Sunday, December 2, 2012

பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் எழுதியிருக்கமாட்டேன்!’ கே. ரகோத்தமன்.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ராஜிவ் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றியவர் பிரபாகரன் மரணம் வரை ஒரு சந்தர்ப்பத்தில்கூட வாய் திறக்காதிருந்த இவர், ராஜிவ் படுகொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம் (வெளியீடு: கிழக்கு பதிப்பகம்) என்ற புத்தகத்தின்மூலம் பல அதிர்ச்சிகரமான செய்திகளை முதல் முறையாக வெளியிட்டிருக்கிறார்.

விடுதலைப் புலிகள் தங்களுக்குள் எழுதிக்கொண்ட பல கடிதங்களை ஆதாரங்களாக முன்வைக்கும் இந்நூல், பல தமிழக அரசியல்வாதிகள், இந்திய உளவுத்துறை அதிகாரிகள், சிறப்புப் புலனாய்வுக் குழுத் தலைவர் என்று பலர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. இது குறித்து ஆர். முத்துக்குமார் ரகோத்தமனிடம் மேற்கொண்ட உரையாடலின் ஒரு பகுதி குமுதம் ரிப்போர்ட்டரில் மூன்றாண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது.

அவசியம் கருதி முழுவடிவம் இப்போது உங்களுக்காக.

பதினெட்டு வருடங்கள் அமைதியாக இருந்துவிட்டு இப்போது ராஜிவ் கொலை வழக்கு பற்றி எழுதவேண்டிய அவசியம் என்ன?

மொத்தம் மூன்று காரணங்களைச் சொல்லவேண்டும். நம்முடைய நாட்டில் நடந்த முக்கியப் படுகொலை இது. அதைப் பற்றிய புலன் விசாரணையைத் தொடங்கி, மூளை உழைப்பு, மனித உழைப்பு எல்லாவற்றையும் கொட்டி, ஏ டு இஸட் எல்லா விவரங்களையும் சேகரித்தோம். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தோம். விடுதலைப் புலிகள்தான் செய்தார்கள் என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தோம். இத்தனைக்குப் பிறகும் ராஜிவ் கொலையை விடுதலைப் புலிகள் செய்யவில்லை என்ற ஒரு கருத்து தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. சந்திராசாமி செய்யச் சொன்னார் என்கிறார்கள். சிஐஏ உளவு அமைப்பின் கைங்கர்யம் என்கிறார்கள். இந்தத் திசை திருப்பல் எனக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, இதற்கு ஏதேனும் செய்யவேண்டும் என்று நினைத்தேன்.

அடுத்து, படுகொலை செய்யப்பட்ட ராஜிவின் மனைவி இன்று இந்தியாவின் மிகப்பெரிய கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். அவரது கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. ராஜிவ் காந்தியைக் கொன்றது யார் என்பதைத் தெரிந்துகொள்வது வெகு சுலபம். அவர்களாக ஏஜென்ஸி வைத்துக்கூட விசாரித்து உண்மையைத் தெரிந்துகொண்டிருக்கலாம். ஆனால் தனது மகள் பிரியங்காவை அனுப்பி குற்றவாளி நளினியிடம், ‘என் அப்பாவைக் கொலை செய்தது யார்?’ என்று கேட்டதாக செய்தி வந்தது. எனில், ராஜிவ் குடும்பத்தினர் சிறப்பு புலனாய்வுக் குழுவையோ, அதன் குற்றப்பத்திரிகையையோ நம்பவில்லை என்றுதானே அர்த்தம். இது எனக்கு மனவருத்தத்தைக் கொடுத்தது. உண்மையில் தடா நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்த பல சாட்சியங்கள், ஆவணங்கள் வெளியே வராமல் போய்விட்டன. அவை முறைப்படி எல்லோருக்கும் தெரியவந்திருந்தால் இந்த சர்ச்சைகளைத் தவிர்த்திருக்கலாம். ஆதாரங்கள் கைவசம் இருந்தும் யாருக்கும் தெரியாமல் இருக்கிறதே என்ற ஆதங்கம் எனக்குள் இருந்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக, ராஜிவ் கொலை வழக்கைப் பொருத்தவரை நான் தலைமைப் புலனாய்வு அதிகாரி. வழக்கின் பிரதம குற்றவாளியான பிரபாகரனும், அடுத்த நிலைக் குற்றவாளியான பொட்டு அம்மானும் தேடப்படும் குற்றவாளிகளாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புலனாய்வு அதிகாரியான நான் – ஓய்வு பெற்றுவிட்டாலும் – அது குறித்துப் பேசக்கூடாது. அது சட்ட விரோதம். அதனால்தான் ராஜிவ் கொலை வழக்கு விசாரணை தொடர்பாக நான் அறிந்த உண்மைகளை இதுநாள் வரை வெளியில் பேசாமல் இருந்துவந்தேன்.

