Sunday, December 2, 2012

இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்களில் தமிழ் பேசும் அதிகாரிகளை நியமியுங்கள். சந்திரகுமார்.

வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் தாராளமாக நியமிக்கப்படவில்லை. இதனால் அந்தத் தூதரகங்களுக்கு தேவைகள் நிமித்தம் நாளாந்தம் வரும் தமிழர்கள் புரியாத ஒரு மொழியிலே கருமமாற்ற நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

குறிப்பாக இங்கிலாந்தை எடுத்துக் கொண்டால் அங்குள்ள தூதரகத்தில் ஒரு தமிழ்பேசும் உத்தியோகத்தர்கூட இல்லை. இந்த நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். அதேநேரம் யுத்தம் முடிவடைந்ததற்குப் பிறகு இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த செய்திகளை அந்த மக்களுக்குக் கொண்டு செல்வதற்குரிய அடிப்படையிலும் அந்தத் தூதரகங்களில் தாராளமான தமிழ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதையும் நான் இங்கே வலியுறுத்துகின்றேன் என பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் 30.11.2012 அன்று வரவு செலவுத்திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையில் தெரிவித்தார்.

உரையின் முழுவடிவம் வருமாறு

கெளரவ தவிசாளர் அவர்களே வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் மீதான வரவு செலவுத்திட்டக் குழுநிலை விவாதத்திலே கலந்து கொண்டு உரையாற்றுவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை என்பது அந்த நாட்டின் அமைதிக்கும் முன்னேற்றத்துக்கும் அடிப்படையானதாக இருக்கின்றது. ஒரு சிறப்பான வெளியுறவின் மூலம் மிகக் கடினமான நிலைமைகளையும் கடந்து விடலாம். ஆனால் இலங்கை இன்று சர்வதேச அரங்கில் அதிகம் விமர்சிக்கப்படுகின்ற ஒரு நாடாகக் கருதப்படுகின்றது. இந்தக் கருத்து நிலையில் எமது நாட்டின் வெளியுறவுத் தன்மைக்கும் பங்குண்டு. வெளியுறவு என்பது நாடுகளின் நலன்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதாக இருந்தாலும் இன்றைய நிலையில் ஒரு நாட்டில் பேணப்படும் ஜனநாயக அடிப்படைகள் முக்கியமானதாக உள்ளது. உள்நாட்டில் நிலவுகின்ற நெருக்கடி நிலைமையையும் மக்களுக்கும் அரசுக்கும் இடையில் இருக்கின்ற இடைவெளியையும் பயன்படுத்திக் கொண்டே வல்லரசு நாடுகள் தலையீடுகளை மேற்கொள்கின்றன. ஆகவே வெளியுறவுக் கொள்கைக்கு அடிப்படையாக ஜனநாயக விழுமியங்களைப் பேணுவது மிக மிக அவசியமாகும். ஜனநாயக விழுமியங்கள் நலிவடையும்போதுதான் உள்நாட்டு நெருக்கடிகள் ஏற்படுகின்றன. இந்த உள்நாட்டு நெருக்கடிகள் என்பது சர்வதேச அழுத்தங்களை உருவாக்குகின்றன.

இலங்கையில் போர் முடிந்திருந்தாலும் நெருக்கடிகள் முற்றாக நீங்கவில்லை. போர்க்கால விவகாரங்களோடுதான் சர்வதேச அழுத்த நிலைமையும் இன்று ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலையை எதிர்கொள்வதற்கும் முறியடிப்பதற்கும் வெளியுறவு நடவடிக்கைகள் முக்கியமானவையாக உள்ளன. ஆனால் இன்றைய உலகில் நாம் நினைப்பதைப்போல மிக இலகுவாக ஒரு வெளியுறவுச் செயற்பாட்டை மேற்கொண்டு விட முடியாது. நலன்களும் அதிகாரப் போட்டியும் மலிந்து போயிருக்கும் ஒரு சிக்கலான உலகில் நட்புறவை வளர்ப்பதும் சிநேகபூர்வமான வெளியுறவைப் பேணுவதும் மிக மிகக் கடினமான பணி என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். இதற்கு உள்நாட்டு நிலைமைகளை நாம் இலகுவாக்கி வைப்பதுடன் சர்வதேச நிலவரத்தை விளங்கிக் கொள்வதும் மிகமிக அவசியமானதாகும்.

