடுருவ பிரிட்டிஷ் உளவுத்துறையால் அனுப்பி வைக்கப்பட்டவர்.
அல்-காய்தாவுக்குள் ஊடுருவி உளவுத் தகவல்களை அனுப்புவதற்காக, பிரிட்டிஷ் உளவுத்துறை MI6, அவரை பணியில் அமர்த்தியது. அதையடுத்து, இஸ்லாம் மதத்துக்கு மாறிய இவர், ஏமான் நாட்டில் குடியேறி, அங்கேயிருந்த அல்-காய்தா தளபதி அன்வர் அல்-அவ்லாகியுடன் நெருக்கமானார். அதன்பின், அல்-அவ்லாகியின் நடமாட்டங்கள், மற்றும் இருப்பிடம் பற்றிய உளவுத் தகவல்களை MI6க்கு கொடுத்துவந்தார்.
குறிப்பிட்ட தினம் ஒன்றில், அன்வர் அல்-அவ்லாகி எங்கே இருப்பார் என்ற தகவலை பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு கொடுத்து, அல்-அவ்லாகியை கொல்வதற்கு அதுவே சரியான தருணம் என்று கூறியிருக்கிறார், மோர்ட்டென் ஸ்ட்ரோம்.
அதற்கு பிரிட்டிஷ் உளவுத்துறை, “பிரிட்டனுக்கு நேரடி அச்சுறுத்தலாக இல்லாதவர்களை வெளிநாடு ஒன்றில் கொல்வது எங்களது வேலையல்ல” என்று கூறி, அல்-அவ்லாகியை கொல்வதற்கு மறுத்துவிட்டதாக கூறுகிறார் இவர்.
இங்குள்ள மற்றொரு தமாஷ் என்னவென்றால், அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ, இந்த அன்வர் அல்-அவ்லாகிதான், லண்டனில் நடைபெற்ற பஸ் குண்டு வெடிப்புகளின் சூத்ரதாரி என்று கூறியது. அன்வர் அல்-அவ்லாகி, அமெரிக்க பிரஜையாக இருந்தவர் என்ற காரணத்தால், சி.ஐ.ஏ.வும் அவரை பின்தொடர்ந்து கொண்டிருந்தது.
இதற்கிடையே மற்றொரு திருப்பதாக, பிரிட்டிஷ் உளவுத்துறையால் பணியில் அமர்த்தப்பட்ட டென்மார்க் நபர் மோர்ட்டென் ஸ்ட்ரோம், இரட்டை உளவாளியானார். சி.ஐ.ஏ.வும் அவரை பணியில் அமர்த்திக் கொண்டது. அதையடுத்து, அன்வர் அல்-அவ்லாகி பற்றிய தகவல்களை சி.ஐ.ஏ.வுக்கும் வழங்கினார் இவர்.
கடந்த ஆண்டு செப்டெம்பர் 30-ம் தேதி, உளவு விமான ஏவுகணை ஒன்றின் மூலம், அன்வர் அல்-அவ்லாகியை கொன்றது சி.ஐ.ஏ.
தற்போது, இந்த டென்மார்க் உளவாளி பற்றிய தகவல்கள் வெளியானபின் சி.ஐ.ஏ. புதிய விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளது. “அவர் எமக்கு அன்வர் அல்-அவ்லாகி பற்றி தகவல் கொடுத்தது நிஜம். ஆனால், அந்த தகவலை வைத்தே அன்வர் அல்-அவ்லாகியை கொன்றோம் என்று சொல்ல முடியாது.
அன்வர் அல்-அவ்லாகியை கொல்வதற்கான மற்றொரு ஆபரேஷனிலும் நாம் ஈடுபட்டிருந்தோம். அதில் கிடைத்த தகவல்களும், இவர் கொடுத்த தகவல்களும் பொருந்தி வரவே, உளவு விமானத்தை ஏவுகணையுடன் அனுப்பி வைத்தோம்” என்கிறது சி.ஐ.ஏ.
0 comments :
Post a Comment