Friday, November 16, 2012

ஆரோக்கியமாக வாழ உதவும் ஆப்பிள்

ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. ஆனால் அவற்றை பின்பற்றுவதுதான் சற்று கடினம்.

நாம் அன்றாடம் உணவை உட்கொள்ளும் பொழுது சில நேரங்களில் புளித்த ஏப்பம், வயிறு ஊதல், மலச்சிக்கல் போன்ற பல தொல்லைகள் உண்டாகும். இந்த தொல்லைகளிலிருந்து நம்மை காத்துக்கொள்ள மருந்துகளையும், செரிமான டானிக்களையும் உட்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பெரும்பாலானோர் உண்ணும் உணவை செரிப்பதற்கும், போதைக்கும் குறைந்தளவு மதுவை அருந்துவதுண்டு.

இவ்வாறு சிறிய அளவில் ஆரம்பிக்கும் மதுபோதை பழக்கம் நாட்கள் செல்லச் செல்ல கடும் போதைக்கு அடிமையாகும் வாய்ப்புக்கு ஆளாகின்றனர். இது போன்ற மது போதை அடிமைகளை மீட்கவும், அன்றாடம் உடல் ஆரோக்கியம் மேம்படவும் நம் உண்ணும் உணவிலுள்ள நச்சுகளை நீக்கவும், இரத்தத்தில் கலந்துள்ள நுண்கிருமிகளை நீக்கி இரத்தத்தை சுத்தம் செய்யவும் பழங்களை உண்ணுவது நல்லது. இவற்றில் முதலிடத்தை பிடிப்பவை ஆப்பிள் பழங்களே.

பைரஸ் மேலஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட போமேசியே குடும்பத்தைச் சார்ந்த ஆப்பிள் மரங்கள் குளிர்ச்சியான பிரதேசங்களில் ஏராளமாக விளைகின்றன. கருஞ்சிவப்பு நிறத்தோலை உடைய ஆப்பிள் பழங்களே உண்ணத் தகுந்த பழங்களாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆப்பிளில் நீர்ச்சத்து, புரதச்சத்து, குளோரோபில், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இவை செரிமானப் பாதையில் ஏற்படும் என்சைம்கள் குறைபாட்டை சீர் செய்வதுடன் பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்கின்றன.

மது அருந்துபவர்களுக்கு இரத்தத்தில் கலந்துள்ள ஆல்கஹாலின் அளவை குறைக்க ஆப்பிள் பெருமளவு உதவுகிறது. விஸ்கி எனப்படும் மதுவிலுள்ள பல சத்துகள் ஆப்பிளில் காணப்படுவதால் தொடர்ந்து ஆப்பிளை சாப்பிட்டு வர விஸ்கி அருந்தும் எண்ணம் கட்டுப்படும்.

தோல் நீக்காத ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறு இரத்தத்தைச் சுத்தம் செய்து இரத்தத்தில் கலந்துள்ள அதிக அமிலத்தன்மையை நடுநிலைப்படுத்துகிறது. வயிறு தொல்லை உள்ள பொழுது இனிப்பு சேர்க்காத ஆப்பிள் பழச்சாற்றை சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் கார்பானிக் அமிலமாக மாற்றப்பட்டு நெஞ்சுக்கரிப்பு கட்டுப்படுகிறது. செரிமான சக்தி அதிகரிக்கிறது.

ஆப்பிளிலுள்ள மாலிக் அமிலம் மலச்சிக்கலை நீக்கி குடற்பாதையிலுள்ள நுண்கிருமிகளை கொல்கிறது. ஆப்பிளை நன்கு மென்று சாப்பிட வாய் மற்றும் தொண்டைப்பகுதிகளிலுள்ள நுண்கிருமிகள் நீங்குகின்றன. வயதானவர்களுக்கு ஆப்பிள் மேற்தோலானது செரிக்கக் கடினமாக இருக்குமென்பதால் மேற்தோலை நீக்கி உட்கொள்வது நல்லது.

ஆப்பிளை அன்றாடம் உட்கொண்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டாம் என்பது ஆங்கில பழமொழி. நீர்ச்சத்து ஏராளமாக உள்ள ஆப்பிள் பழத்தை கோடைக்காலத்தில் நன்கு உட்கொள்ளலாம்.

இதில் ஏராளமான மாவுச்சத்து நிறைந்துள்ளதால் சர்க்கரை நோயாளிகள் தங்கள் சரிவிகித சமஉணவுக்கு ஏற்றவாறு மருத்துவரின் ஆலோசனையின் படி ஒன்று அல்லது இரண்டு கீற்றுகள் ஆப்பிளை எடுத்துக்கொள்ளலாம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com