Wednesday, November 21, 2012

மும்பாய் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி தூக்கிலிடப்பட்டான்.

2008 ஆம் ஆண்டு மும்பாய் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட 10 பயங்கரவாதிகளில் உயிர் தப்பிய ஒரேயொரு பயங்கரவாதியான அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டார். இந்திய நேரப்படி  இன்று காலை 7.30 இற்கு இவர் தூக்கிலிடப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

2008 ஆம் ஆண்டு மும்பாய் நகர மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். லக்ஸாரே தைபா பயங்கரவாத அமைப்பின் 10 உறுப்பினர்கள் இத்தாக்குதலை நடத்தினர். இதில் 9 பேர் இந்திய பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட தாக்குதலில்  கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் உயிர் பிழைத்த ஒரேயொரு பயங்கரவாதியான அஜிமல் கசாப்பிற்கு கடந்த 29 ஆம் திகதி மரணதண்டனை விதியாக்கப்பட்டது. தண்டனையை குறைக்குமாறு மகாராஸ்டர் ஆளுநரிடம் கசாப் வேண்டுகோள் விடுத்த போதிலும் நேற்று அது நிராகரிக்கப்பட்டது.


சிறையிலேயே அடக்கம்

தூக்கிலிடப்பட்ட கஸாப்பின் உடல் அந்த சிறை வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டதாக மகாராஷ்டிர மாநில முதல்வர் பிரித்விராஜ் செளஹான் தெரிவித்தார். மும்பை ஆர்தர் சாலை சிறையில் வைக்கப்பட்டிருந்த கஸாப், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் புனே சிறைக்கு மாற்றப்பட்டார்.

கஸாப்பின் விருப்பப்படி, அவர் தூக்கிலிடப்படுவது குறித்து பாகிஸ்தானில் உள்ள அவரது தாயாருக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தான் தூக்கிலிடப்படுவது குறித்து கடந்த 12-ம் தேதியே கஸாப்பு்ககுத் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கஸாப்பின் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் நபரிடம் கூட யாருக்கு தூக்கு என்பது ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்ததாகவும், ஒரு சில நிமிடங்களுக்கு முன்புதான் கஸாப்தான் தூக்கிலிடப்படுகிறார் என்பது தெரிவிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கஸாப்பின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, நவம்பர் 7-ம் தேதியன்று கஸாப்பைத் தூக்கிலிடுவதற்கான உத்தரவில் தான் கையெழுத்திட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார்.
மிகவும் முக்கியமானது என்பதால் இந்த விடயத்தை மிகவும் ரகசியமாக வைத்திருக்க வேண்டியிருந்தது என்று ஷிண்டே தெரிவித்தார்.

கண்டனம்

ஆனால், இதை ரகசியமாக நிறைவேற்றியது குறித்து ஆட்சேபங்களும் எழுந்துள்ளன. அம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் இந்தியப் பிரிவு தலைவர் வி.கே. சஷிகுமார், கஸாப்பின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட வேகம், ரகசியமாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கஸாப்பை தூக்கிலிடுவது தொடர்பாக அவரது குடும்பத்தாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் தெரிவிக்கப்படாதது, தூக்கு தண்டனை தொடர்பான சர்வதேச நடைமுறைகளுக்கு எதிரானது என்று சஷிகுமார் குறிப்பிட்டுள்ளார்.

கஸாப்பின் குற்றம் கொடூரமானது என்பதை உணர்ந்துள்ள அதே நேரத்தில், தூக்கு தண்டனை என்பது மனிதாபிமானமற்ற, கொடூரமான செயல் என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் கண்டித்துள்ளது.

மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டது. பாகிஸ்தானை மையமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொயிபா இயக்கம்தான் அந்தத் தாக்குதலை நடத்தியதாக இந்தியா குற்றம் சாட்டியது.

மும்பை தாக்குதல் தொடர்பாக தங்களுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என முதலில் மறுத்த பாகிஸ்தான், அந்தத் தாக்குதலின் ஒரு பகுதி பாகிஸ்தான் மண்ணில் திட்டமிடப்பட்டது என்பதையும், கஸாப் பாகிஸ்தானிய பிரஜை என்பதையும் பின்னர் ஒப்புக்கொண்டது.
இந் நிலையில், கஸாப் தூக்கிலிடப்படுவது குறித்த தகவலை முறைப்படி பாகிஸ்தான் அரசுக்குத் தெரிவிக்க முயன்ற போதிலும் அதுபற்றிய தகவல்களை அது ஏற்க மறுத்துவிட்டது. அதையடுத்து, கூரியர் மூலமும், பின்னர் ஃபேக்ஸ் மூலமும் பாகிஸ்தான் தூதரகம் வழியாக தகவல் தெரிவிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.


பாகிஸ்தான் கருத்து
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மெளஸம் அலி கான், தீவிரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் பாகிஸ்தான் அதைக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக, இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயல்பட பாகிஸ்தான் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கஸாப் தூக்கிலிடப்படுவது தொடர்பாக இந்தியா அளித்த தகவலை வாங்க மறுத்ததாக வெளியான செய்திகளை அவர் மறுத்தார். செவ்வாய்க்கிழமையன்று மாலை, இந்தியத் தூதரகத்திலிருந்து துணைத் தூதர் வெளியுறவு அமைச்சகத்துக்கு வந்து அதுதொடர்பான கடிதத்தை அளித்ததாகவும், வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் அதைப் பெற்றுக் கொண்டு அதற்கான ஏற்பளிப்பையும் அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பள்ளி மாணவியைக் கற்பழித்துக் கொலை செய்ததாக, கடந்த 2004-ம் ஆண்டு கொல்கத்தாவில் ஒருவர் தூக்கிலிடப்பட்ட பிறகு, இப்போதுதான் அடுத்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2008-ல் தாக்குதல் நடத்தியபோது, கஸாப்பின் வயது 21. குறைந்த கல்வியறிவே கொண்ட கஸாப், தனது இளமைப் பருவத்தில் கூலித் தொழிலில் மற்றும் சிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். மும்பை தாக்குதலில் ஈடுபடுத்தப்படுவதற்காக, தனியாக ஒரு முகாமில் அவருக்கு லஷ்கர்-இ-தொயிபா அமைப்பினால் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது
லஷ்கர் கருத்து

இதனிடையே, கஸாப் தூக்கிலிடப்பட்டது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள லஷ்கர்-இ-தொயிபா அமைப்பு கஸாப்பை கதாநாயகன் என்று புகழாரம் சூட்டி, அவரது பாதையில் மேலும் பல போராளிகள் செல்வதற்கு அவர் உந்துசக்தியாக விளங்குவார் என்று கூறியுள்ளதாக, பெயர் குறிப்பிடாத லஷ்கர்-இ-தொயிபா தலைவர் ஒருவரை மேற்கோள் காட்டி ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதே நேரத்தில், கஸாப் தூக்கிலிடப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக பாகிஸ்தான் தாலிபான் தீவிரவாத அமைப்பின் பேச்சாளர் இஷனுல்லா இஷன் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com