Sunday, December 16, 2012

800 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்கும் ஜி.எம்.ஆர் நிறுவனம் !!

மேம்படுத்தல் திட்டத்தை இரத்து செய்து, அந்நாட்டின் சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் மாலைதீவு அரசே பொறுப்பேற்றுக்கொண்டதால் தமக்கு 800 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடாக தரவேண்டுமென ஜி.எம்.ஆர் நிறுவனம் கூறியுள்ளது. இது எமது முதலாவது உத்தேச கணக்கு தான். ஜி.எம்.ஆர் நிறுவனத்திற்கு ஏற்பட்ட லாப நஷ்ட கணக்குகளை கொண்டு இறுதி கணக்கு பின்னர் சமர்ப்பிக்கப்படும் என ஜி.எம்.ஆர் நிறுவன இயக்குனர் சித்தார்த் கபூர் கூறியுள்ளார்.

எனினும் இது உண்மையான நஷ்ட ஈட்டு தொகையை விட இருமடங்குக்குக்கு மேல் இருப்பதாக குற்றம் சுமத்தியுள்ள மாலைதீவு அரசு தாம் சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஊடாக சட்டரீதியாக கணக்காய்வினை மேற்கொள்ள போவதாக கூறியுள்ளது.

மாலைவுதீவு அரசினால் கொடுக்கப்பட கூடிய நஷ்ட ஈடு தொகையாக குறைந்தது 150 மில்லியன் டாலர்களிலிருந்து கூடியது 350 மில்லியன் டாலர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2010ம் ஆண்டு மாலைதீவின் ஆட்சியிலிருந்த அதிபர் மொஹ்மட் நஷீத்துடன் இந்திய ஜி.எம்.ஆர் நிறுவனம் மேற்கொண்ட 500 மில்லியன் டாலர் பெறுமதி வாய்ந்த விமான நிலைய புதுப்பித்தல் ஒப்பந்தத்தின் படி, தொடர்ந்து, 15 வருடங்களுக்கு விமானநிலையத்தை கொண்டு நடத்தும் பொறுப்பு ஜி.எம்.ஆர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் அன்னிய நிறுவனமொன்றை இவ்வாறு அனுமதிக்க முடியாது என தற்போதுள்ள மாலைதீவு அரசு கூறியிருந்ததுடன், அந்த ஒப்பந்தத்தை இரத்து செய்து விமான நிலையத்தை அண்மையில் தானே அதிரடியாக பொறுப்பேற்றுக்கொண்டது.

எனினும் ஜி.எம்.ஆர் நிறுவனம் சார்பில் விமான நிலையத்தில் பணி புரிந்த ஊழியர்கள் எம்முடன் இணைந்து தொடர்ந்து பணிபுரியலாம் என மாலைதீவு அரசு கூறியுள்ளது. இந்நிலையிலேயே ஜி.எம்.ஆர் நிறுவனம் இந்த ஒப்பந்தம் திடீரென இரத்து செய்யப்பட்டிருப்பதற்கு நஷ்ட ஈடு கோரியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com