Friday, December 14, 2012

தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் ஏற்பாடு செய்த தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் வவுனியாவில் இன்று நடைபெற்றுள்ளது. வவுனியா நகர மத்தியில் இன்று வெள்ளிக்கிழமை இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 8 கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்க் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்குபற்றியுள்ளனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தின் போது 'வெலிக்கந்தை என்ன தமிழர்களின் கொலைக்களமா? மஹர என்ன பலி பீடமா?, அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய், அரசே குடியேற்றத்தை உடன் நிறுத்து. தமிழர் நிலங்களை கையளி, அழிக்காதே அழிக்காதே தமிழர்களை அழிக்காதே, தமிழ் கல்வி சமூகத்தை திட்டமிட்டு ஒழிக்காதே, சிரட்டையில் மோதிரம் செய்வதா புனர்வாழ்வு, கே.பி.க்கு விடுதலை மாணவர்களுக்கு சிறையா?' என்ற கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை, வடக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள இனவாத நடவடிக்கைகளை உடன் நிறுத்துதல், பல்கலைக்கழகங்களுக்குள் நிலவும் கலாசார மற்றும் கல்வி சீரழிப்புக்களை நிறுத்துதல், கைதுகளை நிறுத்துதல், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் போனோரைக் கண்டறிதல், மாணவர்களை சிறையிலடைக்க வேண்டாம், காணி அபகரிப்புக்களை நிறுத்துதல், மீள்குடியேறிய மக்களை சுதந்திரமாக செயற்பட விடுதல் போன்ற 8 கோரிக்கைகளை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது


தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழரசுக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தமிழ் தேசிய ககூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், எஸ்.சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன்,ஆகியோரும்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் த.சித்தார்த்தன், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான பாஸ்கரா, புதிய ஜனநாயக மாக்சிஸ லெனின் கட்சியின் பொதுச் செயலாளர் செந்தில்வேல், நவ சமசமாஜக் கட்சியின் பிரதிநிதி ஜனகன் மற்றும் காணாமல் போனோரை கண்டறியும் குழுவின் பிரதிநிதி மகேந்திரன் உட்பட காணாமல்போனோரின் உறவினர்கள்உட்பட நூற்றுக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்..

1 comments :

Anonymous ,  December 15, 2012 at 2:02 PM  

Opportunities are very rare,make use of it.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com