குறிப்பாக வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் சம்பந்தப்பட்ட சில விடயங்களை நான் உங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன். இன்று குறிப்பாக கிட்டத்தட்ட 1.3 மில்லியன் அதாவது 13 இலட்சம் இலங்கைத் தமிழர்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் வியாபித்து வாழ்கின்றார்கள். ஆகவே இவர்களுடனான உறவைப் பேணுவதில் இலங்கைத் தூதரங்கள் எந்தளவு செயற்பாட்டைக் கொண்டிருக்கின்றன என்பது தொடர்பான எனது கருத்தை இந்த அவையின் ஊடாக நான் முன்வைக்க விரும்புகின்றேன். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஏராளமான புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நிலையில் அங்குள்ள இலங்கைத் தூதரகங்களில் தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் தாராளமாக நியமிக்கப்படவில்லை. இதனால் அந்தத் தூதரகங்களுக்கு தேவைகள் நிமித்தம் நாளாந்தம் வரும் தமிழர்கள் புரியாத ஒரு மொழியிலே கருமமாற்ற நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

குறிப்பாக இங்கிலாந்தை எடுத்துக் கொண்டால் அங்குள்ள தூதரகத்தில் ஒரு தமிழ்பேசும் உத்தியோகத்தர்கூட இல்லை. இந்த நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். அதேநேரம் யுத்தம் முடிவடைந்ததற்குப் பிறகு இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த செய்திகளை அந்த மக்களுக்குக் கொண்டு செல்வதற்குரிய அடிப்படையிலும் அந்தத் தூதரகங்களில் தாராளமான தமிழ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதையும் நான் இங்கே வலியுறுத்துகின்றேன். இன்று யுத்தம் முடிவடைந்ததற்குப் பிறகு வடக்கு கிழக்கிலே கணிசமான அளவு பொருளாதார முன்னேற்றங்களும் இயல்பு வாழ்க்கை நிலைமை மற்றும் மக்களின் வாழ்வாதார முன்னேற்றங்களும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

இது எல்லோரும் ஏற்றுக்கொண்ட உண்மையாகும். ஆனால் இந்த விடயத்தை புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் எடுத்துச்செல்வதற்கு உரிய திட்டம் தயாரிக்கப்பட்டு அது முறையாக அமுல்படுத்தப்படவும் வேண்டும். அந்த தூதரகங்களிலே தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் இல்லாத நிலையில் இதை எப்படி பேண முடியுமென்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. ஆகவே இந்த நிலைமைகளை வெளிவிவகார அமைச்சு கவனத்திற்கொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் இலங்கைத் தமிழர்கள் அங்கு பல்வேறு அகதி முகாம்களிலும் வெளியிடங்களிலும் வாழ்கின்றார்கள். தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் தங்களுடைய அலுவல்கள் நிமித்தம் அங்குள்ள இலங்கைத் துணைத் தூதுவராலயத்திற்குச் செல்கின்றார்கள். அந்த தூதுவராலயத்தில் 99 சதவீதமான வேலைகள் தமிழர்களுடன் தொடர்புடையதாக இருக்கின்றது. ஆனால் அங்கு போதிய தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் இல்லாததால் அவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றார்கள்.