ஆனால் சமீபத்தில் இலங்கையின் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மண் கதிர்காமர் கொலை வழக்கு விசாரணையில், பிரதான குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த பிரபாகரனும் பொட்டு அம்மானும் இறந்து விட்டதாக இலங்கை அரசே அறிவித்து, அந்த வழக்கை மூடிவிட்டார்கள்.
இனி இந்தியாவிலும் ராஜிவ் கொலைவழக்கில் தேடப்படும் குற்றவாளிகளாக நிச்சயம் பிரபாகரனும் பொட்டு அம்மானும் இருக்கப்போவதில்லை. இதுதான் என்னை புத்தகம் எழுதத் தூண்டியது. எழுதிவிட்டேன். ஒருவேளை பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் புத்தகமே எழுதியிருக்கமாட்டேன்.

பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?

பரிபூரணமாக. இலங்கை அரசு நீதிமன்றத்திலே அதைப் பதிவுசெய்த பிறகு ஏன் நம்பாமல் இருக்கவேண்டும். இந்த விஷயத்தில் எந்த நாடும் பொய் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. சொல்லவும் மாட்டார்கள். விடுதலைப் புலிகளை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இறந்து போனவர் பிரபாகரன் என்று கருணாவே அடையாளம் காட்டியிருக்கிறார். ஆகவே, பிரபாகரன் உயிரோடு இருக்க வாய்ப்பே இல்லை.
சிறப்புப் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் கார்த்திகேயன் மீது நீங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை இதற்கு முன்னால் எந்த அதிகாரியும் வைத்ததில்லை. புலனாய்வின்போது நிறைய இடையூறுகள் ஏற்பட்டதாகவும் புத்தகத்தில் சொல்லியிருக்கிறீர்கள். ஓரிரு உதாரணங்களைச் சொல்லமுடியுமா?

கார்த்திகேயன் மீது குற்றச்சாட்டு எதையும் முன்வைக்கவில்லை. ஆனால் சில குறைபாடுகள் இருந்தன என்பதுதான் என்னுடைய வாதம். புலனாய்வு தொடங்கிய புதிதில் இதில் சம்பந்தப்பட்ட ஒருவரைக்கூட விட்டுவிடக்கூடாது. எல்லோரையும் கண்டுபிடிக்கவேண்டும் என்று எல்லோருமே சொன்னார்கள். அவர் எவ்வளவு பெரிய அரசியல்வாதியாக இருந்தாலும் சரி என்றார்கள். விசாரணை தொடங்கி, அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கிறது என்று தெரிந்தால் யாராக இருந்தாலும் கொஞ்சம் பின்வாங்குவார்கள். இதுதான் ராஜிவ் கொலை வழக்கு விசாரணையிலும் நடந்தது.

ஒரு புலனாய்வு நடக்கிறது என்றால் அதில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளுக்கு எல்லா கோணங்களிலும் விசாரிக்க சுதந்தரம் கொடுக்கப்படவேண்டும். ஆனால் இவரைப் போய் விசாரிக்காதே… அவரைப் போய் எதுவும் கேட்காதே என்று சொல்வது தவறு.

ராஜிவ் படுகொலைக்கு முன்பு அந்தப் பகுதியில் நடக்க இருந்த கருணாநிதியின் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்றால் அது ஏன் என்பது குறித்து விசாரிக்கவேண்டும். நான் கருணாநிதியை விசாரிக்கவேண்டும் என்று கார்த்திகேயனிடம் கேட்டேன். ஆனால் கார்த்திகேயன் என்ன சொன்னார் தெரியுமா? ‘இனிமே இந்தமாதிரி வேலையெல்லாம் செய்யாதீங்க’ இதற்கு என்ன அர்த்தம்? கருணாநிதியை விசாரிப்பதில் கார்த்திகேயனுக்கு விருப்பமில்லை என்றுதானே!

