Sunday, December 2, 2012

தடைகளைத் தாண்டி மீண்டும் 6 வருடங்களுக்கு ரணில் விக்கிரமசிங்க தலைவராக

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க இன்னும் 6 வருடங்களுக்கு இருப்பதற்கான யோசனை ஐக்கிய தேசிய கட்சியின் 54 ஆவது மாநாட்டில் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியின் 54 ஆவது மாநாடு கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று காலை 9 மணிக்கு ஆரமப்மானது.

மாநாட்டிற்கு 6143 பேருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பிவைக்கப்பட்டன. அதில் 5315 பேர் மாநாட்டிற்கு வருகைதந்திருந்தனர். தலைமைப்பதவியை ஆறு வருடங்களுக்கு நீடிப்பதற்கான யோசனைக்கு 4978 பேர் ஆதரவாகவும் 337 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர்.


கட்சி தலைமையின் பதவிகாலத்தை மேலும் 6 வருடங்களுக்கு நீடிப்பதற்கான யோசனையை ஜனாதிபதி சட்டத்தரணியும் எம்.பியுமான விஜேதாஸ ராஜபக்ஷ முன்மொழிந்தார். அதனை அஜித் பி.பெரேரா எம்.பி வழிமொழிந்தார்.

இதேநேரம் கட்சித் தலைவரின் ஆறு வருட பதவிக் காலத்தை இரத்துச் செய்யுமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தொழிற்சங்கங்கள், மகளிர் சங்கங்கள் மற்றும் இளைஞர் சங்கங்கள் கட்சித் தலைவரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தாகவும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் கபீர் ஹாசிம், ரஞ்சித் அலுவிஹார உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து பத விக் காலத்தை ஆறு வருடங்களுக்கு நீடி க்கும் முன்மொழிவை கொண்டுவர வேண் டாமென கேட்டுக்கொண்ட போதிலும் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட ஒன்றை தம்மால் அகற்ற முடியாதென ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாகக் கூறியிருந்தாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

அதே நேரம் கட்சியின் முன்னாள் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டியிருந்தனராம்.

மேலும் ஆறு வருடங்களுக்கு கட்சித் தலைமையின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் அதற்கு எதிராக எழுந்து நிற்பதற்கு ஐ. தே. க. பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஆயத்தமாக உள்ளனர் என ஊடகங்கள் கட்டியம் கூறியிருந்தபோதும் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சஜித் பிரேமதாசவுடன் மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாகவும் கசிந்திருந்த தகவல்களை அடுத்து ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் 1500 இற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com