சிரியாவில் உள்நாட்டு போர் உச்சகட்டம்: விமானப் படை தளத்தை புரட்சிப்படை கைப்பற்றியது.
சிரியாவில் பஷர் அல்-ஆசாத் தலைமையின் கீழ் அதிபர் ஆட்சி நடந்து வருகிறது. ரஷ்யாவின் நேச நாடாக இருக்கும் சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அந்நாட்டு மக்களில் ஒரு பிரிவினர் ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள்.
இந்த புரட்சிப் படையினர் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்துவதும், பதிலுக்கு ராணுவத்தினர் மீது புரட்சிப் படையினர் எதிர் தாக்குதல் நடத்துவதும் வாடிக்கையாகிவிட்டது.
புரட்சிப் படையினர் பதுங்கியுள்ள இடங்களின் மீது விமானப் படையினர் அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். விமானப்படையின் பலத்தை குறைத்துவிட்டால், அதிபரின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என திட்டமிட்டு புரட்சிப்படையினரும் விமானப்படை தளங்களை குறி வைத்து தாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் சிரியாவின் விமானப்படை தளத்தின் மீது கடந்த வெள்ளிக்கிழமை திடீர் தாக்குதல் நடத்தி கைப்பற்றினர். புரட்சிப் படையினர் அங்கிருந்த 16 விமானப்படை வீரர்களையும் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் சிரியா முழுவதும் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் 74 பொதுமக்கள், 29 ராணுவத்தினர், 29 புரட்சிப்படையினர் என 125 பேர் கொல்லப்பட்டனர். அல்பு கமால் பகுதியில் உள்ள மிக முக்கியமான விமானப்படை தளத்தை கைப்பற்றிய புரட்சிக்காரர்கள் அங்கிருந்த ஏவுகனைகளையும் தங்கள் வசம் ஆக்கிக் கொண்டனர்.
இதன் மூலம் சிரியா அரசின் விமான தாக்குதல் முடிவுக்கு வரும் என இங்கிலாந்தைச் சேர்ந்த போர் கண்காணிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விமானப்படை தளத்திலிருந்து பறந்த போர் விமானங்கள் தான் கடந்த வாரம் 60ஆயிரம் மக்கள் வாழும் குடியிருப்பு பகுதியில் குண்டுகளை வீசி தாக்கியது. இந்த தாக்குதலில் 5 பேர் உயிர் இழந்தனர்.
இப்போது இதற்கு பழிதீர்க்கும் வகையில் விமானப்படை தளத்தை புரட்சி படையினர் தாக்கி கைப்பற்றிவிட்டனர். இது சிரியா அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
0 comments :
Post a Comment