புலன் விசாரனையின்போது பல வீடியோ கேசட்டுகள் கிடைத்தன. அதில் ஒன்று, புலிகளின் குகையில் என்ற தலைப்பிடப்பட்ட வீடியோ. வைகோ இலங்கைக்கு சென்று பிரபாகரனைச் சந்தித்தது, அவருடன் பேசியது போன்ற காட்சிகள் எல்லாம் அதில் இருக்கும். ஆகவே, புலிகளுடன் நெருக்கமான தொடர்பு கொண்ட அவரிடம் விசாரணை செய்யவேண்டும் என்று நினைத்தேன். பிறகு சின்ன சாந்தனிடம் விசாரணை செய்தோம். அப்போது அவர், ‘கொடுங்கையூரில் சிவராசனை வெள்ளை உடையில் வந்த ஒருவர் சந்தித்து, ‘இந்தக் காரியத்தை நல்லபடியாக முடியுங்கள். அடுத்த இலக்கு வைகோவை சி.எம் ஆக்குவதுதான் என்றார்’ என்று சின்ன சாந்தன் கூறினார். இது என்னுடைய சந்தேகத்தைக் கிளறியது.

பாளையங்கோட்டையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ, ‘பிரபாகரனுக்குத் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் உள்ளது’ என்று விவரித்துப் பேசினார். அதைப் பற்றி அவரிடம் கேட்டபோது, ‘அந்த உருவம் என்னுடையது. ஆனால் குரல் என்னுடையது அல்ல’ என்று பொய் சொன்னார். அது பத்திரிகையில் வெளியான செய்திதான். ஆனால் அதைச் சொல்வதற்கே தயங்கி, பொய் சொன்னார். இது என்னுடைய சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது. அவரை விசாரிக்கவேண்டும் என்று சொன்னேன். அனுமதி கொடுத்தார் கார்த்திகேயன். ஆனால் சந்தேகத்துக்குரியவராக அல்ல; முக்கியமான சாட்சியமாக மட்டுமே விசாரிக்கவேண்டும் என்று சொன்னார். விசாரணையை சரியான பாதையில் செல்வதற்கு அனுமதி மறுக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். இது எனக்கு மன உளைச்சலைக் கொடுத்தது.

புலனாய்வு நடந்துகொண்டிருந்தபோது கார்த்திகேயனுக்கும் உங்களுக்கும் உறவு எப்படி இருந்தது?

ஒருமுறை என் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். சிவராசனின் செயற்கைக் கண், துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்த புத்தகம் போன்ற தடயங்களைப் பத்திரிகைகளுக்குக் கொடுத்துவிட்டேன் என்று சொன்னார். உண்மையில் அந்த தடயங்களைக் கொடுத்து பெரிய பெரிய அதிகாரிகள்தான். ஆனால் என்னைக் குற்றம்சாட்டியபோது அதை நான் ஆதாரத்துடன் மறுத்தேன். உங்களுக்கு என் மீது சந்தேகம் இருந்தால் இந்த விசாரணையில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். பிறகு என்னைப் புரிந்துகொண்டார். தொடர்ந்து பணியாற்றக் கேட்டுக்கொண்டார்.

ராஜிவ் கொலைச் சம்பவம் அது நடப்பதற்கு முன்பே வைகோவுக்குத் தெரியும் என்று எழுதியுள்ளீர்கள். இந்த முடிவுக்கு நீங்கள் வர எது ஆதாரமாக இருந்தது?

இரும்பொறை என்பவருக்கு திருச்சி சாந்தன் எழுதிய கடிதம். ராஜிவ் கொலை வழக்கு பற்றி எனக்குத் தெரியும் என்று யாரிடமும் பேசாதே. ரவிச்சந்திரனின் வீட்டில் விடுதலைப் புலிகளை அழைத்துச் சென்று பாதுகாப்பாக வைத்தார்கள். ஆக, என்ன நடக்கப்போகிறது என்பது நிச்சயம் வைகோவுக்குத் தெரிந்திருக்கும். அதேபோல, இந்தமுறை ராஜிவ் வந்தால் உயிருடன் திரும்ப முடியாது’ என்று பேசியதாக செய்திகள் வெளியாகின. உடனே வைகோ, ‘மண்டல் கமிஷனை எதிர்த்தால் தமிழ்நாட்டில் இருந்து வெளியே போக முடியாது என்றுதான் சொன்னேன் என்று மாற்றி விளக்கம் கொடுத்தார். அவர் என்ன பேசினார், என்ன வார்த்தைகள் பயன்படுத்தினார் என்பதை இன்னும் கொஞ்சம் கூர்மையாக விசாரித்திருக்கவேண்டும்.