இவ்விடயமாக ஏற்கெனவே நான் கெளரவ அமைச்சருக்கும் அமைச்சின் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியிருக்கிறேன். ஆகவே இவ்விடயம் கருத்திலெடுக்கப்பட வேண்டும். புலம்பெயா்ந்த நாடுகளிலே குறிப்பாக ஐரோப்பா அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் மாற்றுக் கருத்துக்கள் சென்றடைவதில்லை. அது மிகவும் கஷ்டமான பணியாக இருக்கின்றது. ஏனெனில் அங்கு செயற்படும் தமிழ் ஊடகங்களெல்லாம் கிட்டத்தட்ட ஒரே கருத்தையே - புலிகள் சார்ந்த கருத்தை - அங்கு விதைத்துக்கொண்டிருக்கின்றன. மாற்றுக் கருத்துக்களுக்கு அங்கு இடமில்லை. ஆகவே அந்த தூதரகங்களை உரிய முறையில் பலப்படுத்துவதனூடாக இந்த நிலைமையை மாற்றலாம். அதாவது புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களிடையே எமது நாட்டில் யுத்தத்திற்குப் பின்பு என்ன நிலைமை தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது? இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றம் என்ன? என்பது தொடர்பான விடயங்களைத் தெளிவுபடுத்துவதற்குரிய வேலைத்திட்டங்களைச் செயற்படுத்த வேண்டும். இது மிகவும் முக்கியமானது. குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளிலே மாற்றுக் கருத்தாளர்கள் அடக்கி வைக்கப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியும். அண்மையில்கூட பலாத்காரத்தைப் பயன்படுத்தி அல்லது மிரட்டலைப் பயன்படுத்தி அவர்கள் தடுக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலைமையில் இலங்கைத் தூதரகங்கள் உரிய முறையில் செயலாற்ற வேண்டுமென்று நான் இங்கு வலியுறுத்துகின்றேன். போதிய தமிழ் பேசும் உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கூடாகத்தான் அங்கு இந்த செயற்பாட்டைச் செயற்படுத்த முடியும்.

புலம்பெயர்ந்தந்த நாடுகளில் வாழ்பவர்கள் எல்லோரும் அரசுக்கோ அல்லது இங்கு உருவாக்கபட்டுள்ள அமைதிக்கு எதிரானவர்கள் அல்லர் என்ற நிலைமையை முதலில் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும. சில குறிப்பிட்ட விகிதத்தினர்தான் இலங்கைக்கு எதிராக செயற்படுபவர்களாக இருக்கின்றார்கள். மற்றவர்கள் இங்கு யுத்தம் முடிந்த பின்பு பல ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் ஏராளமான தமிழர்கள் தமது சொந்த உறவுகளைப் பார்ப்பதற்காகவும் சொந்த கிராமங்களைப் பார்ப்பதற்காகவும் வந்து சென்று கொண்டிருக்கின்றார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆகவே இவர்களின் மத்தியில் உண்மையில் இங்கு நடக்கும் நிலைமைகளைக் கொண்டு செல்வதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வெளி விவகார அமைச்சு இதில் உரிய நடவடிக்ககை எடுக்கவேண்டுமென்பதை நான் இங்கு வலியுறுத்துகின்றேன்.

பல்லினச் சமுகங்களுக்கான அடிப்படைகளை இலங்கை பேணுகின்றதென்ற உண்மை நிலையையும் நாங்கள் வெளிப்படுத்த வேண்டும். எமது நாட்டுக்கு ஒரு சிறப்பான ஒரு வெளியுறவுக்கொள்கை அமையுமானால் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அது மிகவும் வசதியாக இருக்கும். பிராந்திய சக்திகள் சர்வதேச சக்திகள் என விரிந்திருக்கும் அதிகாரப் போட்டியில் எமது படகை சாதூர்யமாக ஓட்டிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது என்பதை நான் அறிவேன். யாரும் கருதுவதைப் போல இது ஒரு இலகுவான விடயமல்ல. ஒரு போர் வீரன் எவ்வாறு களத்தில் புத்திசாதூர்யமாகவும் நிதானமாகவும் சாகச தன்மையுடனும் இருக்கவேண்டுமோ அத்தகைய தன்மைகளுடன்தான் இந்தப் பணியையும் மேற்கொள்ளவேண்டுமென்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே. எமது வெளிவிவகார அமைச்சர் கெளரவ ஜீ.எல். பீரிஸ் அவர்கள் இந்த முக்கியமான பணியை மேற்கொண்டுள்ளார். இந்தப் பணிக்கு மேலும் பலம் சேர்ப்பதுபோல பல்வேறு குறைபாடுகளையும் நீக்கிக்கொண்டு செல்ல வேண்டுமென்பதை நான் இங்கு வலியுறுத்துகின்றேன்.

