Monday, December 31, 2012

புதிய நாள் எப்போதும் பழைய நாங்கள் தானா?

2012 விடைபெற்றுச் செல்கிறது. பழையன கழிய புதியன புகுவது காலவகையினது தான் என்றார்கள். நாங்கள் பழையனவற்றிலிருந்து விடுபட்டு புதிய வழிவகைகளைக் காண முயல்கிறோமா என்று கேட்டுப்பார்க்க வேண்டும். எங்கள் சிந்தனையில் ஏதாவது புதிய மாற்றம் வந்திருக்கிறதா? எங்களை நாம் மாற்றிக்கொள்ளக் கொஞ்சமாவது முயற்சித்திருக்கிறோமா?

பீற்லா என்ற அறிஞர் சொன்னார், எங்கள் முக்கியமான பிரச்சினை மக்களிடமிருந்தே மக்களை எப்படிக் காப்பது என் பதுதான். அதற்குக் காரணம் மக்கள் தாம் விரும்புவதைக் கனவுகண்டு கொண்டிருப்பார்களே தவிர, யதார்த்தத்தில் நமக்கு எது கிடைக்கப்போகிறது என்பதைச் சிந்திக்க மாட்டார்கள்; அந்த எண்ணம் அவர்களுக்கு உவப்பானதல்ல.

தலைவர்கள்தான் நடைமுறைச் சாத்தியமானதை அவர்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டிய கடப்பாடு கொண்டவர்கள். அவர்கள் நிலைமைகளைச் சீர்தூக்கிப் பார்த்துச் சொல்வது, மக்கள் விரும்பியதற்கு மாறான கசப்புத் தன்மையைக் கொண்டிருந்தாலும், அதுதான் மருந்து, அதுதான் மக்களது ஆரோக்கியத்திற்குத் தேவையானது என்பதை தலைவர்கள் எனப்படுவோர் தான் மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்.

போர் நடந்துகொண்டிருந்த சமயத்தில் நம் தரப்புக்கே வெற்றி கிடைத்துவிட வேண்டும் என்பது மக்கள் விருப்பமாக இருந்தது. அந்த நேரத்தில் போராட்டமானது வெல்லும் திசை வழியில்தான் செல்கிறதா என்று கண்காணித்திருக்க வேண்டியதும், மக்கள் அழிவைத் தடுக்கக் கூடிய உச்சபட்சமான சமரசப் புள்ளியைத் தக்கசமயத்தில் தேர்ந்திருக்க வேண்டியதும் தலைவர்கள், புத்திஜீவிகளினது கடப்பாடாகும். செய்தார்களா?

மக்களுக்கு யதார்த்தத்தை உணர்த்துவதும், அவர்களுக்கு உவப்பாக இல்லாதது ஆனாலும் நடைமுறைக்குச் சாத்தியமானதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டியதும் மேற்குறித்தோரது கடமைகளில் தலையாயது. இப்போதும், தனி நாடு அமைய வேண்டும், சந்திரிகா தர இருந்ததையும் விட கூடுதலான அதிகாரங்கள் வேண்டும் என்பதெல்லாம் நம்மில் சிலரது விருப்பமாக இருக்கலாம். ஆனால் விஷயமறிந்த தலைவர்கள் புத்திஜீவிகள் என்போர் அவற்றை மாயமான் காட்டுவது போலக் காட்டி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கக் கூடாது.

அவ்வாறு நடக்காததைக் காட்டி ஏமாற்றும் போலி அரசியலையே நாம் சுயலாப அரசியல் என்கிறோம். அரசாங்கத்திடம் பேசி எந்தத் தீர்வும் எடுக்க முடியாது என்று சொல்பவர்கள், சர்வதேசத்திடம் பேசி எந்தத் தீர்வுக்கான இணக்கத்திற்கு வந்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அல்லது இவ்வளவு காலமும் சர்வதேசத்திடம் பேசுகிறோம் பேசுகிறோம் என்று சொல்லி வந்ததில், தமிழ் மக்களுக்கான எந்த மாதிரியான ஒரு தீர்வை சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வைத்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

அரசாங்கத்துடன் பேசியும் சரிவராது; தெரிவுக்குழுவும் சரிவராது என்றால் இத்தறுதிக்கு சர்வதேசத்தைக் கொண்டு செய்யலாம் என்று சொன்னதையாவது செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் அதற்கான நகர்வுகள் நடப்பதையாவது காட்ட வேண்டும். எதையும் செய்யாது மக்களையும் மாணவர்களையும் உசுப்பேத்தி விட்டுக் கொண்டிருப்பதானது, பழையபடி ஆயுதப்போராட்டம் தான் வழி என்று இளைஞர்களைத் தூண்டி விட்டுப் பதுங்கிவிடும் பழைய வஞ்சக வரலாற்றை மறுபடியும் தொடங்குவதாகவே அர்த்தம்.

நாளை மற்றொரு புதுவருடம். கடந்து போன காலத்தை இப்போது திருத்திக்கொள்ள இயலாது. வரப்போகும் நாட்களை என்ன செய்யப் போகிறோம்? நம்மைத் திருத்திக் கொள்வோமா என்பதே, வரும் ஆண்டின் தொடக்கத்திலும் எம்முன்னால் நிற்கின்ற கேள்வி.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com