ராஜிவ் கொலைவழக்கு விசாரணையிலும் கொலைக்கு முந்தைய புலனாய்வு சேகரிப்பு நடவடிக்கைகளிலும் உளவு அமைப்புகளின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

தொடக்கத்தில் இருந்தே கொலையைச் செய்தவர்கள் விடுதலைப்புலிகள் அல்ல என்று ’ரா’ அமைப்பின் இயக்குனர் பாஜ்பாய் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். அதிலும் பொலிட்டிகல் அஃபயர்ஸ் கமிட்டி என்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில் பிரதமரிடம் சொல்லியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் அமைச்சர் சுப்ரமணியன் சுவாமியும் இருந்துள்ளார். ‘புலிகள் இல்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?’ என்று பிரதமர் சந்திரசேகர் கேட்டதற்கு, ‘என்னுடைய உளவாளி கிட்டு சொன்னார்’ என்று சொல்லியிருக்கிறார். இதைவிட அபத்தம் வேறு என்ன இருக்கமுடியும்?

புலிகள் செய்யவில்லை என்று கிட்டு சொன்னதை ராவின் தலைவரும் திரும்பத் திரும்பச் சொன்னால் இவருக்கும் அவருக்கும் என்னதான் வித்தியாசம்? குற்றவாளிகளை திரைபோட்டு மறைக்கப்பார்த்த பாஜ்பாய்தான் முதல் குற்றவாளியாக விசாரிக்கப்பட வேண்டியவர் என்று நினைத்துக்கொண்டேன்.

ராஜிவ் கொலை தொடர்பாக ஒரு முக்கிய வீடியோ ஆதாரம் இண்டலிஜென்ஸ் பியூரோவுக்குக் கிடைத்தது. வர்மா கமிஷன் சார்பாக அந்த வீடியோ கேசட்டைக் கேட்டபோது இறுதிவரை இண்டலிஜென்ஸ் பியூரோ தரவேவில்லை. அப்போது ஐ.பியின் இயக்குனராக இருந்தவர்
எம்.கே. நாராயணன். பாஜ்பாய் முழுப்பூசணிக்காயை மறைக்கிறார். எம்.கே. நாராயணன் கேசட்டைக் கொடுக்கத் தயங்கினார். இந்த அளவில்தான் ரா மற்றும் ஐ.பி என்ற இரண்டு உளவு அமைப்புகளின் ஒத்துழைப்பு இருந்தது.

சுப்ரமணியன் சுவாமியின் எந்தக் கருத்தையும் தமிழக மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்னும் நிலையில் ராஜிவ் கொலையை அடுத்து நடைபெற்ற அதிமுக்கியமான உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் நடந்தவை பற்றி சுப்ரமணியன் சுவாமி எழுதியதை நீங்கள் ஒரு முக்கிய ஆதாரமாகக் கொடுத்திருக்கிறீர்கள். உளவுத்துறை மீதான சுவாமியின் விமரிசனங்களையும் ராஜிவ் கொலை தொடர்பாக அவர் எழுப்பிய கேள்விகளையும் சந்தேகங்களையும் நீங்கள் நம்புகிறீர்களா?

பொலிட்டிகல் அஃபயர் கமிட்டி கூட்டத்தில் பேசியதாக சுப்ரமணியன் சுவாமி சொன்னதை நான் நம்புகிறேன். அங்கே பேசப்படும் விஷயங்களுக்குப் பதிவுகள் இருக்கும். ஆகவே அந்த விஷயத்தில் பொய் சொல்வதற்கு வாய்ப்பில்லை. ஒருவேளை என்னை அனுமதித்திருந்தால் அந்தப் பதிவையும் எடுத்துவந்திருப்பேன். திரும்பவும் சொல்கிறேன். சுப்ரமணியன் சுவாமி எழுதிய புத்தகத்தில் இருக்கும் மற்ற விஷயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.

புலனாய்வின்போது ஏற்பட்ட ஏராளமான சயனைடு மரணங்கள் சிபிஐயின் அலட்சியத்தால்தான் நடந்தன என்பதற்கு உங்கள் பதில் என்ன?

