Monday, October 15, 2012

கட்டாயமாக விசாரிக்கப்படவேண்டி வேண்டிய போர்க்குற்றவாளிகள்

போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதாக, தடுப்பு காவலில் இருக்கும் முக்கியமான 60 புலி இயக்க உறுப்பினர்கள் மீது குற்றஞ்சாட்டுவதற்கு தெளிவான ஆதாரங்கள் இருப்பதாக சட்ட ஆலோசனைக்குழு அறிவித்துள்ளது. இவர்களுக்கு எதிராக அடுத்த சில வாரங்களில் வழக்குத் தாக்குதல் செய்யப்படும் எனவும் இந்தக்குழு தெரிவித்துள்ளது.

இந்த சட்ட ஆலோசனைக்குழுவானது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகள், வழக்கு விசாரணையின் இறுதி நடவடிக்கை மற்றும் அடுத்தகட்ட செயற்பாடு என்பவை தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக இலங்கை அரசால் நியமிக்கப்பட்டது.

2009 ஆண்டு மே மாதம் முடிவுற்ற வன்னி இறுதி யுத்தத்தின் போது மாத்திரமே இலங்கையில் போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதாக இலங்கையின் மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக பிரச்சாரங்கள் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2006 ஆண்டுக்கும் 2009 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கை அரச படைகளுக்கும் புலிகளுக்கும் நிகழ்ந்தது மாத்திரமே போர் என்று வரையறுப்பவர்களும், சடுதியான புலிகளின் அழிவை ஏற்றுக்கொள்ள இயலாதவர்களுமே அரசுக்கு எதிரான போர்க்குற்ற பிரச்சாரங்களின் பின்னணியில் இருப்பவர்கள்.

இந்த பிரச்சாரங்களுக்கெதிராக, தமது படைகளால் போர்க்குற்றங்கள் எதுவும் நிகழ்த்தப்படவில்லை என மறுப்பறிக்கைகள் விடுவதிலே இலங்கை அரசு கவனத்தை செலுத்தி வந்துள்ளது. மூன்று வருடத்தின் பின்னர் இப்போதுதான் ஏதோ விழித்தெழுந்து, தடுப்புக் காவலில் எஞ்சி இருக்கும் புலி உறுப்பினர்களில் போர்க்குற்றம் புரிந்தவர்களும் இருக்கிறார்கள் என்ற செய்தியை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.

தென்னிலங்கையிலுள்ள எதிர்கட்சி பிரமுகர்களை ஆளும் கட்சிக்கு தாவப்பண்ணும் அரசியல் பாணியிலே, சிறைக்கைதிகளாக இருக்கும் புலிகளையும், புலிப்பிரமுகர்களையும் அணுகலாம் என்ற போக்கே, புலிகளுடனான போர் முடிவுற்ற பின்னரான மகிந்த அரசின் செயற்பாடுகளில் தெரிந்தது. இதற்காக இந்த அரசு கே.பி., தயா மாஸ்டர் போன்றவர்களுக்கு அரைச்சுதந்திரம் வழங்கியும், தடுப்புக் காவலில் இருந்த பல ஆயிரக்கணக்கான புலிகளுக்கு (இக்கைதிகளில் போர்க்குற்றம் புரிந்தவர்களும் இருக்கலாம்) எந்தவித விசாரணையுமின்றி மன்னிப்பு அளித்த விடுதலை செய்தும், புலம்பெயர் புலிப்பிரமுகர்களை விசேடமாக அரச செலவில் இலங்கைக்கு வரவழைத்து இரகசிய சந்திப்புகளையும் நிகழ்த்தியது.

மகிந்த அரசின் இந்த அணுகுமுறை, ஜனநாயகச் சூழலில் புலிகளின் அனைத்து மனிதவிரோத செயற்பாடுகளும் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படுமென எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு விசனத்தை ஏற்படுத்தியது. ஆனால் கடந்த யூன் மாதம் இடம்பெற்ற வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற தடுப்புக் காவலிலுள்ள புலிகளுடனான மோதல்களின் பின்னரே இலங்கை அரசு, தடுப்புக் காவலில் எஞ்சியுள்ள புலி உறுப்பினர்கள் மீது வழக்குத் தாக்குதல் செய்யும் யோசனையை வெளியிட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம், கைத்தொலைபேசிகள் என்பவற்றை பயன்படுத்தி வெளிநாடுகளிலுள்ள புலி ஆதரவாளர்களுடன் தொடர்புகளை பேணியது மற்றும் அவர்களின் ஆலோசனைக்கமைய செயற்பட்டது குறித்த ஆதாரங்களை அரசின் பயங்கரவாத புலனாய்வுப்பிரிவு கண்டறிந்துள்ளது.

27.07.1975 யாழ்ப்பாணம் மேயர் துரையப்பாவை சுட்டுக்கொன்றதிலிருந்து புலிகள் பகிரங்கமாக தமது அரசியல் கொலையை ஆரம்பித்தனர். பின்னர் 03.01.1982 இல் யாழ்ப்பாணம் சித்திரா அச்சகத்தில் வைத்து சுந்தரம் கொலை செய்யப்பட்டதிலிருந்து , புலிகள் தமது அரசியல் கொலையை சக போராளி இயக்கங்களுக்கு எதிராகவும் விஸ்தரித்தனர்.

30.11.1984 இல் வெலிஓயா பிரதேசத்தில் அமைந்திருந்த டொலர் மற்றும் கென்ற் பண்ணைகளில் வைத்து 62 ஆயுதபாணியற்ற சிங்கள இனத்தவர்களை கொன்றதிலிருந்து ஏனைய இனங்கள் மீதான கொலைகள் புலிகளால் தொடங்கப்பட்டது.

இலங்கை அரசுடனான அல்லது இலங்கை அரச படையுடனான யுத்தம் என்பதற்கு அப்பால் சென்று, புலிகளால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான அரசியல் கொலைகளையும் ஆயுதபாணியற்ற சிங்கள, முஸ்லிம் இனத்தவர்களது மீதான கொலைகளையும் 2009 ஆண்டில் புலிகளை தோற்கடித்த பின்னர் எப்படி மறந்து, மன்னித்து விடுவது?

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com