இன்றைய நிலையில் இலங்கைக்கு நன்மையையும் தீமையையும் ஏற்படுத்தக்கூடியது வெளியுறவுதான் என்றால் அது மிகையாகாது. எனவேதான் நாங்கள் எல்லாவற்றையும்விட வெளியுறவு பற்றி அதிகம் சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்த வெளியுறவு என்பது உள்நாட்டு அரசியலுடன் தொடர்புடையதாக இருக்கின்றது.

முக்கியமாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று சர்வதேச அரங்கில் இலங்கை அரசினால் உறுதியளிக்கப்பட்டது. எனவே அரசாங்கமானது இவ்வாணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திஇ இந்த நாட்டில் நீண்டகாலமாக தீராத பிரச்சினையாக இருக்கின்ற இனப்பிரச்சினைக்கு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அதிகாரப் பகிர்வை மேற்கொண்டு ஒரு நல்ல தீர்வைக் காணும்போது நாம் எதிர்கொள்கின்ற வெளியுறவு நெருக்கடிகள் பல தணிந்துவிடும்.

ஆகவே இது குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டுமென நான் இங்கு வலியுறுத்துகின்றேன். அதேநேரம் இன்னுமொரு விடயத்தையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். நாங்கள் இந்தியாவுடன் மிகவும் நல்ல முறையில் உறவைப் பேணிவருகின்றோம். இதன் அடிப்படையில் யுத்தத்துக்குப் பிறகு வடக்குக் கிழக்கு பகுதியினுடைய மீள்கட்டமைப்புப் பணிகளுக்கு மிகவும் காத்திரமான பங்களிப்பை இந்தியா வழங்கியிருக்கின்றது. குறிப்பாக வடக்குக் கிழக்குப் பகுதிகளில் 50000 வீடுகளை அமைக்கும் வீட்டுத்திட்டமொன்றை இந்தியா நன்கொடையாக வழங்கியிருக்கின்றது. அவ்வாறே ஏனைய உட்கட்டமைப்பு வேலைகளுக்காக பாரிய உதவிகளைச் செய்திருக்கின்றது. தொடர்ந்தும் செய்துகொண்டு வருகின்றது.

எனினும் எமது கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பானது மிகப்பெரிய - தீராத - ஒரு பிரச்சினையாக இருக்கின்றது. நேற்றுக்கூட இது தொடர்பான ஆர்ப்பாட்டமொன்று வடபகுதி கடற்றொழிலாளர்களினால் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டது. எனவே இந்தியாவுடனான நட்புறவின் அடிப்படையில் இவ்விடயம் தொடர்பாக ஒரு நல்ல தீர்வை எட்டுவதற்கு வெளிவிவகார அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். ஏனெனில் இவ்விடயமானது குறிப்பாக இலங்கையின் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மிகவும் மோசமான முறையில் தினமும் பாதித்துக்கொண்டு இருக்கின்றது. ஆகவே இந்த விடயத்தில் ஒரு நல்ல இணக்கமான தீர்வை ஏற்படுத்துவதற்கு வெளிவிவகார அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென மீண்டும் வலியுறுத்திஇ சந்தர்ப்பத்துக்கு நன்றிகூறி விடைபெறுகின்றேன்.

நன்றி வணக்கம்!..

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com