சயனைடு என்பது விடுதலைப்புலிகளின் முக்கிய ஆயுதம். விடுதலைப்புலி ஒருவர் போலீஸாரால் பிடிபடுவதற்கான சூழல் ஏற்பட்டால் உடனடியாக குப்பி கடித்து சாக்வேண்டும் என்பது அவர்கள் இயக்கத்தின் ஆணை. சிவராசனை கர்நாடகாவில் சுற்றிவளைத்தபோது தேசிய பாதுகாப்பு படையை அனுப்பி அதிரடியாகப் பிடித்திருக்கவேண்டும். அதைவிடுத்து, டெல்லியில் இருந்து சிறப்புப் படைகள் வந்துகொண்டிருக்கின்றன என்று சொல்லி ஒருநாளுக்கு மேல் தாமதம் செய்ததுதான் சிவராசன் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு கொடுத்தது. அதைவிடக் கொடுமை, அவர் வசம் இருந்த ஆவணங்களை எல்லாம் அழிப்பதற்குத் தேவையான கால அவகாசம் கொடுக்கப்பட்டதுதான். அதிரடியாகச் செயல்பட்டிருந்தால் சிவராசனை உயிரோடு பிடிக்க முடியவில்லை என்றாலும் ஆதாரங்களைக் கைப்பற்றியிருக்கலாம்.

ஜெயின் கமிஷன் விசாரணையின்போது சிபிஐ ஒத்துழைப்பு தரவில்லை என்று எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்?

ஜெயின் கமிஷனை நியமித்த உடனே அவர் விசாரணையைத் தொடங்கவில்லை. சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை முடியட்டும். அதைப் பற்றிய தகவல்களை எனக்குக் கொடுங்கள். அதன்பிறகு நான் விசாரணையைத் தொடங்குகிறேன் என்றார் ஜெயின். விசாரணைகள் எல்லாம் முடிந்ததும் திரட்டப்பட்ட ஆதாரங்கள் பற்றிய அறிக்கையின் பிரதி ஒன்றை ஜெயின் கமிஷனுக்குக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் கார்த்திகேயன் அப்படிச் செய்யவில்லை. தடா நீதிமன்றத்தில் பெட்டிஷன் ஒன்று சிபிஐ பப்ளிக் பிராசிகியூட்டரால் போடப்பட்டு, வழக்கு விவரங்களை அதிகாரப்பூர்வமற்ற நபர்களுக்குக் கொடுக்ககூடாது என்று ஆர்டர் வாங்கப்பட்டது.

அதன்மூலம் ஜெயின் கமிஷனுக்கு எந்த விவரங்களையும் கார்த்திகேயன் தரவில்லை. இதன் பின்னணியில் ஜெயின் சொன்ன ஒரு கருத்து இருக்கிறது. ‘சிறப்புப் புலனாய்வு குழு விசாரிக்காத நபர்களை எல்லாம் நான் விசாரிப்பேன்’ என்றுச் சொல்லியிருந்தார்.
தனக்குத் தகவல் கொடுக்காத ஆதங்கத்தில்தான் எல்லோருடைய அஃபிடவிட்டுகளையும் வாங்கி, விசாரித்து, இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன் விளைவாகவே குஜ்ரால் அரசு கவிழ்ந்தது. பிறகு விசாரணை செய்வதற்காக கார்த்தியேகயனை அழைத்தார். அப்போது தலைமைப் புலனாய்வு அதிகாரி என்ற முறையில் நானும் சென்றிருந்தேன்.

‘என்னிடம் எந்த ஆதார நகலையும் தரவில்லை. எனக்கு ஒத்துழைப்பும் தரவில்லை. உங்களைப் போன்ற போலீஸ் அதிகாரியை நான் பார்த்ததே இல்லை’ என்றார் ஜெயின்.

உளவுத்துறைத் தலைவர் முதல் கலைஞர் வரை, மரகதம் சந்திரசேகர் முதல் வைகோ வரை
இந்நூலில் ஏராளமானவர்கள் மீது நீங்கள் கடுமையாகக் குற்றம்சாட்டுகிறீர்கள். இதன் எதிர்வினைகள் எப்படி இருக்கும்?


அரசியல்வாதிகளோ, மற்றவர்களோ எப்படி பார்க்கிறார்கள் என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை. யாரையும் குற்றம் சாட்டவேண்டும், நடவடிக்கை எடுக்கச் செய்யவேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. சாட்சி இருந்தால் எவரையும் விடக்கூடாது. இல்லையென்றால் ஒருவரையும் தண்டிக்கக்கூடாது. இதுதான் என்னுடைய எண்ணம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com