ஐ.ம.சு.கூட்டமைப்பு 59% வாக்குகளை பெற்று வெற்றி பெறும் - களனி பல்கலைக்கழகம்
எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 59% வாக்குகளை பெற்று வெற்றி பெறுமென கருத்து கணிப்பொன்று தெரிவித்துள்ளது. களனி பல்கலைக் கழக தகவல் ஊடக பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பிலேயே இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, களனி பல்கலைக்கழகத்தின் தகவல் ஊடக பிரிவின் தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
வடமத்திய, கிழக்கு, மற்றும் சப்ரகமுவ ஆகிய 3 மாகாணங்களிலும் மொத்த வாக்குகளை எடுத்துக் கொண்டால், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 59% வாக்குகளை பெற்று வெற்றி பெறும் எனவும், ஐக்கிய தேசிய கட்சிக்கு 15 வீதமான வாக்குகளே கிடைக்கும் எனவும், மக்கள் விடுதலை முன்னணிக்கு 2 வீதமான வாக்குகளும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு 8 வீதமான வாக்குகளும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு 10 வீதமான வாக்குகளும் கிடைக்கும். 4 வீதமானோர் வாக்களிக்க மாட்டார்கள் என எமது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது என களனி பல்கலைக்கழகத்தின் தகவல் ஊடக பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை நாட்டின் அரசியல் தலைவர்களில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புகழிலும் பிரபல்யத்திலும் முன்னிலை வகிப்பதாக அவ்வாய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக, இலங்கை மன்ற கல்லூரியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
நாட்டின் புகழ்பெற்ற அரசியல்வாதிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில் ஜனாதிபதியே முன்னிலையில் உள்ளார் எனவும், அவர் 60 வீதமான வாக்குகளை பெற்றுள்ளார் எனவும், ரணில் விக்ரமசிங்க 10 வீதமான வாக்குகளையும், ஒரு சில மாவட்டங்களில் சஜித் பிரேமதாசவிற்கு 9 முதல் 12 வீதமான வாக்குகள் கிடைத்துள்ளன எனவும், சரத் பொன்சேக்காவிற்கு 8 முதல் 9 வீதமான வாக்குகள் இக்கருத்து கணிப்பின் மூலம் கிடைத்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment