அடை மழையினால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தற்போது பெய்து வரும் அடை மழையினால் நாட்டின் சில பகுதிகளில் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மண்சரிவின் காரணமாக கஹவத்த முஸ்லிம் வித்தியாலயம் மற்றும் வீடுகள் சிலவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் மின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக கஹவத்தை பிரதேச செயலாளர் சாமர பபுனு ஆராச்சி தெரிவித்தார். பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாக இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தங்காலை கிரமஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக 2 முதலைகள் ரெக்கவ பிரதேசத்திற்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த முதலைகளை புத்தள வனப்பிரதேசத்தில் விடிவிப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தன.
கொத்மலை லெவன்டன் தோட்டத்தின் மேல் பிரிவில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மலையடிவாரத்தில் வசித்த 52 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. நிலைமையை ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பி.இராதகிருஷ்ணன் உள்ளிட்ட குழுவினர் இப்பிரதேசத்திற்கு விஜயம் செய்தனர்.
நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள 10 தோட்ட குடியிருப்புக்கள் நேற்று இரவு பெய்த அடை மழையினால் நீரில் மூழ்கியுள்ளன. காசல் ரீ நீர்த்தேக்கத்திற்கு அருகிலேயே இவ்வீடுகள் அமைந்துள்ளன. பாதிக்கப்பட்டுள்ள 10 குடும்பங்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் விமல சுரேந்திர நீர்த்தேக்கமும் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment